January 4, 2019

இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்

By Tamil

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-19

சுவாமி பாஸ்கரானந்தர்

இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்-

ஒரு நல்ல இந்து குடும்பத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை போன்ற உறவினர்களுடன் வளரும் குழந்தைகளுக்குப் பல அனுகூலங்கள் உண்டு. அம்மாதிரி வளரும் குழந்தைகளுக்குச் சிறந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். காப்பகங்களில் விடப்படும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள். எனவே வீட்டில் பெரியவர்களுடன் வளரும் குழந்தைகள் அதிஷ்டசாலிகள்.. காப்பகங்களில் குழந்தைகளுக்கு அத்தகைய அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அரிது. எனவே வீட்டில் வளரும் குழந்தைகளின் நன்றாக இருக்கும். இத்துடன் தாத்தா பாட்டிகளுடன் பல கதைகள் கேட்பதால் பல உயர்ந்த பாரம்பரிய கருத்துகளையும் அறிந்து கொள்ள முடியும். பெரிய குடும்பத்தில் வளரும் குழந்தைக்கு மற்றவர்களோடு அனுசரித்துக் கொண்டு போகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய குழந்தைக்குத் தன்னிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கு இருக்கும். பிறருக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மை ஏற்படும். இத்தகைய பயிற்சி குழந்தைப் பருவத்திலும் நன்மை பயக்கும். அத்தோடு பெரியவனான பிறகும் பல பயன்களைத் தரும்.ஆனால் நகரத்தில் வாழும் சிறிய குடும்பங்களின் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க வேலைக்குச் செல்லும் தாய் தந்தையைக் கொண்ட குழந்தைகளுக்கு இத்தகைய வாய்ப்புகளே கிடையாது.

இந்த சமூகம் வயதில மூத்தவர்களை மதித்து கௌரவிக்கிறது. பெரியவர்களிடம் மரியாதையுடனும் கீழ்படிதலுடனும் இருக்குமாறு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். பெற்றோரையும் பெரியவர்களையும் எதிர்த்துப் பேசும் குழந்தைகளின்போக்கை நாகரிகமற்றதாகக் கருதுவார்கள்.அத்தகைய குழந்தைகளின் நடத்தையால் குடும்பம் முழுவதிற்கும் அவமானம் ஏற்படும்.

இந்து மத சம்பந்தமான புராண . இதிகாசங்களில் உள்ள கதைகளைச் சிறுவர்களுக்குக் கூறுவார்கள். அதனால் வீரமும், பண்பும்வாய்ந்த சீரிய கதாநாயகர்களைத் தாங்கள் பின்பற்றுவதற்கு ஏற்புடையவர்களாக கருதுவார்கள். எனவே ராமன், பிரஹலாதன், துருவன்,நசிகேதன்,சீதை,சாவித்திரி, போன்ற பலவேறுபட்ட சீரிய மனிதர்கள் , பெண்மணிகள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் படித்து நேர்மை, ஆன்மீகம்,பண்பு போன்ற சிறந்த நெறிகளைப் பின்பற்றுவார்கள். இதைத்தவிர இந்துப் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை நல்ல வழியில் அழைத்து ச் செல்லப் பாடுபடுவார்கள் .

பெற்றோர்கள் நல்லவர்களாகவும் , பண்பானவர்களாகவும் இல்லாமல் போனால் , குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சமூகத்தின் சிறந்த ஒழுக்கமும் , பண்பும் நிறைந்த அங்கத்தினர்களாக வளர்வார்கள் என்பது வெறும் பகற்கனவாகிவிடும். அன்பையும் ஆதரவையும் பொழியும் சுற்றத்தார்களாலும், உறவினர்களாலும் எப்பொழுதும் சூழ்ந்து வாழ நேரிடுவதால் குழந்தைகள் தவறு செய்வது பெரும்பாலும் குறைந்து விடுகிறது.தவறு செய்யும் குழந்தைகளைக் கண்டித்தும், தண்டித்தும், நல்வழிப்படுத்துவார்களேயன்றி தூற்றி துரத்தி விட மாட்டார்கள்.

இந்து சமூகத்தில் பெண்களின் தற்கால நிலை-

இந்துப் பெண் தாய்மை அடைவது பெரும் பேறாகக் கருதப்படுகிறது. “மாத்ருதேவோ பவ” என்று தைத்திரீய உபநிடதம் கற்பிக்கிறது.தாயையும், தாய்நாட்டையும் சுவர்க்கத்தையும் விட பெரிதாக இந்து பாரம்பரியம் பேசுகிறது. இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் ” வேதத்தில் சிறந்த பத்து பிராமணப் புரோகிதர்களுக்கு ஒப்புவமையாகத் தந்தையைக் கூறினால் ஒரு தாய் இதே போன்ற பத்து தகப்பனார்களுக்கு ஈடு ஆவாள் அல்லது அனைத்து உலகிலுள்ளோர்க்குமே ஈடாவாள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் கடவுளையே தெய்வீகத் தாயாகக் காண்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக தாய், தந்தை ஆகிய இருவரது ஆசிகளையும் குழந்தைகள் வேண்டுகிறார்கள். தாயின் அன்புதான் சுயநலமற்ற அன்பாகக் கருதப்படுகிறது. ஒரு தாய் தன் குழந்தையை வளர்க்கும் போது அவள் குழந்தையின் நலத்தை மட்டுமே விரும்புகிறாள். அதற்குப் பிரதிபலனாக எதையும் எதிர்பார்ப்பது இல்லை. இதன் காரணமாகவே உலகில் காணப்படும் அனைத்து விதமான அன்பைக் காட்டிலும் தாயன்பே மிகவும் மேலானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய தூய அன்பின் காரணமாகவே இந்துத்தாய் குழந்தைகளால் போற்றப்படுகிறாள். கற்பு , தூய்மை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றின் முழு உருவமே அவள்.

