July 6, 2019

powerful sounds are called mantra

By Tamil

சக்தி வாய்ந்த ஒலிகளுக்கு மந்திரம் என்று பெயர். அந்த ஒலிகளை நாம் ஓதி நமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு முறை சொன்னால் போதாது. மீண்டும் மீண்டும் சரியான உச்சரிப்புடன் சொல்ல வேண்டும். சரியான உச்சரிப்புடன் சில ஒலிகளை நாம் தொடர்ந்து சொல்லி வருவதற்குத்தான் ஓதுதல் என்று பெயர். இதைத்தான் தமிழ் மூதாட்டி ஒளவையார் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்கின்றார். சக்தியுள்ள நாயன்மார்களின் பாடல்களை இசைப்பவர்களையும் ஓதுவார் மூர்த்திகள் என்கின்றோம்.

மந்திர சாஸ்திரம் என்று தனியான சாஸ்திரம் உள்ளது. அதில் பலவிதமான மந்திரங்கள் உள்ளது. இந்த இந்த மந்திரங்களை இன்ன இன்ன பலன்களை உத்தேசித்து இவ்வளவு நாட்கள் தினமும் இவ்வளவு முறைகள் இந்த திசையை நோக்கி உச்சரித்து வர, பலன் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல் சில கெட்ட தேவதைகளின் மந்திரங்களும் உண்டு. இந்த மந்திரங்களை பில்லி, சூனியம், அபிச்சாரம் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள். மற்றும் சில மந்திரங்களை ஜபம் செய்து ஒருவருடைய வாழ்க்கையில் நடந்ததை தெரிந்து கொள்ள முடியும். நாம் வாழ்க்கையில் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கும் அநேக மந்திரங்கள் உள்ளன. நாம் முக்தியை அடைவதற்கான மந்திரங்களும் உள்ளன.

கலியுகத்தில் ஜபம் ஒன்றினால்தான் ஒருவருக்கு வெற்றி. சிவன் கோவில்களின் பிரகாரத்தில் நடனமாடக்கூடிய பிள்ளையார் உண்டு. அவருக்கு நர்த்தன கணபதி என்று பெயர். இந்த பிள்ளையாரின் கைகளில் ஜபமாலை உண்டு. திருச்செந்தூர் செந்தில்வடிவேலன் கைகளிலும் ஜபமாலை உண்டு. கன்னியாகுமரியில் உள்ள தேவியின் கைகளிலும் ஜபமாலை உண்டு. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியின் கைகளிலும் ஜபமாலை உண்டு. சரஸ்வதி கைகளிலும் ஜபமாலை உண்டு.

இந்த தெய்வங்கள் எல்லாம் நாமும் ஜபம் செய்ய வேண்டும் என்பதைத்தான் குறிப்பால் உணர்த்துகின்றன. மந்திரங்கள் எல்லாம் பெரியதாகவும் கடினமாகவும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிறியதாகவும் இருக்கலாம். எளிமையாகவும் இருக்கலாம். ஒரு நாட்டையே அழித்துவிடக்கூடிய அணுகுண்டு மிகவும் சிறியதாகத்தானே உள்ளது. பெரிய அளவு உள்ள தெய்வ வடிவங்களை பூஜை செய்வதால் பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்றால் நாம் மலைகளை பூஜை செய்யலாமே! பலன் என்பது தெய்வங்களின் அளவைப் பொறுத்து அமைவதில்லை.

நம்முடைய நம்பிக்கையையும் பொருத்தே அமைகின்றது. மந்திரங்களில் எளிமையான ஒரு மந்திரம் ‘ராம’ என்ற மந்திரமாகும். தசரதருடைய புதல்வனுக்கு ‘ராம’ என்ற மந்திரத்தின் பெயரைத்தான் வசிட்டர் சூட்டினார். ‘ரா’ என்பது மூலாதாரம். ‘ம’ என்பது தலையின் உச்சியில் உள்ள ஆயிரம் இதழ் இடத்தைக் குறிக்கும். ‘ராம’ என்ற மந்திரத்தை ஜபம் செய்து வந்தாலே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி கிளம்பி, தலை உச்சிக்குச் சென்று விடும். ராம நாமத்தைச் சொல்லி வந்தாலே ஆத்ம ஞானம் ஏற்படும். ராமர் கூட இலங்கையை அடைவதற்கு பாலம் கட்டிச் சென்றார்.

ஆனால் ஹனுமாரோ ராம நாம பலத்தினால் கடலையே தாண்டிவிட்டார். ஆனால் உடனே, ‘ராம என்று சொன்னேனே; எனக்கு ஒன்றும் நடக்கவில்லையே’ என்று கேட்கக் கூடாது. ஒரு விதையைப் போட்டால் அது முளைத்து, செடியாகி, மரமாகி, பூத்து, பிஞ்சுவிட்டு, காயாகி, பழமாகின்ற வரையில் பொறுத்திருக்க வேண்டும். அதுபோல், நாம் ஜபம் செய்யும் மந்திரத்தை பொறுமையுடன் அது சித்தியாகும்வரை ஜபம் செய்து கொண்டே வர வேண்டும். ‘ராம’ மந்திரத்திற்கு தாரக மந்திரம் என்று பெயர். ‘தாரகம்’ என்றால் என்ன? ‘தாரகம்’ என்ற சொல்லுக்கு தாண்டவிடுவது என்று பொருள். எதில் இருந்து தாண்ட விடுவது? பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து தாண்டவிடுவது என்று பொருள்.

கம்பநாட்டாழ்வர், அருட்பிரகாச வள்ளலார் போன்றவர்களும் ராம நாமத்தின் பெருமையை பாடியுள்ளார்கள். பெரிய கடுமையான தவம் செய்து தானே நாம், பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட முடியும். ‘ராம’ நாமம் மட்டும் சொன்னால் அது எப்படி நடக்கும் என்ற கேள்வி எழலாம். ஆயிரம் வருடங்கள் ஆன ஆலமரத்தை கீழே சாய்ப்பது எவ்வளவு கடினம். அதற்கு எவ்வளவு முயற்சியும், உபகரணங்களும் தேவைப்படும் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் அந்த மரத்தை மென்மையான கரையான்களும் அரித்து கீழே தள்ளிவிடுகின்றனவே! அதுபோல்தான் மென்மையான, எளிமையான ராம நாமமும் நம்முடைய பாவத்தையெல்லாம் அரிக்கக்கூடியது.