November 29, 2021

கலெக்டரைக் காப்பாற்றிய மீனாட்சி அம்மன்!

By Tamil

மதுரை அரசாளும் மீனாட்சி: மதுரைன்னா உடனே நமக்கு மீனாட்சி அம்மன் கோவில் தான் ஞாபகத்துக்கு வரும். மீனாட்சி சுந்தரேஸ்வரர்! இந்த அம்பாள் சிலையை மரகதக் கல்லால் பண்ணி இருக்கா. பிரத்யக்ஷமா அப்படியே ஒரு பொண்ணு நிக்கற மாதிரியே இருக்கும். அவளை இன்னிக்கெல்லாம் பாத்துண்டே இருக்கலாம். கொள்ளை அழகு!
அழகு மட்டுமா? அவள் கருணையே வடிவானவள். அவளோட கருணையைப் பத்திப் பேச ஆரம்பிச்சா இந்த ஜென்மமே பத்தாது. யாரு எந்த கஷ்டத்திற்காக அவ கிட்ட வந்து முறையிட்டாலும் அவள் தீர்த்து வெச்சுடுவா. அவளை நினைச்சாலே மோட்சம்னு சொல்லுவா. அந்த மஹாக்ஷேத்திரத்துலே தான் நம்ப அம்புஜம் மாமி இருக்கா.
சித்ரா பவுர்ணமி என்றால் மதுரை தான் ஞாபகத்துக்கு வரும். ஒவ்வொரு வருஷமும் தேவேந்திரன் சித்ரா பௌர்ணமிக்கு இந்த கோவிலுக்கு வந்து வழிபடறதா சொல்லுவா. அன்னிக்கி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கல்யாண உற்சவம் பண்ணுவா. கள்ளழகர் ஆத்துலே இறங்குவார். கோலாகலமாக இருக்கும்.
ஒவ்வொரு வருஷ சித்ரா பௌர்ணமிக்கும் மதுரைக்குப் போய் அம்பாளைக் கண் குளிரப் பாத்துட்டு வந்துடுவேன். அப்போ தான் நேக்கு மனசு நிம்மதியா இருக்கும்.
இந்த வருஷம் சித்ரா பௌர்ணமிக்கு மாட்டுப்பொண்ணை அழைச்சிண்டு வாடீனு அம்புஜம் மாமி உத்தரவு போட்டுட்டா. மாமி வார்த்தையைத் தட்ட முடியுமோ? அம்பாள் தான் மாமி மூலம் சொல்றா. எல்லாமே அவொ நடத்தற நாடகம் தான்.
புள்ளை, மாட்டுப் பொண்ணு, பேரன், பேத்தி எல்லாரையும் அழைச்சுண்டு பங்கஜம் மாமி மீனாட்சியைப் பார்க்க மதுரைக்குக் கிளம்பி வந்துட்டா. பங்கஜம் மாமி யாருனு பார்க்கறேளா? அது வேற யாரும் இல்லை. நானே தான். அம்புஜம் மாமி என்னோட ஆத்ம ஸ்நேகிதி.
கோவில் பக்கத்திலேயே மாடவீதி. அங்க தான் நம்ப அம்புஜம் மாமி இருக்கா. மாமிக்குக் கிட்டதட்டத் தொண்ணூறு வயசு இருக்கும். பழுத்தப் பழம். நெத்தி நிறைய குங்குமம், ஒன்பது கஜம் புடவை. வயசுக்கு மீறின சுறுசுறுப்பு. மாமியைப் பார்த்தாலே அம்பாளைப் பார்த்த மாதிரி இருக்கும். அப்படி ஒரு தேஜஸ்.
எப்படிப் பூவையும் வாசனையையும் பிரிக்க முடியாதோ அந்த மாதிரி மாமியையும் சாமியையும் பிரிக்கவே முடியாது. அவ்வளவு பக்தி. நாள் தப்பாம இந்தத் தள்ளாத வயசுலேயும் தட்டுத் தடுமாறியாவது அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வந்துடுவா.
மாமி எப்பவும் கடவுளைப்பத்தி கதை கதையா சொல்லிண்டு இருப்பா. காது குளிர இன்னிக்கெல்லாம் கேட்டுண்டே இருக்கலாம். அவ்வளவு நன்னாக் கதை சொல்லுவா.
நாங்க இந்த தடவை அவாத்துக்குப் போனப்போ மீனாட்சியம்மன் தன்னை நம்பிய பிரிட்டிஷ் கலெக்டரோட உயிரையே காப்பாத்தின கதையை சொன்னா. அம்பாளோட கருணையை என்னனு சொல்றது!
