August 2, 2019

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-7

By Tamil

சகுணங்கள்

இருதய சுத்தியோடு இருப்பவள்-இருக்க வேண்டியவள் பெண்.
அவளுக்கு இடக்கண்ணும், இடத்தோளும் துடித்தால் அது நல்ல சகுனம்.

அந்த இடக்கண்ணின் மேல் இமை துடித்தால் கணவனிடம் இருந்து நல்ல சேதி , கீழ் இமை துடித்தால் தாய் வீட்டிலிருந்து நல்ல சேதி.

வல்லமை காட்டவும் , வாணிபம் செய்யவும் , வரவு வைக்கவும், வலக்கையைப் பயன்படுத்தும் ஆடவனுக்கு,வலக்கண் துடிப்பது நல்ல சகுனம்.

வலக்கண்ணின் மேல் இமை புகழ்,கீழ் இமை பொருள்.

பிராமணர்கள் இறைவனிடம் இருந்து செய்தி கொண்டு வருகிறவர்கள் என்று எல்லா ஜாதி இந்துக்களும் நம்பினார்கள்.
புறப்படும் போது ஒரு பிராமணன் எதிரே வந்தால் அவன் துன்பச் செய்தி கொண்டு வருகிறான் என்று கருதினார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வந்தால் நல்ல செய்தி கொண்டு வருகிறார்கள் என்று கருதினார்கள்.
இந்த நம்பிக்கை பலருக்குப் பலித்திருக்கிறது.

சவரம் செய்யும் பரியாரி எதிரே வருவது கெட்ட சகுணம் என்கிறார்கள்.
காரணம் மொட்டையடிப்பதும் அந்தத் தொழிலாளியின் தொழிலில் ஒர வகையாய் இருப்பதால் கஷ்டமோ, நஷ்டமோ வருகிறது என்கிறார்கள்.
அதே நேரத்தில் சலவைத் தொழிலாளியின் வருகையை நல்ல சகுணம் என்கிறார்கள்.
காரணம் அழுக்கு நீக்கித் தூய்மைப்படுத்துவது அவன் தொழில்.
ஆகவே கவலை நீக்கி மகிழ்ச்சி தருவது அவன் வருகை.

பாற்குடம் எதிரே வந்தால் மங்கலம், எண்ணெய்க்குடம் எதிரே வந்தால் அமங்கலம்.
பால்புனிதமானது, பிறப்பிலிருந்து இறப்பு வரை பயன்படுவது.
எண்ணெய் அமங்கலமானது, காரணம் அது எரிப்பதற்குப் பயன்படுவது.
அதுபோலவே விறகுச் சுமை வருவதும் அமங்கலம் என்கிறார்கள்.

சுமங்கலி கர்ப்பஸ்திரி எதிரே வருவதும் மங்கலம்.
விதவை எதிரே வருவது அமங்கலம்.
காரணங்கள் காட்சியிலேயே இருக்கின்றன. விளக்கம் தேவையில்லை.

கழுதைக் கத்தினால் நல்ல சகுனம்.
காக்கை கரைந்தாலும், கழுதை கத்தினாலும் உறவு வருகிறது.
பூனை வலமிருந்து இடமாகப் போனால் துன்பம் விலகுகிறது.

கூட்டிப் பெருக்கும் போதோ ஒன்றை அப்பால் தள்ளும் போதோ, வலமிருந்து இடமாகத்தானே தள்ளுகிறோம்.
அதுபோல்,எழுதும் போதோ, கோடு போடும் போதோ இடமிருந்து வலமாகப் போடுகிறோம்.
அதனால் பூனை இடமிருந்து வலமாகப்போனால் துன்பம் வருகிறது.
காரணம் எழுத்திலே, செலவும் எழுதலாம், வரவும் எழுதலாம் இல்லையா?

மணஓலையும் எழுதலாம், மரண ஓலையும் எழுதலாம்.இல்லையா?

இடமிருந்து வலம் எப்போதும் சந்தேகத்திற்கு உரியது.
அதனால் ”யானை வலம் போனாலும் பூனை வலம் போகக் கூடாது” என்பார்கள்.
நரி வலம் நல்லது என்பார்கள்.
சிலர்”நரி எந்தப்பக்கம் போனாலும் நல்லது என்பார்கள்.
(காரணம் அது மேலே விழுந்து கடித்துத் தொலைக்காமல், எந்தப்பக்கமாவது போகிறதே.அதற்காக இருக்கலாம்).

குரைக்கின்ற நாய் ஓலமிடத் தொடங்கினால், அந்த ஒலியே அவலமாக மரண ஓலமாகப்படுகிறது.
அதை ஏதோ ஒரு மரணம் பற்றிய முன்னறிவிப்பு என்று நம்பினார்கள்.

வாழ்க்கை முழுவதையும் மங்கலம், அமங்கலம் என்று பிரித்த இந்துக்கள் சகுனத்தையும் மங்கலம்” அமங்கலம் என்று பிரித்தார்கள்.

