January 3, 2019

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 10

By Tamil

நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள். அனைத்திலும் முதற்பாவமாகும். நானே முதலில் உண்பேன் . மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும் , எல்லாம் எனக்கே வேண்டும் மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி.

சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் சிறத்தைதயப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலுமும் அவன் சிவ பெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

இந்த நாட்டின் அருமையான ஆன்மீகப் புதையல்களுள் பாதி திருடப்பட்டுவிட்டது, நாம் அவற்றை இழந்துவிட்டோம்.மறு பாதியோ, தானும் தின்னாமல் பசுவையும் தின்ன விடாமல் வைக்கோற்போரைக் காவல் செய்யும் நாய்களைப் போன்ற சிலரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது.

லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை

நீ பற்றற்றிரு மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே. ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது.

ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.

உலகிற்கு நன்மை செய்தால், நமக்கு நாமே தான் நன்மை செய்து கொள்கிறோம்.

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.

* தேவையற்ற விஷயங்களிலும், வீண்வதந்திகளிலும் மனதை அலட்டிக் கொள்வதால் நம் ஆற்றல் சிதறி வீணாகிறது. எப்போதும் ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள்

நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.

ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-22

மனிதனுக்கு வெறும் நம்பிக்கை போதாது, அறிவு பூர்வமான நம்பிக்கை வேண்டும்.

இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், வழிவழியாகத் தாங்கள் பின்பற்றிவரும் மதக் கருத்துக்களைத் தவிர, மற்றவை எதுவும் சரியானவை அல்ல என்ற எண்ணம் இருப்பது, மனிதனின் மனத்தில் இன்னும் பலவீனம் எஞ்சியுள்ளதையே காட்டுகிறது. அத்தகைய கருத்துக்களை விட்டுவிட வேண்டும்.

அத்வைதம் பொதுமக்களிடையே பரவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. முதலில் சில துறவிகள் மட்டுமே அத்வைதத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அதனைக் காட்டிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள். இந்தியாவை உலோகாயதத்திலிருந்து காப்பாற்றக் கூடியது அத்வைதம் ஒன்றுதான்

புத்தருக்கு முன்னால் இருந்த உலோகாயதம் வளர்ச்சியடையாத, பக்குவப்படாத ஒன்றாக இருந்தது நன்றாகச் சாப்பிடுங்கள், குடித்துக் கும்மாளமிடுங்கள். கடவுள், ஆன்மா, சொர்க்கம் என்றெல்லாம் எதுவும் இல்லை. தீய நோக்கம் கொண்ட புரோகிதர்களின் கட்டுக் கதையே மதம் என்றெல்லாம் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் . உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக வாழ வேண்டும், கடன் வாங்கியாவது சாப்பிட வேண்டும். கடனைத் திருப்பிக் கொடுப்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை- இதுதான் பழைய உலோகாயதக்கொள்கை. அன்று இந்தக் கொள்கை மிகவும் அதிகமாகப் பரவியிருந்தது.

புத்தர், வேதாந்தத்தை வெளியே கொண்டுவந்து, மக்களிடையே பரப்பி இந்தியாவைக் காப்பாற்றினார். அவர் மறைந்து ஆயிரம் வருடங்களுக்குப் பின், மீண்டும் எல்லாம் பழையபடியாயிற்று. பாமர மக்கள் கூட்டமும் பல்வேறு இன மக்களும் எல்லோரும் புத்த மதத்தைத் தழுவியிருந்தார்கள். மக்களில் பலர் அறிவற்றவர்களாக இருந்ததால் புத்தரின் போதனைகளுக்குக் காலப்போக்கில் வீழ்ச்சி ஏற்பட்டது.

கடவுள், பிரபஞ்சத் தலைவராகிய இறைவன் என்று எதையும் புத்தர் போதிக்கவில்லை. எனவே மக்கள் சிறிதுசிறிதாக, தங்கள் தெய்வம், பேய் பிசாசுகள் என்று பலவற்றை மறுபடியும் புத்த மதத்தில் புகுத்தி, அதை ஒரு குழப்பக் குட்டையாக்கிவிட்டார்கள். அதன் காரணமாக உலோகாயதம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியது.

அந்த வேளையில் ஆதி சங்கரர் தோன்றி வேதாந்தத் தத்துவத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார்; அதைப் பகுத்தறிவுக்கு ஏற்புடைய ஒரு தத்துவமாகச் செய்தார்.