தாயாருக்கோ, சகோதரிக்கோ இழைக்கப்படும் எந்த ஒரு அவமதிப்பையும் இந்து சமூகம் பொறுத்துக்கொள்ளாது. ஓர் இந்துத் தாய்க்கோ அல்லது ஓர் இந்துப் பெண்ணுக்கோ அத்துமீறி தீங்கிழைக்கப்பட்டால் திங்கிழைத்தவர்களைத் தண்டிக்க இந்தியாவில் ஒரு கலகமே தோன்றி விடும். ஓர் இந்துத்தாயின் சமூக அந்தஸ்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்து உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். பண்டைய இந்தியாவில் இந்துப் பெண்கள் தங்கள் முகங்களைத் திரையிட்டு மறைத்துக் கொண்டதில்லை. சமூகத்தில் அவர்கள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். இந்தியாவின் மீது திரும்பத் திரும்ப அந்நியர்கள் வந்து தாக்கியதால் பல நூற்றாண்டுகளில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இத்தகைய போராட்டங்களாலும் , இந்தியா அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததாலும் இந்துப் பெண்களின் கற்பிற்கும் , கௌரவத்திற்கும் களங்கம் ஏற்பட்டது. இம்மாதிரியான அநாகரீகச் செயல்கள் அடிக்கடி நடைபெற்றன. கொடுங்கோலர்களது கையில் சிக்கி அல்லலும் , அவமானமும் படுவதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்று கருதிய இந்துப் பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதுபற்றிய பல வரலாற்று சம்பங்களை வடஇந்தியாவில் காணலாம்.இக்காரணங்களால் இந்துப் பெண்களைக் காக்கும் பொறுப்பு இந்து சமூகத்திற்கு அதிகமாயிற்று. விளைவு இந்துப் பெண்களின் சுதந்திரம் சுருங்கிவிட்டது. முகத்திரையிடுதல்,சிறுவயதில் திருமணம் செய்வித்தல்,உடன்கட்டை ஏறுதல்,வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடத்தல் போன்றவை அதிகரித்தது.தங்களை அந்நியரின் பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகத்திரையைப் பயன்படுத்த த் தொடங்கினார்கள். வீட்டைத்தாண்டி வெளியே சென்று முறைப்படி கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டிலேயே தங்கிக் கொண்டு எந்த அளவிற்குக் கிடைத்ததோ அந்த அளவிற்கே கல்வியறிவும் கிடைத்தது. சிலருக்கு அதுவும் இல்லாது போயிற்று. சமூக நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்பது என்பது வெகுவாகக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இவை அனைத்திற்கும் காரணம் அன்னியர் படையெடுப்பாகும்.ஆரிய கலாச்சாரம் உச்சத்தில் இருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டதற்கு காரணம் அன்னியர் படையெடுப்பாகும்.

19-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் ஆங்கிலேயரது ஆட்சியில் சில மாற்றங்கள் தலைகாட்ட தொடங்கின. இந்து சமுதாயத்தில் காணப்படும் குறைகளைக் களைய பல சீர்திருத்த இயக்கங்கள்“ துவக்கப்பட்டன. இந்துக்களை பிற மதங்களுக்கு மாற்றச்செய்யும் முயற்சிகளைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராஜாராம் மோகன்ராய் என்பவர் மற்ற விஷயங்களைக் காட்டிலும் பெண்களுக்கு க் கல்வியறிவும் , சமூகத்தில் சுதந்திரமாக நடந்துகொள்ளும் உரிமையும் அளிக்கப்படவேண்டும் என்று விரும்பினார். அவர் பிரம்ம சமாஜம்” என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அது மத சார்புடையது. அது பெண்களுக்கு பல கல்வி கூடங்களைத் துவங்கியது.

சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரும் (1824-1883) ”ஆரிய சமாஜம்” என்ற ஒர் இயக்கத்தைத் தோற்றுவித்து பெண்களுக்கு கல்வியளிக்கும் பணியையும் மேற்கொண்டார். ராம கிருஷ்ண மிஷன் ” என்ற இயக்கத்தைத் தோற்றுவித்த சுவாமி விவேகானந்தரும் பெண்களின் நிலை சீர்படாதவரை உலக நன்மைக்கே இடமில்லை என்று கூறினார்.ஒரு பறவை தன்னுடைய ஒரு பக்கத்து இறக்கையை மட்டும் உபயோகித்துப் பறக்க முடியாது. என்று எடுத்துரைத்தார். ராமகிருஷ்ண மிஷன் ” ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சிறப்பான கல்வியை அளிப்பதற்காக முன்மாதிரியான பல கல்வி நிறுவனங்களை இந்தியாவில் நிறுவியுள்ளது.

1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. பிரம்ம சமாஜம் , ஆரிய சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் முயற்சியாலும் அரசியல் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் பெண்களின் நிலையில் மாபெரும் முன்னேற்றம் ஏற்படத்தொடங்கியது. இன்றைய இந்தியாவில் பெண்கள் போதுமான அளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆண்களைப் போன்றே பெண்களும் கல்வி கற்கவும் பல வகையான மனித வளர்ச்சிக்கான பாதையில் செல்லவும் சம வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.