நடக்கும் போது கால் தடுக்குவதை இந்துக்கள் கெட்ட” சகுனமாகக் கருதுகிறார்கள்.
எனக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு.

1953-ஆம் ஆண்டு ஜீலை மாதம் டால்மியா புரம் போராட்டம் நடந்தது. அதன் மூன்றாவது கோஷ்டிக்கு நான் தலைவன்.
முதல் இரண்டு கோஷ்டிகளையும் போலீசார் கைது செய்து விட்டார்கள்.
மூன்றாவது கோஷ்டியை நான் தலைமை தாங்கி நடத்திச் சென்றேன்.
நடந்து போகும் போது, எனது வலது கால் பெருவிரலை ஒரு கல் தடுக்கிவிட்டது.
அப்பொழுதே நினைத்தேன்,ஏதோ நடக்கப் போகிறதென்று.
தடியடி,துப்பாக்கிப் பிரயோகம்,பின் கலவரவழக்கு,பதினெட்டு மாதத் தண்டனை என்று நான் பட்ட பாடு என் வலது காலுக்குத் தான் தெரியும்.

காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தவர் திரு.மெய்யப்பச் செட்டியார்.
அவர் ஒரு முறை சென்னைக்கு க்குடும்பத்தோடு வந்தார்.
ஒரு நாள் இரவு ஊருக்கு திரும்ப விரும்பினார்.
அவருடைய ”டிரைவர் ராத்திரியில் வேண்டாமே காலையில் போவோம் என்றார்”. முடியாது, இப்போதே புறப்படுவோம் என்றார் அவர்.
அவருடைய பியட் காரில்” மேல் கேரியரில் அவரது பெட்டி, படுக்கை அனைத்தையும் வைத்துக் கட்டினான் டிரைவர்.
கட்டிக் கொண்டிருக்கும் போதே படுக்கை கீழே விழுந்தது.
”படுக்கை கீழே விழுகிறது என்று கூட ஒருவர் சொன்னார்.
பரவாயில்லை இந்த டிரைவர் வேண்டுமென்றே செய்கிறான்” என்று சொன்ன மெய்யப்பன் தாமே அதை எடுத்துக்கட்டி தம் தாயாரையும் மனைவியையும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
திருச்சி செல்லும் வழியில் பெரம்பலூருக்குச் சிறிது தூரத்தில் தோல் ஏற்றப்பட்டு நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது அந்தக்கார் மோதி அந்த இடத்திலேயே மெய்யப்பச் செட்டியார் மரணமடைந்தார்.
அவரது குடும்பத்தினர் பலத்த காயங்களோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அந்த நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி ஒரே ஒரு விஷயத்தைப்பற்றியது .
காரிலிருந்து தவறி விழுந்தது படுக்கை, அந்தப்பயணமே அவரது கடைசிப்படுக்கையாகி விட்டது.

சில சகுனங்கள் இறைவனின் முன்னறிவிப்புகளே, சந்தேகமேயில்லை.

நான் ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.அந்தப்படத்தைக் கோவை நீலகிரி ஜில்லாக்களுக்கு விற்பதற்காக ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு க் கோவை விநியோகஸ்தர் மணியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
விலைபேசி முடிந்தது.பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கையிலெடுத்து வைத்து க் கொண்டு ”அக்ரிமெண்ட் அடியுங்கள்” என்றார்.
அவர் சொன்னவுடனேயே மின்சார விளக்கு அணைந்தது.
எனக்குச்சுருக்கென்றது.
அவர் உடனே எழுந்து ”வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
அவர் நினைத்தது போல நான் பயந்தது போல்அந்தப் படம் தோல்வியடைந்தது.

என் வீட்டிற்கு அருகே தினமும், காலையில் இரண்டு வட இந்திய சுமங்கலிகள் ஒரு கையில் பாற் செம்பும், ஒரு கையில் பூக்கூடையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போவார்கள்.
நான் புறப்படுகிற நேரத்தில் அவர்கள் எதிரே வந்தால் அன்று எல்லாக் காரியங்களும் பிரமாதமாக நடக்கும்.
ஆணையாகச் சொல்லுகிறேன்.
அவர்கள் எதிரே வந்த நாட்களெல்லாம் எனக்கு நல்ல நாட்களாகவே இருந்திருக்கின்றது.

நம்பிக்கை, மனப்பூர்வமான நம்பிக்கை.
ஆம். நம்பிக்கையில் தானே இந்துக்களின் சர்வ வல்லமையும் அடங்கியிருக்கிறது.
வீட்டுக்கு எந்தத் திசையை நோக்கி வாசல் வைப்பது என்பதிலிருந்து தலையை எந்த திசையில் வைத்துப் படுப்பது என்பது வரை.
நம்பிக்கை,நம்பிக்கை,நம்பிக்கை!

இதை மூட நம்பிக்கை என்பார்கள் சிலர்.
அவர்களை அவர்களுடைய பகுத்தறிவு காப்பாற்றட்டும்.!
எங்களை எங்களது நம்பிக்கை காப்பாற்றட்டும்.

இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய WHATSAPP 9789374109