January 3, 2019

குட்டிப் பெண் துளசி…

By Tamil

…அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ஆசை ஆசையாய் “அத்துழாய்” என்று தூய தமிழில் பேர் வைத்தனர். அப்படித் தான் அன்புடன் வீட்டிலும் கூப்பிட்டனர்.
ஆனால் கூடப் பழகும் பெண்டுகள் எல்லாம் அத்துழாய் என்று முழுப் பேரையும் நீட்டி முழக்க முடியாமல் “அத்து” என்று கூப்பிட…
அட, இது என்ன அத்து, தத்து, பித்துன்னு….துளசி-ன்னே கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க! துளசி என்ற சொல் தானே, தூய தமிழ்ப் பாசுரத்தில் துழாய் என்று வருகிறது!
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்,
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்.
மற்ற பூக்களை எல்லாம் கொய்யாமல் செடியில் விட்டால் கூட, ஒரு சில நாளில் வாடி விடும்! ஆனா வாடாத மலர் என்றால் அது துளசி மட்டும் தானே? ஒட்டு மொத்த செடியே ஒரு வாசனைக் கொடின்னா அது துழாய்ச் செடி மட்டும் தான்! – நம்ம அத்துழாய்ப் பொண்ணும் அப்படித் தான்!
அழகும் உடையவள். அருங்குணம் என்னும் வாசமும் உடையவள்! சும்மாவா? பெரிய நம்பியின் பெண்ணல்லவா?

மகா பூர்ணர் என்ற பெயரை அழகுத் தமிழில் பெரிய நம்பி என்று ஆக்கிக் கொண்டாரே? அவரா?
ஆமாம்! அவரே தான்! இராமானுசரின் குருவாயிற்றே அவர்! அப்பாவைப் போலவே தான் பொண்ணும்!….. எளிமை ஆனால் உறுதி! அறிவு ஆனால் அடக்கம்! தமிழ்ப்பற்று ஆனால் மொழிவெறுப்பின்மை!

அன்று மார்கழி மாதம் 18 ஆம் நாள்….
அத்துழாய் காலையில் எழுந்து நீராடி, வீதியில் கோலமும் போட்டு, வீட்டுக்குள் வேலையும் முடித்து விட்டாள்.
தன்னை மிகவும் அழகாக அலங்காரம் செய்து கொண்டாள். கூந்தலில் வாசனைத் தைலம் பூசி, நெற்றிச் சுட்டி பளபளக்க, கைவளைகள் கலகலக்க, இதோ…தோழியரோடு பந்தாட்டம் ஆடப் புறப்பட்டு விட்டாள்! காலங்காத்தால அப்படி என்ன ஒரு பொண்ணுக்குப் பந்தாட்டம் வேண்டிக் கிடக்கு? – இப்படிக் கேட்க அவளுக்கு அம்மா இல்லை!
அட, இது என்ன வீதியில் ஒரே சத்தம்!
யாரோ கும்பலாகப் பாட்டு பாடிக் கொண்டு அல்லவா வருகிறார்கள்? அதுவும் தாள ஓசைகளோடு தமிழ்ப் பாட்டு அல்லவா ஒலிக்கிறது!
ஓ…சீடர்களோடு, உடையவர் வருகிறார் போலும்! அது என்ன உடையவர்?
யாருக்கு உடையவர்? எதற்கு உடையவர்?? – அரங்கனின் செல்வம் அத்தனைக்கும் உடையவர்!
அரங்கனின் செல்வம் நாம் தானே! – அப்படின்னா நமக்கு உடையவர்! நம்மை உடையவர்!
நம் நன்றிக்கு உடையவர்! வேதங்களைப் பேதங்கள் பார்க்காது அனைவருக்கும் பொதுவாக ஆக்கி வைத்த இராமானுசர், சீடர்களோடு வீதியில் வந்து கொண்டிருக்கிறார். துறவிக்கு உரிய நோன்பான இரத்தல் நோன்பின் படி, பிட்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
அச்சோ பாவம்…அவருக்கு விஷயம் தெரியாது போலும்!
ஆலயத்துக்கும் தமிழுக்கும் தான் செய்யும் சீர்திருத்தங்கள் சிலருக்குப் பொறுக்கவில்லை! குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்! பின்னொரு நாள் பிட்சை உணவில் விஷம் கலக்கப் போகிறார்கள் என்பதை அப்போது அவர் அறிந்திருக்க மாட்டார் தான்! அது தனிக்கதை! இப்போது நாம் இந்தக் கதைக்கு வருவோம்.
எவ்வளவோ வேதங்களும் பாசுரங்களும் அறிந்திருந்தாலும், இவருக்குக் கோதையின் தமிழில் மட்டும் ஏன் அப்படி ஒரு காதலோ தெரியலையே! என்னமோ இவர் பெத்த பொண்ணு பாட்டெழுதினா மாதிரி, அப்படி என்ன பெருமிதம் வேண்டிக் கிடக்கு? ஓய்வு நேரங்களில் கூட, வாய் மட்டும் திருப்பாவைப் பாடல்களை முணுமுணுத்தபடியே இருக்கே!
இது சீடர்களுக்கே சந்தேகம் தான், இருந்தாலும் யாரும் ஒன்னும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை! அன்றும் இதே நிலைமை தான்….திருப்பாவை பாடிக் கொண்டே ஒவ்வொரு வீடாக வருகிறார்கள்.
முதல் வீட்டில், ஒரு புது கல்யாணப் பெண்! புகுந்த வீட்டின் அரிசிப் பானையில் இருந்து ஒரு கைப்பிடி கொட்டி வணங்குகிறாள்.
உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன் மத யானையின் பலம் கொண்டவன், நீங்காத தோள் வலிமை கொண்டவன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் அந்த நந்தனின் மருமகளே! புகுந்த வீட்டில் ஒரு அப்பா! அவரின் திருமகளே! நப்பின்னையே!
அப்படியே பாடிக் கொண்டே செல்கிறார்கள்; அடுத்த வீடு பூட்டி இருக்கு! யாத்திரைக்குப் போய் இருப்பாங்க போல! அதுக்காக உடனே அடுத்த வீதிக்கு எல்லாம் போய் விடக் கூடாது! – நோன்பை மாற்றிக் கொள்ள முடியுமா? இந்த நாள், இத்தனை வீடுகளில், இந்த அளவுக்குத் தான் பெற வேண்டும் (ஒரு கைப்பிடி) என்பது நியமம் ஆயிற்றே!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வாசனை வீசும் கூந்தல் உள்ள பெண்ணே! நடை திறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
காலையில் சேவல்கள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன!
சீடர்கள் நகர்கிறார்கள்…
அடுத்த வீடு, மிகவும் எளிமையாய் அழகாய் இருக்கு! பச்சை வர்ணம் பூசி இருக்காங்க! பார்த்தாலே பரவசம்! முகப்பில் மாதவிப் பந்தல்!மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!
மாதவி மலரின் கொடிகள் (செண்பகப்பூ) அந்தப் பந்தலில் அடர்த்தியாகப் படர்ந்துள்ளன. அதில் குயில்கள் எல்லாம் கூவுகின்றனவே!
