January 3, 2019

ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம்

By Tamil

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-23

சுவாமி பாஸ்கரானந்தர்

ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம்

உருவக்கடவுளும், அருவக்கடவுளும் எந்த வகையிலும் வேறுபாடுகள் கொண்டவை அல்ல. ஒரேக் கடவுளே எல்லையற்றதாக கருதும் போது நிர்குணப் பிரம்மமாகவும் , வரையறைக்குட்பட்டதாகக் கருதும் போது சகுணப் பிரம்மமாகவும் தெரிய வருகிறது.

இந்து மதத்தில் உருவக்கடவுள் சகுணப்பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் மனிதன் இடம் , காலம், காரணம் ஆகியவற்றினால் கட்டுப்பட்டவன். அவனது கணிப்பின் படி ஈஸ்வரன் அல்லது சகுணப் பிரம்மம் தான் இவ்வுலகத்தைப் படைத்தது.அவன் எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன்.அவன் தன்னுடைய விருப்பத்தினால் தன்னையும் படைத்து பலவகைப்பட்ட உலகத்தையும் படைக்கிறான். அவனுக்கென்று ஓர் உருவமும் கிடையாது. ஆனாலும் மாயை எனப்படும் தன்னுடைய தெய்வீக சக்தியின் துணைகொண்டு பல்வேறு வகையான தோற்றத்தில் காட்சியளிக்கிறான். தன்னுடைய மாயா சக்தியினால் நல்லனவற்றையும் தீயனவற்றையும் சேர்த்து இவ்வுலகைப் படைத்தான். இந்த உலகம் அவனால் படைக்கப்பட்ட போதிலும் அவன் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டவன்.

ஈஸ்வரன் படைப்பவன் மட்டுமல்லாது, படைக்கப்பட்ட உலகைக் காப்பதுடன், அழிக்கவும் செய்கிறான்.படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களுமே இவ்வுலகில் தொடர்ந்து நடைபெறுகின்றது. ஈஸ்வரனுடைய தோற்றங்கள் அடிப்படையில் (1) படைப்பது (2) காப்பது (3) அழிப்பது என்ற மூன்றாக உள்ளன. ஈஸ்வரனின் இந்த மூன்று அடிப்படைத் தோற்றங்கள் முறையே பிரம்மா. விஷ்ணு, சிவன் என்று சொல்லப்படுகிறது. ஈஸ்வரன் படைப்புத் தொழிலைச் செய்யும் போது பிரம்மா என்றும் ,காக்கும் தொழிலைப் புரிகையில் விஷ்ணு என்றும் , அழிக்கும் தொழிலைப்புரிகையில் சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். ஈஸ்வரன் , பால் பாகுபாட்டிற்கு அப்பாற்பட்டவன்.இருப்பினும் இந்துக்கள் அவனைத் தாயாகவும் , தந்தையாகவும் பாவிக்கிறார்கள். மேலும் பக்தன் தனது மனதின் விருப்பத்திற்கேற்றாற்போல் ஈஸ்வரனுடன் தனது உறவை அமைத்துக் கொள்கிறான். ஈஸ்வரனை ஒரு நண்பனாகவோ, குழந்தையாகவோ, கணவனாகவோ அல்லது காதலியாகவோ எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளலாம்.இவை யாவும் ஈஸ்வரனின் மேல் ஏற்றப்படும் மன எழுச்சிகளே.

இந்து மதத்தைச் சார்ந்த பல் பெரிய பெண் துறவிகள் கடவுளையே தங்களது கணவனாக கருதியுள்ளனர்.ஒரு சிலர் கடவுளைத் தங்களது தெய்வீக குழந்தையாகப் பாவித்து உள்ளனர். கமலாகாந்தர், ராம்பிரசாத், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற இந்து மத சாதுக்கள் கடவுளைத் தெய்வீக அன்னையாகக் கருதினார்கள். மேலே கூறப்பட்ட உறவுகள் அனைத்தும் மனத்தளவில் ஏற்பட்டவையே தவிர உடலால் எத்தகைய தொடர்பும் கொண்டவை அல்ல.