கடவுளின் மகிமை: அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று சொல்லுவா. இந்த உலகத்தில் கடவுள் இல்லாமல் நாம்ப இல்லை. கல்லுக்குள்ளே இருக்கற தேரைலேருந்து எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் இரட்சிக்கறார். சம்ரட்சணம் பண்றார்.
நம்பளோட வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் ‘நான் இருக்கேன்னு’ கடவுள் நமக்கு உணர்த்திண்டே இருக்கார். ஒவ்வொருத்தர் வாழ்க்கைலேயும் நம்ப முயற்சியை எல்லாம் தாண்டி நாம்பளே எதிர்பார்க்காத நேரத்துல பல நல்ல விஷயங்களை நடத்திக் காட்டி இருக்கார்.
நம்ப வாழ்க்கைலே இந்த நல்லதெல்லாம் எப்படி நடந்தது? நமக்கே பிரமிப்பா இருக்கும். நிதானமா யோசிச்சா நாம்ப நம்பற சாமி தான் எல்லாம் செஞ்சிருக்கார்னு நமக்கே புரியும்.
தெய்வம் தன்னை உண்மையா நம்புகிற பக்தர்களுக்காக நிறைய அதிசயங்களை நடத்திக் காட்டி இருக்கு. அந்த வகையில் தன்னிடம் உண்மையான பக்தியோடு இருந்த ஒரு ஆங்கிலேயக் கலெக்டருடைய உயிரைக் காப்பாற்றி மதுரை மீனாட்சியம்மன் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினாள். அந்தக் கதையை சொல்ல ஆரம்பிக்கும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
பிரிட்டிஷ் கலெக்டர்: மதுரை மாவட்டத்துலே ரோஸ் பீட்டர் என்று ஒரு பிரிட்டிஷ்காரர் இருந்தார். அவர் 1812 லேருந்து1828 வரைக்கும் அந்த ஊர்க் கலெக்டராக இருந்தார். அப்போ இந்தியாலே பிரிட்டிஷ் ஆட்சி தான் நடந்துண்டுருந்துது.
பிரிட்டிஷ் ஆட்சியில் கிறிஸ்துவர்களைத் தவிற வேறு எந்த மதத்தோட வழிபாட்டு முறைக்கும் மரியாதையே குடுக்க மாட்டா. ஆனால் நம்ப ரோஸ் பீட்டர் அப்படி இல்லை. ரொம்ப நல்ல மனுஷர்.
அவர் பொறப்பால வெள்ளைக்காரர் தான். கிறிஸ்துவன் தான். ஆனா ‘இந்த மதம் தான் பெரிசு’, ‘அந்த மதம் தான் பெரிசு’ என்று எல்லாம் அவர் நினைச்சதே இல்லை. எல்லாரையும் பாரபட்சமே இல்லாம சமமா நடத்தினார்.
அதுலேயும் நம்பக். கலாசாரத்துக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும் ரொம்பவே மதிப்பும் மரியாதையும் குடுத்தார்.
கலெக்டர் பீட்டர் கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்து, கோவில் வேலைலே எல்லாம் எந்தத் தப்பும் வராமல் கண் குத்திப் பாம்பு மாதிரி மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையாவும், உண்மையாவும் செய்தார்.
மனுஷாளை எல்லாம் நன்னாப் பார்த்துண்டார். யார் தன்னைப் பார்க்க வந்தாலும் அவாளோட குறையை எல்லாம் நிதானமாக் கேட்டு, உடனடியா நடவடிக்கை எடுத்தார். அதனால் எல்லாருமே க்ஷேமமா இருந்தா.
எல்லாருக்கும் அவரை ரொம்பப் புடிக்கும். அவருக்காக எல்லாரும் உசிரைக் குடுக்கக் கூடத் தயாரா இருந்தா.
அத்தோட விட்டாளா? அந்தக் கலெக்டருக்குப் பீட்டர் பாண்டியன்னு செல்லப் பெயர் எல்லாம் வெச்சுக் கூப்பிட ஆரம்பிச்சுட்டா. அந்த அளவுக்கு அவர் எல்லாரோட மனசுலயும் இடம் புடிச்சுட்டார்.
கடவுளுக்குக் காட்டும் மரியாதை: அவாத்துலேருந்து அவர் ஆபீஸ் போற வழிலே தான் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கு. அந்தக் காலத்துலே முக்கால்வாசி குதிரை சவாரி தான். இவர் தினமும் குதிரையிலே தான் ஆபீசுக்குப் போவார்.
