August 2, 2019

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-8

By priyesh Prakash


ஏன் இந்த நம்பிக்கை?

உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்,மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும், அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில் ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்.
என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஆம், பலவீனத்திலும் பயத்திலுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்றமளிக்கிறது.
இந்து சமயமன்றிப் பிறச் சமயங்களும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன.

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் கேட்டதாக நினைவு.
ஓர் ஆசிரியர் தன் மாணவியைப்பார்த்து க் கேட்கிறார்.
கடவுள் எங்கே இருக்கிறார்?
மாணவி சொல்கிறாள்,
தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்.
இல்லை, அது பழங்காலக்கதை, வாழ்க்கை நன்றாக இருக்கும் போது கடவுள் இல்லை, வறுமை வரும் போது அவர் உடனே வருகிறார்.
வெற்றி பெற்றவனுக்குக் கடவுள் இல்லை,தோல்வியுற்றவன் நெஞ்சில் உடனே தோற்றமளிக்கிறார்.
-என்றார் ஆசிரியர்.

ஆம் பாவம் செய்யும் போது கடவுள் இல்லை.
அதற்குரிய தண்டனையை அனுபவிக்கும் போது கடவுள் இருக்கிறார்.
ஒலியிலே தோன்றாத கடவுள், எதிரொலியில்
தோன்றுகிறார்.

சிலையிலே காண முடியாத தெய்வம், சிந்தனையிலே சாட்சிக்கு வருகிறது.
கடவுள் நம்பிக்கை என்பது ஏதாவதொரு வடிவத்தில் எல்லாருக்கும் இருந்தே தீருகிறது. என்பது இந்துக்கள் முடிவு.

உயர்ந்தனவோ,தாழ்ந்தனவோ அனைத்திலுமே நான் இருக்கிறேன் என்றார் கண்ணன் கீதையிலே.
அர்ஜீனனிடம் கண்ணன் சொல்கிறான்.”அர்ஜீனா, தேவர் கூட்டங்களும்,முனிவர்களும் என் உற்பத்தியை உணரமாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு முற்றிலும், முதற்காரணம் நானே.
ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும் உலகிற்குத் தலைவன் என்றும் என்னை அறிகிறவன் மனிதர்களுள் மயக்கமில்லாதவன்.

நம் கண்ணுக்குத் தெரியும் உலகத்தை விட கண்ணுக்குத் தெரியாத சூட்சம உலகம் பல மடங்கு பெரிதாக இருக்கிறது.
அவை அனைத்தையும் இயக்கும் மூலப்பொருளை அனுபவம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறது.

கடவுள் நம்பிக்கையல்ல.
விஞ்ஞானி கூட விளக்கம் சொல்ல முடியாத ரகசியம் இறைவனின் சிருஷ்டியில் இருக்கிறது.

உலகத்தில் இருநூறு கோடி மனிதர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அந்த இருநூறு கோடியிலும் ஒருவரே போல் காட்சியளிக்கும் இன்னொருவர் இல்லை.

ஒருவருக்கொருவர் பத்துக்கு ஒன்பது ஒற்றுமை இருந்தாலும் ஒன்றாவது மாறுபட்டு நிற்கும்.
நூற்றுக்கு நூறு உடலமைப்பும், குரலமைப்பும் உள்ள இருவரை நீங்கள் காண முடியாது.
இரட்டைப்பிள்ளைகளாகப் பிறப்பவர்களிடையே கூட ஏதாவதொரு வித்தியாசத்தைக்காண முடியும்.
குணங்களிலும் ஒருவருக்கொருவர்,கொஞ்சமாவது மாறுதல் இருந்தே தீரும்.

என் தந்தை குடிக்க மாட்டார், வேறு பெண்களை ஏறெடுத்துப்பார்க்க மாட்டார், ஆனால் சீட்டாடுவார்.
நானோ,சீட்டு மட்டும் ஆட மாட்டேன்.
ஆகவே இருநூறு கோடிக்கும் தனித்தனி ”டிசைன்செய்தவன் இறைவன்.

இது மனிதனால் ஆகக்கூடியதா? மனித முயற்சியால் நடக்கக் கூடியதா?

உலகமெங்கும் நீதித் துறையினர் குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிவு செய்கிறார்களே ஏன்?
ஒருவனின் கைரேகை போல் இன்னொருவனின் ரேகை இருக்காது என்பது ஒரு நம்பிக்கையாகும்.விஞ்ஞானமும் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது
இருநூறு கோடி கைகளுக்கும் தனித்தனி டிசைன் போட்டிருக்கிறான் இறைவன்.