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியத்துறவியான ஸ்ரீராமகிருஷ்ணரின் கூற்றுப்படி இத்தகைய உறவு முறைகளைக் கொண்ட கடவுளை நெருக்கமாகக் கருத முடியும். அதனால் கடவுள் காட்சியைப் பெறுவது துரிதப்படுத்தப்படுகிறது. இறைக்காட்சி அடைய வேண்டும் என்று எண்ணும் சாதகர்களுக்கு இந்த உறவு முறைகள் கடவுளிடம் நெருக்கத்தை உண்டு பண்ணுவதால் அவர்கள் விரைவில் தங்களது இலட்சியத்தை அடைய முடியும். இவ்வுலகில் காணப்படும் அறநெறிகளைத் தோற்றுவித்தும் அவற்றை நிலைநிறுத்தவும் செய்பவர் ஈஸ்வரனே. இந்த அடிப்படை சட்டங்களே வடமொழியில் ரிதம் என்று சொல்லப்படுகிறது. இதனால் கோள்களும் , விண்மீன்களும் ஓர் ஒழுங்குத் தன்மையுடன் இயங்குகின்றன.இந்து மதக் கடவுள்கள்- மூன்று தத்துவங்களிலும் அடிப்படையில் கடவுளை வணங்கிய போதிலும் கடவுளின் சக்தியானது மிகவும் அபரிமிதமானது. கடவுளின் சக்திக்கு எல்லையே கிடையாது. எனவே ஓர் இந்து ஈஸ்வரனிடம் ஏதோ ஒரு சக்தி அதிகமாகக் காணப்படுவதாக கருதினால் அதற்கேற்ப கடவுளுக்கு ஒரு பெயர் அளிக்கப்படும் ஈஸ்வரன் அறிவைக் கொடுப்பவனாகக் கருதும் போது சரஸ்வதி என்றும் செல்வத்தை வாரி வழங்கும் போது லக்ஷ்மி என்றும் பெயர் சூட்டப்பட்டான். இதிலிருந்து தேவதேவதைகள் பல்வேறு கடவுளர்கள் அல்லர் என்பதையும் , அவை ஒரே ஈஸ்வரனின் வெவ்வேறு வகையான தோற்றங்களே என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தேவர்களும் தேவிகளும் ஒளியுடன்கூடிய உடலை உடையவர்கள்- கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சில உயிர்கள் இந்த நில உலகில் வாழ்ந்த போது பல செயற்கரிய செயல்களைச் செய்ததால் அவை இறந்த பிறகு புகழ் மிக்க பதவியானது அளிக்கப்படுகிறது.அவை ஒளி பொருந்திய உடலைப் பெற்று ஒளியையும் வீச வல்லதாகிறது.“திவ்” என்ற வடமொழிச் சொல்லுக்கு ஒளிவீசுதல் என்று பொருள் . எனவே அவை ஆண்களாக இருந்தால் தேவன் என்றும் , பெண்ணாக இருந்தால் தேவி என்றும் கருதப்பட்டார்கள்.

தேவர்களுள் மிகவும் பெரியவருக்கு ஹிரண்யகர்பர் என்று பெயர். அவருக்கு எல்லையற்ற சக்தி உண்டு. கடவுளால் முதலன் முதலாகப் படைக்கப்பட்ட உயிர் அவர். படைக்கப்பட்டவராக இருந்தாலும் கடவுளைப் போன்றே எல்லா விதமான சக்திகளையும் கொண்டவர்.இவர் இந்தப் பிரபஞ்ச சம்பந்தமான நுண்ணறிவு ஆவார். ஈஸ்வரனின் விருப்பப்படி ஹிரண்யகர்பர் இந்த உலகத்தைப் படைத்தார். கடவுளால் படைக்கப்பட்ட முதல் உருவம் ஹிரண்யகர்பர் எனவே அவர் அனைவரது வழிபாட்டிற்கும் உரியவர். அவருக்குள் இந்த உலகம் முழுவதும் அடங்கும்.ஏனைய தேவ தேவதைகள் அவருக்குள்ளேயே இருக்கின்றனர். ஆகையால் எந்த ஒரு தேவ தேவதையைப் போற்றிப் புகழ்வதும் ஹிரண்யகர்பரைப் புகழ்வதற்கே ஒப்பாகும். சில சமயங்களில் புராணங்கள் ஹிரண்யகர்பரைத் தெய்வமாக்கி ஈஸ்வரனின் தரத்திற்கு உயர்த்தி விடுகின்றன. அப்போது அவர் படைப்புக்கடவுள் அல்லது பிரம்மா(நான்கு தலைகள் கொண்டவர்) என்று அழைக்கப்பட்டார்.