ஐரோப்பாவில் இன்று உலோகாயதம் தான் வழக்கில் இருக்கிறது. ஐரோப்பாவின் ஆன்மிக விழிப்பிற்கு அறிவுபூர்வமான ஒரு மதம்தான் தேவை. இரண்டற்ற ஒன்றேயான நிர்க்குண பிரம்மக் கருத்தைப் போதிக்கும் அத்வைதம் ஒன்றுதான், அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் மக்களுக்குத் திருப்தி அளிக்ககூடியதாக இருக்கிறது.

தர்மம் மறைந்தது போலாகி, அதர்மம் தலைதூக்குவது போல் தோன்றும் போதெல்லாம் அத்வைதம் வருகிறது. அதனால்தான் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேர்பிடித்திருக்கிறது.

புத்தரிடம் உலகத்தையே தழுவக்கூடிய இதயத்தையும் எல்லையற்ற பொறுமையையும் காண்கிறோம். மதத்தைச் செயல்முறைப்படுத்தி வீடுதோறும் கொண்டு சென்றவர் அவர். சங்கரரிடம் மகத்தான அறிவுத்திறனைக் காண்கிறோம். எல்லாவற்றையும் பகுத்தறிவு என்னும் தீவிர ஒளியினால் அவர் ஆராய்ந்தார்.

சங்கரரின் அத்தகைய அறிவுப் பேரொளியும், புத்தரின் அன்பும் கருணையும் நிறைந்து பொங்குகின்ற எல்லையற்றுப் பரந்த அந்த அற்புதமான இதயமும் இணைந்த நிலையே இன்று நமக்குத் தேவைப்படுகிறது.

எல்லா பொருட்களும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே என்று விஞ்ஞானிகள் சொல்லும்போது, அது உங்களுக்கு உபநிடதங்கள் கூறும் கடவுளை நினைவுபடுத்தவில்லையா?-பிரபஞ்சத்திலுள் நுழையும் ஒரே நெருப்பு, பல உருவங்களாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப்போல், பரம்பொருள் ஒவ்வோர் ஆன்மாவின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோடு, இன்னும் எல்லையற்றமடங்கு உயர்ந்த நிலையிலும் இருக்கிறார். என்று உபநிடதங்கள் கூறுகின்றனவே! விஞ்ஞானம் எந்தப் பக்கம் சாய்ந்து வருகிறது என்று உங்களுக்குப் புரியவில்லையா?

இந்துக்கள் மன ஆராயச்சியின் மூலமும் தத்துவ ஆராய்ச்சியின் மூலமும் நியாயபூர்வமான ஆராய்ச்சிமூலமும் முன்னேறினார்கள். ஐரோப்பியர்கள் புற இயற்கையிலிருந்து தொடங்கினார்கள். இப்போது அவர்களும் அதே முடிவுகளுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.

* மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.

லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழுங்கள்

வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.

மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.

* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. “நான் ஒரு வெற்றி வீரன்’ என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.

* கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.

அதிர்ஷ்டதேவதை உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையில் இருந்து அணுவளவும் பிறழ்ந்து போகாமல் இருப்பதில் கவனமாக இரு.

வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.

மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள்.

மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.

உலகில் நல்லவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.

* உலகவாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்

பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்.

* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.

பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.

சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

* நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும்.

எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும்.

* ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும்.

இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கணநேரம் இன்பமாக ஏதோ கிடைக்கலாம். ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்து விடும்.

* ஆன்மிகத்தைப் புறக்கணித்து விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினால், மூன்றே தலைமுறைகளில் நம் பண்பாடு அழிந்து விடும்.

* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.

நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள்.

ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்

* சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.

* ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் வேலைகளுக்குள் கட்டுப்பட்டு விடாதீர்கள்

* வாழ்வில் மனிதன் உயர வேண்டுமானால் கடுமையான சோதனைகளைக் கடந்து சென்றாக வேண்டும்.

செல்வம் பெருகியுள்ள காலத்தில் தான் ஒருவனுக்கு பணிவு தேவை. அதே சமயம் வறுமையுற்ற காலத்தில் மனிதனுக்கு துணிவு அவசியம்.

துன்பமற்ற இன்பமும், தீமையற்ற நன்மையும் அடைவது என்பது இயலாத ஒன்று. எந்தச் செயலிலும் இன்ப, துன்பம் இரண்டும் கலந்தே இருக்கிறது.

நன்மை செய்பவன், ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து மகிழத் தயாராயிருக்கலாம்.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தை தவிர, நாம் பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியும் நம் மனதில் ஆற்றலை பெருகச் செய்பவை தான்.

மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.

அரிய செயல்கள் பெரிய உழைப்பின்றி ஒருபோதும் முடிந்ததில்லை.

காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.