January 3, 2019

சிகாகோ சொற்பொழிவு

By Tamil

சிகாகோவில் நடைப்பெற்ற சர்வ சமயப் பேரவை: கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து நடத்தினார்கள், ஒவ்வொரு பிரிவிலும் நிகழ்ச்சிகள் இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் நடைபெற்றது. அந்தச் சொற்பொழிவுகளில் 4000-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள்.

 1. யூத மதம், 2. கிறிஸ்துவ மதம், 3. இஸ்லாம் மதம், 4. பவுத்த மதம், 5. தாவோ மதம், 6. கன்ஃபூசியஸ் மதம், 7. ஷிண்டோ மதம், 8. ஜொராஷ்டிரிய மதம், 9. ஜைன மதம், 10. இந்துமதம் ஆகிய மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்துகொண்டார்கள்.

1893-செப்டம்பர் 11 ஆம் தேதி, காலை 10 மணிக்கு சிகாகோ சர்வ சமயப் பேரவை துவங்கியது. அதில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு, தன் குரு ஸ்ரீராமகிருஷ்ணரையும், கல்விதேவதை சரஸ்வதியையும் நினைத்து பிரார்த்தனை செய்தார். அதன்பின்பு அவர் அமெரிக்க நாட்டின் சகோதரிகளே! சகோதரர்களே! என்று கூறி, தன் சொற்பொழிவைத் துவக்கினார். அந்தச் சொற்களில் அவரது எல்லையற்ற ஆன்மிக வலிமையும் சேர்ந்து வெளிபட்டது. சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அவர் சகோதரிகளே சகோதரர்களே! என்று கூறியதன் மூலம், உலகம் முழுவதும் ஒரே குடும்பம்- எல்லோரும் உறவினர்கள்-வசுதைவ குடும்பகம் என்ற இந்தியச் சிந்தனையை வெளிப்படுத்தினார்.

அவ்வளவுதான்! சிஸ்சட்ர்ஸ் அன்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்ற சுவாமி விவேகானந்தரின் இந்த ஓரிரு சொற்கள். அங்கு ஓர் அற்புதத்தையே நிகழ்த்திவிட்டது! ஆம் இந்தச் சொற்களைக் கேட்டு, அங்கிருந்த ஆயிரக் கணக்கான மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. அவர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து உற்சாகத்துடன் கைதட்டி விடாமல் தொடர்ந்து கரவொலி எழுப்பினார்கள்.

சுவாமி விவேகானந்தர் சிஸ்சட்ர்ஸ் அன்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்று கூறியதைக் கேட்டு, அவையில் இருந்த மக்கள் அத்தனை பேரும் ஆர்வத்துடன் தங்களை மறந்து இரண்டு நிமிடங்கள் காது செவிடாவதுபோல் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சுவாமிஜி இடையில் பேசுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அங்கு அப்போது இருந்த கரவொலி காரணமாக அவரால் பேச முடியவில்லை.

ஒருவாறு கரவொலி ஓய்ந்ததும், சுவாமிஜி தன் உரையைத் தொடர்ந்தார். ஆங்கிலத்தில் சுவாமிஜி இந்தச் சொற்பொழிவை நான்கு நிமிடங்கள்தான் செய்தார். நான்கு நிமிடங்கள் கொண்ட இந்த சொற்பொழிவு, 15 வாக்கியங்களையும் 473 சொற்களையும் கொண்டிருந்தது. சுவாமிஜி செய்த அதே 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி தற்செயலாக இந்தியாவில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நாளாக அமைந்தது.

இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு பிள்ளையார் சுழியாக அமைந்த, சுவாமிஜியின் அந்தச் சொற்பொழிவு சிறிய ஒரு சொற்பொழிவுதான் ஆனால் அந்தச் சொற்பொழிவில், அவர் இறைவனின் பிரதிநிதி என்பதற்கு உரிய முத்திரை இருந்தது; ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த மெய்ஞ்ஞானிகளின் தலவலிமை அவரது பேச்சில் வெளிப்பட்டது. அவரது சொற்பொழிவு பேரவையில் கூடியிருந்த மக்கள் மனதில் நன்கு பதிந்து, மகத்தான வரவேற்பைப் பெற்ற ஒரு மகத்தான சொற்பொழிவாயிற்று.

மறுநாள் எல்லாப் பத்திரிகைகளும், சர்வ சமயப் பேரவையில் நிகழ்ந்த சொற்பொழிவுகள் எல்லாவற்றிலும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுதான் வெற்றிகரமானது என்று செய்திகள் வெளியிட்டன. எனவே சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுதான் வெற்றிகரமானது என்று செய்திகள் வெளியிட்டன. எனவே சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானார்.

தி நியூயார்க் ஹெரால்டு பத்திரிக்கை சர்வ சமயப் பேரவையில் முதல் பெருமை வாய்ந்தவர் சுவாமி விவேகானந்தர் என்பதில் ஐயமில்லை. அவரது சொற்பொழிவைக் கேட்ட பிறகு, கல்விச் சிறப்பு (ஆன்மிக ஞானம்) உடைய இத்தகைய ஒரு நாட்டிற்கு கிறிஸ்துவ மதப் பிரச்சாரகர்களை அனுப்புவது முட்டாள்தனம்? என்று புரிகிறது என்று செய்தி வெளியிட்டது.

சுவாமி விவேகானந்தர், சொற்பொழிவு செய்வதற்கு என்று இறைவனிடமிருந்து ஆணை பெற்று வந்திருக்கிறார் என்று நியூயார்க்ரிடிக் பத்திரிகை செய்தி வெளியிட்டது. மறு நாள் சிகாகோ நகர வீதிகளில் பல இடங்களில் சுவாமிஜியின் ஆளுயர படங்கள்- சுவரொட்டிகள் வைத்திருந்தார்கள். அவற்றின் கீழ் ஹிந்து சந்நியாசி விவேகானந்தர் என்ற எழுத்துக்கள் இருந்தன. சிகாகோ நகர வீதிகளில் சென்றவர்கள், தலைகுனிந்து கைகூப்பி சுவாமி விவேகானந்தரின் படத்தை வணங்கிவிட்டுச் சென்றார்கள். சிகாகோ சர்வசமய பேரவைக் கூட்டங்கள் பழினேழு நாட்கள் நடந்தன. அவற்றில் சுவாமிஜி பலமுறை பேசினார்.

இவற்றில் செப்டம்பர் 11,15, 19, 20 26, 27 தேதிகளில் நிகழ்த்திய ஆறு சொற்பொழிவுகள் மட்டும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த ஆறு சொற்பொழிவுகளிலும் முதல் நாள் செப்டம்பர் 11-ஆம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவும், மூன்றாம் நாள் செப்டம்பர் 19 ஆம் தேதி இந்துமதம் என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவும் நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கின்றன.

இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது. விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.

அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். 1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார். உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் மெட்காப் என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் இந்தியப் பெண்கள் என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும். பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.

இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார். செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது. பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.

சகோதர சகோதரிகளே! என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார். ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது. அந்தக் கூட்டத்தில் மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள். இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது, “அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன.

அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும் என்று விவேகானந்தர் முழங்கினார். விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர். விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.

புத்தமதம் இந்துமதத்தின் நிறைவு

(சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 26 ஆண் நாள் நகழ்த்தி சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதி)

 1. மதத்திற்கு ஜாதியில்லை, ஜாதி என்பது வெறும் ஒரு சமுதாய ஏற்பாடுதான்.
 2. பகவான் புத்தர் வேதங்களில் மறைந்திருந்த உண்மைகளை வெளியே கொண்டு வந்து, அவற்றை உலகம் முழுவதும் தாராளமனதுடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர்.
 3. பகவான் புத்தர் எல்லோரிடமும் குறிப்பாக- பாமரர்களிடமும் ஏறை எளியவர்களிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர்.
 4. புத்தரின் பிராம்மணச் சீடர்களில் சிலர், அவரது உபதேசங்களை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினார்கள். அதற்கு புத்தர் நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள். என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் அதனால்தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சுமொழியில் இருக்கிறது.
 5. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை என்ற கூறுகிறார்.
 6. புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அது போலவே இந்து மதம் இல்லாமல் புத்த மதமும் வாழ முடியாது.

நிறைவு நாள் : (சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 27 ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதி)

 1. ஆன்மிக ஒருமைப்பாடு ஏதாவது ஒரு மதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும்தான் கிடைக்கும் என்று இங்குள்ள யாராவது நம்பினால்- அவரிடம் நான் சகோதரரே! உங்களுடைய நம்பிக்கை வீண்! என்று சொல்லிக்கொள்கிறேன்.
  கிறிஸ்தவர் இந்துவாகிட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் அதைத் தடுப்பாராக! அல்லது இந்துவோ பவுத்தரோ கிறிஸ்தவராக வேண்டும் என்று நான் நினைக்கிறேனா? கடவுள் அதைத் தடுப்பாராக!
 2. ஒரு விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ, ஆகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி நியதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தன்னுடையதாக்கிக்கொண்டு. அது தனக்கு வேண்டிய சத்துப்பொருளாக மாற்றி, ஒரு செடியாக வளர்க்கிறது.
  இதுவே மதத்தின் நிலையாகும். கிறிஸ்தவர், இந்துவாகவோ பவுத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து பவுத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியதில்லை.

ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தங்களுடைய தாக்கிக்கொண்டு, தங்கள் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு தங்கள் வளர்ச்சி நியதியின்படி வளர வேண்டும்.

 1. இந்த சர்வசமயப் பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக் காட்டியிருக்கிறது என்றால் அது இதுதான்.

புனிதம், தூய்மை, கருணை ஆகியவை உலகின் எந்த ஒரு மதப்பிரிவுக்கும் தனிச்சொத்து அல்ல என்பதையும், மிகச் சிறந்த ஒவ்வொரு மதப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்திருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறது.

 1. தன் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு கண்டால், அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து இரக்கப்படுகிறேன். மேலும் அவர்களுக்கு நான், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், உதவி செய் சண்டை போடாதே! ஒன்றுபடுத்து, அழிக்காதே! சமரசமும் சாந்தமும் வேண்டும். வேறுபாடு வேண்டாம்! என்று எழுதப்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்திரக்கைகளின் பார்வையில் சுவாமி விவேகானந்தர்

 1. சுவாமி விவேகானந்தர் குறிப்புகள் எதுவும் வைத்துக் கொள்ளாமலேயே பேசுகிறார். அவரது சொல்வன்மை கேட்பவரின் மனதைப் பரவசப்படுத்தி ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நியூயார்க் க்ரிடிக்
 2. சுவாமி விவேகானந்தர் மேடையில் வந்தபோதே அவையினரே வென்றுவிட்டார். ஒருவர் கண்கள்கூட அவரைவிட்டு விலகவில்லை. அவர் பேச ஆரம்பித்தபோது அவரது இதயத்திலிருந்து ஆற்றல் வாய்ந்த சொற்கள் வந்தபோது அவரது சக்தி இரண்டு மடங்காகியது. இந்துக்களின் வேதமதத்தைப் பற்றிக் கேட்ட அவையினர் அப்படியே சிலைகள்போல் சமைந்து நின்றனர். -இண்டியன் மிரர்
 3. அமெரிக்காவில் சுவாமி விகோனந்தரின் பணியின் விளைவு எதுவாக இருந்தாலும் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. அவர் நாகரீகம் வளர்ச்சியடைந்த அமெரிக்க நாட்டு மக்களின் கண்களில் உண்மையான இந்துமதம் என்ன என்பதை எடுத்துக்காட்டிவிட்டார். அதன் மதிப்பை அவர்களின் உள்ளத்தில் உயர்த்திவிட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த ஒரு பணிக்காகவே இந்து சமுதாயம் சுவாமி விவேகானந்தருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது. -இண்டியன் மிரர்
 4. சுவாமி விவேகானந்தர் சர்வ சமய பேரவையில் ஒரு பேரபிமானப் புள்ளியாகிவிட்டார். இவர் மேடையைக் கடந்து சென்றாலே. அவையில் இருப்பவர்கள் கரவொலி செய்கிறார்கள்.