ஹிரண்யகர்பரைத் தவிர மீதி உயிர்கள் தெய்வத் தன்மையால் ஒளி கொண்டதாகவோ அல்லது முக்தி அடைந்ததாகவோ ஆகாது. இவ்வுலகில் வாழ்ந்த போது அவர்கள் செய்த பொற்றத் தகுந்த நற்செயல்கள் காரணமாக உயர்ந்த பதவிகள் அளிக்கப்படும். அவர்கள் செய்த நற்பயனின் தீவிரம் குறைந்தவுடன் அவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து மனிதப்பிறவி எடுத்தாக வேண்டும்.

இந்து மதத்தில் இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு வகைப்பட்டதான உயிருள்ளதும் உயிரற்றதுமான ஜீவன்களைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ள தேவ தேவதைகளுக்கு வடமொழியில் அதிஷ்டதாரி தேவா, அதிஷ்டதாரி தேவி என்று பெயர். இவர்களுக்கு உட்பட்ட பகுதி மிகவும் சிறியதாகவோ, பெரியதாகவோ, மிகப் பெரியதாகவோ அல்லது மிகச்சிறியதாகவோ கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக இந்திரனை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு அதிஷ்டான தேவன். அவர் அனைத்து மக்களின் போர்க்கருவிகளுக்கும் போரிடுபவரின் திறமைக்கும் அதிகாரி ஆவார். அதே போன்று ஹிரண்யகர்பரும் ஒரு அதிதேவன். அவர் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் அனத்திற்கும் அதிகாரி ஆவார். அவர் அனைவரது மனத்தையும் தன் மனதாகவே எண்ணுபவர்.

“விராட்” என்பவர் அனைத்து உலகிலுள்ள பொருள்களையும் தன்னுடைய உடலாகவே கருதுகிறார்.இதை விளக்கும் வகையில் நம்முடைய மனித உடலையே எடுத்துக்கொள்வோம். ஓர் உடலானது தோலால் பாதுகாக்கப்பட்ட உலகமாகிறது. அந்த உடலுக்குள் எலும்புகள், நரம்பு மண்டலம், இரத்த ஓட்டம் மற்றும் பல நுண்ணிய திசுக்கள் அடங்கி உள்ளன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் இருப்பதை நாம் அறிவோம். அது வெளியிலிருந்து நோய்க் கிருமிகளால் நம் உடல் பாதிக்காமல் இருக்க ஒரு பாதுகாவலனாக வேலை செய்கிறது. ஏதாவது நோய்க் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அவற்றுடன் போராடி அவற்றை அழித்து விடுகிறது. யாராவது அந்த வெள்ளை அணுவிடம் இதோ பார்? நீ இந்தத் தோலால் சூழப்பட்ட பிரபஞ்சத்திற்குள் இருக்கிறாய்.இங்கே ஓர் உயிர் இருக்கிறது. அதற்கு இந்த உடலே உலகம். அதுவே நீ வாழும் பிரபஞ்சத்திற்கு அதிதேவதை என்று கூறினால் அந்த வெள்ளை அணு அநேகமாக நீ என்ன கதை விடுகிறாயா? என்று கேட்கலாம். நாம் அந்த வெள்ளை அணுக்களைப் போன்றவர்கள் தான். நம்முடைய மன இயல்பானது அதிஷ்டான தேவ தேவதைகளை ஒப்புக் கொள்ளாது. ஆனாலும் இந்த விஷயமானது நகைப்பிற்குரியது என்று தள்ளிவிட எண்ணுவது மதியீனம். நம்மிடம் பாரபட்ஷம் இல்லாது இருப்பின் இவ்வாறாக விஷயங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்து மதமானது இத்தகைய விஷயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது.