January 3, 2019

சுவாமி விவேகானந்தர் 9-7-1897 ல் எழுதிய கடிதம்

By Tamil

சுவாமி விவேகானந்தர் 9-7-1897 ல் அமெரிக்காவில் உள்ள சகோதரிக்கு எழுதிய கடிதம்

அன்பு சகோதரி மேரி ஹேல்

உனது கடிதத்தில் தொனித்த மனச்சோர்வு எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. நான் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி தவறு. நானோ ஒரு துறவி எனக்கு ஜாதியே கிடையாது.இதில் ஜாதியிலிருந்து விலக்குவது எங்கிருந்து வந்தது?

நான் தெருவில் போனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ்படை அவசியமாகிவிடுகிறது என்று ஒன்று கூறினால் போதுமே! இதுவா ஜாதியிலிருந்து விலக்கப்படுவது?

அன்பார்ந்த மேரி,இந்த என் பாதங்கள் மன்னர்களின் சந்ததியினரால் கழுவி துடைக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளன.அத்துடன் இந்தியாவில் யாருக்கும் என்றும் கிடைக்காத வகையில் ஒரு வெற்றிவிழாவை இந்தநாடு நடத்தியுள்ளது

மனிதர்கள் எம்மாத்திரம்?அன்புவடிவான அவர் என்னுடன் உள்ளார். அமெரிக்காவிலும்,இங்கிலாந்திலும்,இந்தியாவில் நான் யார் என்று யாருக்கும் தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்தபோதும் அவர் எப்போதும் என்னுடன் இருந்தார். யார் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எனக்கு என்ன கவலை? சாதாரண குழந்தைகள் அவர்கள். இதற்குமேல் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

ஆன்மாவை அறிந்துள்ள நான், இந்த உலகத்தின் உள்ளீடற்ற தன்மையை உணர்ந்துள்ள நான், இந்த குழந்தைகளின் பொருளற்ற பிதற்றலுக்காக எனது போக்கிலிருந்து மாறுபடுவதா? என்னைப்பார்த்தால் நான் அத்தகையவன் என்று தோன்றுகிறதா?

என் பணி முடிந்துவிட்டது என்பதை நான் உணர்கிறேன். என் ஆயுளில் மிஞ்சிப்போனால் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. முக்திக்கான விருப்பம் முற்றிலும் என்னிடமிருந்து போய்விட்டது. உலக இன்பங்களை நான் என்றுமே விரும்பியதில்லை. என் பணி திறமையாக, ஒழுங்காக செயல்படுவதை நான் காணவேண்டும். அப்போது மனித சமுதாயத்திற்காக யாராலும் அசைக்க முடியாத அஸ்திவாரம் ஒன்றை இந்தியாவிலேனும் இட்டுள்ளேன் என்று நிச்சயமாக அறிந்தவனாக நான் துயில்கொள்வேன்.அடுத்தது என்ன என்பதை பற்றிக் கவலைப்படாமல் துயில்கொள்வேன்.

நான் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பேனாக.ஆயிரக்கணக்கான துயரங்களை அனுபவிப்பேனாக, உண்மையில் உள்ளதான ஒரே தெய்வத்தை அதாவது எல்லா உயிர்களின் தொகுப்பான அந்த தெய்வத்தை அனைத்திற்கும் மேலாக, தீயவர்களான என் தெய்வம், துயரப்படுகின்றவர்களான என் தெய்வம் ஏழையான என் தெய்வம் என்று நான் சிறப்பாக போற்றுகின்ற தெய்வத்தை வழிபடுவதற்காக பிறப்பேனாக

யார் உனது உள்ளம் புறமும் உள்ளாரோ, யார் ஒவ்வொரு கையின்மூலம் வேலை செய்கிறாரோ,ஒவ்வொரு காலின்மூலமும் நடக்கிறாரோ,நீ யாருடைய உடலோ அவரை வழிபடு (நீ வழிபட்டுக்கொண்டிருக்கும்) மற்ற எல்லா சிலைகளையும் உடை்த்தெறி

உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் யாரோ, அந்த கண்கண்ட பொருளை,அறியக்கூடிய பரம்பொருளை.உண்மைப் பொருளை எங்கும் நிறைந்த பொருளை வழிபடு, (நீ வழிபட்டுக்கொண்டிருக்கும்) மற்ற எல்லா சிலைகளையும் உடைத்தெறி

யாரிடம் கடந்தகால.எதிர்காலப்பிறவிகள் இல்லையோ, மரணமும் போக்கும் வரவும் இல்லையோ.யாரிடம் நிலைத்திருப்பதால் எப்போதும் நாம் ஒன்றாக இருந்தோமோ,இருப்போமோ அவரையே வழிபடு. (நீ வழிபட்டுக்கொண்டிருக்கும்) மற்ற எல்லா சிலைகளையும் உடைத்தெறி

ஏ முட்டாள்களே. வாழும் தெய்வங்களையும் உலகம் முழுவதிலும் உள்ள அவரது எண்ணற்ற பிரதிபிம்பங்களையும் விட்டுவிட்டு, கற்பனை நிழல்களின் பின்னால் ஓடுகிறீர்களே! கண்கூடாக காண்கின்ற அந்த இறைவனை வழிபடுங்கள் (நீங்கள் வழிபட்டுக்கொண்டிருக்கும்) மற்ற எல்லா சிலைகளையும் உடைத்தெறியுங்கள்

எனக்குரிய காலமோ குறுகியது. சிலருக்கு வேதனை தந்தாலும் சிலருக்கு எரிச்சல் ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லியே தீரவேண்டும். எனவே என் அன்பார்ந்த மேரி, எனது வார்த்தைகள் எதையும் கண்டு பயம்கொள்ள வேண்டாம். ஏனெனில் என் பின்னால் இருக்கின்ற சக்தி விவேகானந்தன் அல்ல.இறைவனே. எது நல்லது என்பது அவருக்கு தெரியும்.

உலகத்தை நான் திருப்திப்படுத்தவேண்டும் என்றால் அது உலகிற்கு துன்பம் செய்வதே ஆகும். பெரும்பான்மையோரின் முடிவு என்பதே தவறானது. ஏனெனில் அந்தப் பெரும்பான்மையோர்தான் இப்போது ஆள்கின்றனர்.அவர்கள்உலகத்தைப் பரிதாப நிலையில் அல்லவா ஆழ்த்தியுள்ளார்கள். புதிய கருத்து ஒவ்வொன்றும் எதிர்ப்பை உண்டாக்கத்தான் செய்யும்,பண்புள்ள மக்களிடம் அது மரியாதையுடன்கூடிய ஓர் இகழ்ச்சிப் புன்முறுவலை உண்டாக்கும். பாமரமக்களிடம் அது காட்டுமிராண்டித்தனமான கூக்குரலையும் அவதூறுகளையும் உண்டாக்கும்

குழந்தைநிலையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை நாங்கள் அறிந்துள்ளோம். எல்லாம் வீண், இந்த கோரமான உலகம் மாயை , துறந்துவிடுங்கள். இன்பமாக இருங்கள். காமம்,உடைமைகள் போன்ற எண்ணங்களை விட்டுவிடுங்கள். இவற்றைத்தவிர வேறு எந்த பந்தமும் இல்லை. திருமணமும், காமமும்,பணமும்தான் உயிர்வாழ்கின்ற பிசாசுகள். காமம் வேண்டாம் பொருட்களை சேர்க்க வேண்டாம். இவை கழன்று விழவிழ ஆன்மீகக் காட்சி திறக்கிறது.தனக்கே உரித்தான எல்லையற்ற ஆற்றலை ஆன்மா மீண்டும் பெறுகிறது

என்றும் அன்புடன், விவேகானந்தா