அந்தக் கோவில்லே இருந்த அம்பாளை ஒரு சாதாரணக் கல் சிலையா அவர் நினைக்கல. அம்பாள் பிரத்யட்சமா உசுரோட அங்கே இருக்கிறதா தான் அவர் நினைச்சார்.
நாம்ப பெரியவாளைப் பார்த்தா, உடனே தோள்ளே இருக்கறத் துண்டை இடுப்புலக் கட்டிண்டு சாஷ்டாங்கமா விழுந்து நமஸ்காரம் பண்றது இல்லையா? அந்த மாதிரி அவர் அந்தக் கோவிலைத் தாண்டிப் போகும் போதெல்லாம் குதிரையிலேருந்து இறங்கி நடந்து தான் போவார். அதுவும் சும்மா இல்ல. தொப்பியையும், கால்ல இருக்கறக் காலணியையும் கழட்டிட்டு வெறும் கால்லே நடந்துப் போவார். இது அம்பாளுக்கு அவர் காட்டும் மரியாதைனு அவர் நினைச்சார்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரிப் பழக்கம். மரியாதைங்கறது மனசுல இருக்கிற விஷயம். அதை எப்படி வேணா வெளிப்படுத்தலாம். இவர் இப்படி வெளிப்படுத்தினார்.
தினமும் மீனாட்சி அம்மன் கோயிலை பிரதக்ஷணம் பண்ணிட்டுத் தான் வேலை செய்யவே ஆரம்பிப்பார். எந்த ஜென்மத்து பந்தமோ! அம்பாள் கிட்ட அவருக்கு அவ்வளவு பக்தி! சிலர் ஏதோ ஒரு பாண்டிய இராஜா தான் கலெக்டராப் பொறந்துருக்கார்னு சொல்றா.
அம்பாள் பார்த்தாள்! தன்னை நம்புகிற ஒரு உண்மையான பக்தனுக்குத் “தான் யார்’ என்று காட்ட நினைத்தாள். தன்னோட திருவிளையாடலை ஆரம்பிச்சுட்டாள்.
அம்பாளின் கருணை: ஒரு நாள் மதுரையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இடியும் மின்னலுமாகப் பேய்மழை கொட்டிண்டிருந்தது. வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கலெக்டர் அவாத்துலே அசந்து தூங்கிண்டு இருந்தார். ‘இது என்னடா மழை இப்படிப் பெய்யறது! இந்த மாதிரி மழையை நான் இது வரைக்கும் பார்த்ததே இல்லையே! ஊழிக் காலம் தான் தாண்டவமாடறதோ! இந்த மழையால யாருக்கு என்ன கஷ்டம் வருமோத் தெரியலையே’ என்று யோசிச்சுண்டே பாவம் நிம்மதியாத் தூங்க முடியாமப் புரண்டுப் புரண்டுப் படுக்கறார்.
திடீர்னு அந்த அர்த்த இராத்திரி வேளையிலே, யாரோ நடந்து வருகிற மாதிரி அவருக்கு சத்தம் கேட்கிறது. அவருக்குத் தூக்கக் கலக்கம். “இது கனவா? இல்லை நிஜமா’! அவருக்குப் புரியல. சரி, எழுந்து போய் தான் பார்க்கலாமே என்று நினைத்து வெளியில் வரார். அதற்குள் மூன்று வயதே ஆனச் சிறுமி ஒருத்தி அவருடைய அறைக்குள்ளே நுழையறா. அவள் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்தாள். விலை உயர்ந்த நகை எல்லாம் போட்டுண்டு இருந்தாள். அவளோட முகம் கோடி சூரியப் பிரகாசமா இருந்தது. அவருக்கு அந்தச் சிறுமி யார் என்றுப் புரியவில்லை.
அந்தச் சிறுமித் தன்னோடக் குட்டிக் கையால அவரோடக் கையைப் புடிச்சுண்டு, ‘பீட்டர், இந்தப் பக்கமா வா’, என்று சொல்லி மாளிகைக்கு வெளியிலே அவரை அழைச்சுண்டு வரா.
அவா வெளியில் வந்த அடுத்த க்ஷணம் அந்த மாளிகை அப்படியே வைகையாற்று வெள்ளத்துலே அடிச்சுண்டு போறதைப் பார்க்கிறார்.
ரோஸ் பீடர் அதிர்ந்துப் போயிட்டார். ஒரு வேளை இந்தச் சிறுமி என்னை வெளியில் அழைச்சுண்டு வரலைன்னால் என் நிலைமை எவ்வளவு மோசமாக ஆகி இருக்கும்! இந்த வீட்டோட சேர்ந்து நானும் தண்ணியில் போயிருப்பேனே!