மக்கள் கூட்டத்தின் முடிவு வரையில் இருக்க வேண்டும் என்பதர்காக, நிர்வாகிகள் விவேகானந்தரைக் கடைசி வரை பேச விடமாட்டார்கள். மற்றவர்கள் மணிக்கணக்காகப் பேசும்போது, விவேகானந்தர் கடைசியில் ஒரு பதினைந்து நிமிடப் பேசப் போகிறார்! என்பதற்காக, புழுக்கத்தில் விசிறிக்கொண்டிருக்கும் நாலாயிரம் மக்களுக்கு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் காத்துக்கொண்டிருப்பார்கள். -போஸ்டன் ஈவினிங்ட்ரான்ஸ்க்ரிப்ட்

*சுவாமி விவேகானந்தரின் பணிகளால் இந்துமதம் எழுச்சி பெற்றிருக்கிறது. அதன் ஆற்றல்கள் புத்துணர்வு பெற்றிருக்கின்றன. ஆங்கிலமயமாக்கப்பட்ட. சாரம் இல்லாத ஒன்றையே இந்துமதம் என்று இது வரையில் அமெரிக்கர்கள் அறிந்திருந்தார்கள். சுவாமி விவேகானந்தர் மூலமாக உண்மையான இந்துமதம் அவர்களுக்குக் கிடைத்தது. அவரை அனுப்பியதற்காக அமெரிக்கா, இந்தியாவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்துமதத்தின் பிரதிநிதியாக வந்திருந்த சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேரவையில் மிகவும் முக்கியமானவர் அவரே பேரவையில் மிகவும் ஆதிக்கம் செலு<த்தியவர். கிறிஸ்துவ மதம் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த சொற்பொழிவாளர்களைவிட, அவரது சொற்பொழிவை அவையினர் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். அவரது ஒவ்வொரு வார்த்தையையும் மக்கள் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டார்கள். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. -மெர்வின் மேரி ஸ்னெல், தலைவர் விஞ்ஞானப் பிரிவு சர்வ சமயப் பேரவை

*சுவாமி விவேகானந்தர் சர்வ சமயப் பேரவைச் சொற்பொழிவுகளைக் கேட்டவர்கள் மீது ஓர் அதிசயமான ஆதிக்கம் செலு<த்தினார்…. இந்தப் பேச்சாளர் ஓர் உயர் ஜாதி, இந்து வைதீக இந்துமதத்தின் பிரதிநிதி சர்வ சமயப் பேரவையில் கூட்டம் கூட்டமாக மக்களைக் கவருவதில் மிகவும் முக்கியமான ஒருவராக அவர் திகழ்ந்தார் -டாக்டர் பரோஸ் தலைவர் சர்வ சமயப் பேரவை

*எல்லா விதத்திலும் சர்வ சமயப் பேரவை ஒரு வெற்றியாக அமைந்தது…. இதில் அனைவரையும் அடியோடு கவர்ந்தவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ நகரையே அவர் அடிமை கொண்டுவிட்டார். -மிஸ் மன்றோ

*சிகாகோவில் இந்துக்களின் சமயக் கொள்கைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் சுவாமிஜி. அவர் பேசி முடிக்கும்போது இந்துமதம் உருவாக்கப்பட்டிருந்தது.

-சகோதரி நிவேதிதை.