அந்த வீட்டில் திருச்சின்னங்கள் துலங்குகின்றன! இனிமையான செண்பகப் பூக்களின் வாசம்! வாசற்படியில் மஞ்சள் குங்குமம் எல்லாம் பூசி வைத்துள்ளனர். கிராமத்து ரேழி தெரிகிறது!
பந்தார் விரலி நின் மைத்துனன் பேர் பாட
பூப்பந்தை விரல்களில் உருட்டிக்கொண்டு வரும் பெண்ணே…உன் கணவன் பேரை நாங்கள் பாடிக் கொண்டே வந்திருக்கிறோம்.
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
உன் தாமரைப் பிஞ்சுக் கைகளால், வளையல்கள் எல்லாம் ஜல்ஜல், கல்கல் என்று ஒலிக்க….
வந்து திறவாய் மகிழ்ந்தே! ஏல்-ஓர் எம்பாவாய்!
பாட்டு முடியவும், அட இது என்ன விந்தை… கதவு மெய்யாலுமே கல்கல் ஜல்ஜல் ஓசையுடன் திறக்கிறதே!
அதே மாதவிப் பந்தல் இங்கும் இருக்கே!
அதே கந்தம் கமழும் குழலி கதவைத் திறக்கிறாளே!
அதே பந்து ஆர் விரலி, கைகளில் பூப்பந்து வைத்திருக்கிறாளே!
அதே செந்தாமரைக் கையால், சீரார் வளை ஒலிகள், கலகல சலசல என்று ஒலிக்கிறதே! அதோ, அந்தப் பெண் அத்துழாய் நிற்கிறாள் ஆகா…இது அத்துழாயா? இல்லை நப்பின்னைப் பிராட்டியா? அதே வளையோசை…கலகல கலவென!
வளையோசை கலகல கலவெனக் கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது!
சிலநேரம் சிலுசிலு சிலுவெனச் சிறகுகள் படபட துடிக்குது எங்கும் தேகம் கூசுது!!
சின்னப் பெண் பெண்ணல்ல, கண்ணன் காதல் பூந்தோட்டம்!
இந்தப் பெண் நப்பின்னை, இவள் தமிழ்த் தேரோட்டம்…!!
தாயாரை அடிக்கீழ் வீழ்ந்து சேவிப்பது போல், நடுத்தெருவில் கீழே விழுந்தார் உடையவர்! அப்படியே மயக்கம் போட்டுக், கீழே சரிந்து விட்டார் இராமானுசர்! மூர்ச்சையானார்!
சீடர்கள் எல்லாம் பதறிப் போய் விட்டனர்! விசிறுகின்றனர். கமண்டல நீர் தெளிக்கிறார்கள்! அத்துழாய் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடுகிறாள்! அப்பா…அப்பா…ஜீயர் என்னைச் சேவித்தார், ஜீயர் என்னைச் சேவித்தார்! கீழே விழுந்து விட்டார்…பயமா இருக்கு! வாங்கப்பா வாங்க!
பெரிய நம்பிகள் உள்ளே பூசையில் இருந்தவர், போட்டது போட்டபடி, வெளியில் ஓடி வர…
கீழே கிடப்பது சீடன்! சீடன் என்றாலும், இன்று சீரங்கத்துக்கே அவன் தான் தலைவன்! சீடனின் மனதை நன்கு அறிந்த குருவாயிற்றே நம்பிகள்! உடனே புரிந்து கொண்டார்!
பயப்படாதீங்க! இதோ மூர்ச்சை தெளியுது பாருங்க! இன்னும் நல்லா விசிறுங்க!…..ராமானுஜா! ராமானுஜா!
ராமா….என் கண்ணா, எழுந்திரு என்று தோளைத் தட்டி அழுத்திப் பிடிக்கிறார்.
“உந்து மத களிற்றன்” என்ற பாசுரம் சேவித்துக் கொண்டு வந்தாயா நீ?
உனக்குச் சீரார் வளை ஒலிக்கக் கதவைத் திறந்தவள் நப்பின்னைப் பிராட்டி என்று சேவித்து வீழ்ந்தாயோ? அவள் என் செல்லப் பெண் அத்துழாய், ராமானுஜா! பார்… கண் விழித்துப் பார்! கோதையின் தமிழ்க் கவியில் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு அப்படி ஒரு ஈடுபாடா?
உடையவர் சித்தம் தெளிந்தார்.
சற்றே நாணத்துடன் எழுந்து உட்கார்ந்தார். சூடான பால் சிறு குவளையில் தரப்பட்டது! மயக்கம் கலைந்து, முக்கோலை (துறவிகள் கையில் உள்ள திரிதண்டம் என்னும் குச்சி) மீண்டும் கையில் பிடித்தார்!
பெரிய நம்பிகளை வாஞ்சையுடன் வணங்கினார். இருவரும் அச்சோ என்று சிரித்துக் கொண்டனர்!
இராமானுசர், அத்துழாயை ஒரு கனிவான பார்வை பார்த்தார். நாளை அவள் மணமாகிப் போகும் போது அவளுக்கு ஒரு பெரும் சீதனம் தரப் போகிறாரே!
பின்னாளில் ஆண்களுக்கு இணையாக, பெண்களும் ஆன்மீகப் பணிகள் செய்யலாம் என்று ஒரு நிலையை உருவாக்கப் போகிறார் அல்லவா உடையவர்!
அப்போது அரங்கனின் அணியில் திரண்ட பல பெண்களில் ஒரு வைரமாக மின்னப் போகிறாள் இந்தத் துளசி என்னும் அத்துழாய்!
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் நளினி கோபாலன் அவர்கள்.