படிப்பறிவில்லாதவர்களைக் கைரேகை வைக்கச் சொல்வதற்கு க் காரணம் இதுதான்.
குறுக்கெழுத்துப் போட்டியில், ஒரு எழுத்தை மாற்றினால் ஒரு கூப்பன் அதிகமாவது போல், ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொரு ரேகையை மாற்றுகிறான் இறைவன்.

வியக்கத்தக்க அவனது சிருஷ்டியிலேயே அவனைக் கண்டு கொள்ள முடியாது.
அப்படியும் கண்டு கொள்ளதவர்கள்,தங்கள் பலவீனத்தால் ஏற்பட்ட துன்ப அனுபவங்களிலே கண்டு கொள்ளுகிறார்கள்.

விஞ்ஞான ரீதியாக இன்று சொல்லப்படும் உண்மைகளை இந்துமதம் எப்போதோ சொல்லிவிடடது.
இந்து மதத்தின் தனிச்சிறப்பு அது தான்.

சிலை வழிபாட்டு நிலையையும் அது அது ஒப்பக் கொண்டிருக்கிறது.

அதற்கு அப்பாற்பட்டு மனத்துள்ளே கடவுளைக் காணும் நிலையையும் மேல்நிலைஎன்று கூறுகிறது.

சிலையை வெறும் கல் என்று சொல்லும் நாஸ்திகனுக்கும், மனம் என்னும் ஒன்று இருக்கிறது.
அது மரணப்படுக்கையிலாவது கடவுளைப் பற்றிப் பேச வைக்கிறது.

பிறப்புக்கு தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே.
இவ்வளவு எலும்புகளும், நரம்புகளும் ரேகைகளும் எங்கிருந்து வந்தன?

மண்டையோட்டை அறுத்துப் பார்த்தால் உள்ளே ரோமம் இல்லை. இந்த ரோமம் வளர்வது எப்படி?
நாம் வளர்வது எப்படி?
குழந்தப்பருவத்தில் விழுந்த பல் முளைப்பது எப்படி?

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் உள்ளே இருக்கும் காற்று உலாவிக்கொண்டே இருப்பது எப்படி?

இவை அறிவு போடும் கேள்விகள்.

ஆனால் அனுபவம் காட்டும் உண்மைகள்.இவற்றை விட அதிகமாகக் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்கின்றன.

இறைவனின் அஸ்திவாரம் என்ன என்பதனை முதலிலேயே கண்டுகொண்டவர்கள் இந்துக்கள் தான்.

இரக்கம்,அன்பு , கருணையைக் காட்டிய பௌத்த மதம் கடவுள் ஒன்றைக் காட்டவில்லை.

ஆனால் கடவுள் என்று ஒன்றைக் காட்டிய இந்து மதம் இரக்கம், அன்பு,கருணையை விட்டுவிடவில்லை.
பௌத்த மதத்தை இந்துமதம் ஜீரணித்து விட்டதற்குக் காரணம் இது தான்.

வாழ்க்கையைக் கர்மகாண்டம்” ”ஞான காண்டம்என்று பிரித்தது இந்து மதம் தான்.
கர்மகாண்டத்தில் தொழில்கள் காரணமாக ஜாதி உண்டு. ஞான காண்டத்தில் ஜாதி இல்லை.யாவரும் சந்நியாசி ஆகலாம்.

லௌகிக வாழ்க்கையையும், தெய்வ நம்பிக்கையையும் ஒன்றாக இணைத்தது இந்துமதம்.
உணவு, மருத்துவம், தொழில் அனைத்திலும் பாவ புண்ணியங்களைக் காட்டுவது இந்துமதம்.

உடல் இன்பத்தை ஒப்புக் கொண்டது இந்துமதம்.
அதற்கு மேற்பட்ட துறவு நிலையிலும் ஆதிக்கம் செலுத்துவது இந்து மதம்.

இன்பங்களுக்குச் சடங்குகள் செய்வது இந்துமதம்.
துன்பங்களுக்கு ஆறுதல் சொல்வது இந்துமதம்.
ஆகவே தான் எந்த நிலையிலும் ஒரு இந்துவுக்குக் கடவுள் நம்பிக்கை எழுந்துகொண்டே இருக்கிறது.
அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைகளுக்குத் தப்ப முடியாது.

”ஆஸ்தி”என்றால் சொத்து.
நாஸ்தி” என்றால் பூஜ்ஜியம்.
”நாஸ்திகன் ஒன்றுமில்லாத சூனியம்.
இந்துவின் கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக்கிறான்.
ஆகவே நாஸ்திகனும் இந்துவே, ஆஸ்திகனும் இந்துவே.

இரண்டு பேரும் கடவுளைப்பற்றியே பேசுகிறார்கள்.

இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய WHATSAPP 9789374109