“என்னைக் காப்பாற்றிய அந்தச் சிறுமி யாரு? இந்தக் கட்டிடம் வெள்ளத்தில் அடிச்சுண்டு போகப் போகிறது என்று அந்தச் சிறுமிக்கு எப்படித் தெரியும்? நான் கதவை உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டுண்டு தானே தூங்கிண்டு இருந்தேன். உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்ட அறைக்குள் அவள் எப்படி வந்தாள்?’ ஒண்ணுமே புரியாமல் கலெக்டர் திகைத்து நிற்கிறார். அவர் சுய நினைவுக்கு வரவே கொஞ்ச நேரம் ஆச்சு.
அதுக்குள்ளே அந்தச் சிறுமி, தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல் அங்கிருந்துச் சென்று விட்டாள். பிரமிப்புலேருந்தும், பதட்டத்துலேருந்தும் வெளியில வந்தக் கலெக்டர் கொஞ்ச தூரத்துல அந்தச் சிறுமி நடந்துப் போறதைப் பார்க்கிறார். அவளுக்கு நன்றி சொல்ல ஓடறார்.
அவளைப் பார்த்தால் மெதுவா நடந்துப் போகிற மாதிரி தான் தெரியறது. ஆனால் எவ்வளவு வேகமா ஒடினாலும் கலெக்டரால அவளைப் புடிக்க முடியல. அதனால் அவள் பின்னாடியே ஓடி ஓடிப் போறார். ஆனால் பார்த்துண்டு இருக்கும் போதே அந்தச் சிறுமி மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளேப் போய் மறைந்து விட்டாள். அந்தச் சிறுமியின் காலில் கொலுசு இருந்தது. ஆனால் செருப்பு இல்லாமல் வெறும் காலாக நடந்து வந்ததைப் பார்த்தார்.
தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது மதுரை மீனாட்சி தான் என்றும், தனக்கு அவளிடம் இருந்த பக்தி தான் தன் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது என்றும் கலெக்டர் ரோஸ் பீட்டருக்குப் புரிஞ்சுடுத்து. “என்னைக் காப்பாற்ற அம்பாளே நேரா வந்துட்டாளா?’ அவரோட கண்களில் ஆனந்தக் கண்ணீர்! அவருக்குக் கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் மலர்ப் பாதங்கள் வலிக்குமே! என்ன செய்யலாம்னு யோசிக்கறார். அவளோட கருணைக்கு எதைக் கொடுத்து ஈடுகட்ட முடியும்? கோவில் அர்ச்சகரிடம் என்ன செய்யலாம்னு கேட்கிறார். ஒவ்வொன்றாகக யோசித்துக் கடைசியில் தன்னோட அன்பைக் காட்டறதுக்காக நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்கப் பாதுகைகளைக் (காலணி) காணிக்கையாக அம்பாளுக்கு சமர்ப்பணம் பண்ணினார். அதில் 412 மாணிக்கக் கற்களும், 72 மரகதக் கற்களும், 80 வைரக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அந்தப் பாதுகையில் பீட்டர் என்று அவருடைய பெயரும் செதுக்கப்பட்டிருந்தது. இன்று வரை இந்த ஜோடிப் பாதுகைகள் ‘பீட்டர் பாதுகம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமித் திருவிழாவின் போது, மீனாட்சி அம்மனின் உற்சவ மூர்த்திக்கு பாதுகைகள் அலங்கரிக்கப்படுகின்றன.
அவர் சாகிற நேரத்தில் என் முகம் எப்போதும் அம்பாளைப் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி கோவில் கிட்டயே எனக்குக் கல்லறை அமைக்கணும்னு உயில் எழுதி வைத்து விட்டு இறந்தார். அந்த அளவிற்கு அம்பாளிடம் அவருக்கு ஈடுபாடு வந்தது.
200 ஆண்டுகளுக்கு முன் 1818ல் நடந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது, அதை நாம் பார்க்கவில்லை என்றாலும் இன்று வரைத் தன்னை நம்பிய அனைவருக்கும் மீனாட்சி அம்மன் அருள் பாலிக்கிறாள் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.
உலக அதிசியங்களுள் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்று என்றே சொல்லலாம். மீன் போன்ற கண்களை உடையவள்! ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவள்! அதனால் அவளுக்கு மீனாட்சினு பேரு. அவளோட கடைக்கண் பார்வை ஒன்றே நம்மையும் நம்ப சந்ததியையும் நல்லபடியா வாழ வைக்கும். அதனால் அவள் பாதத்தை கெட்டியாப் புடிச்சுக்கலாம். மீதியை அவள் பார்த்துப்பாள்.

writer: DeBa

Source: https://ta.wikipedia.org/s/4lv6