August 5, 2019

சூரிய வழிபாடு !!

By Tamil

சூரிய வழிபாடு !!

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

சூரிய பகவானின் புராண பின்னணி

சூரிய பகவான் ஓம் என்ற ஓசையில் இருந்து சூரியன் தோன்றினார் என்கிறது மார்க்கண்டேய புராணம்.

காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு புத்திரர்களே பன்னிரு சூரியர்கள் ஆனார்கள் என்கிறது பாரதம்

.சூரிய பகவான் பயன்படுத்தும் தேர் ஒரே ஒரு சக்கரம் கொண்டது, இந்த தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றது.

இந்த ஏழு குதிரைகளும் ஏழு நிறங்களில் அமைந்துள்ளது. சூரியனின் தேரை ஓட்டும் சாரதிக்கு அருணன் என்ற பெயர். மாற்று திறனாளியான அருணனுக்கு காலில் ஊணம்.

சூரியனின் தேர் மேற்கு முகமாக ஓடி மேருமலையை வலமாகச் சுற்றுகிறது.

சூரியனுக்கு உஷாதேவி, பிரத்யுஷாதேவி என்று இரு மனைவிகள்.

எமன், சனி, அசுவினித் தேவர், சுக்கிரீவன், கர்ணன் என்போர் மகன்கள்.

யமுனை, பத்திரை இவர்கள் இருவரும் சூரியனின் மகள்கள்.

பாபக் கிரகமான சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுற்றி வர ஒரு மாத காலம் ஆகிறது.

இப்படி சூரியன் பன்னிரண்டு ராசிகளில் பன்னிரண்டு மாதங்கள் சுற்றி வருகிறார்.சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் ,வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் பகை பெறுகிறார்.

சிவப்பு மலர்களால் அர்ச்சிப்பதாலும் சிவப்பு வஸ்திரம் உடுத்திக் கொள்வதாலும்,

மாணிக்க மணியை அணிந்து கொள்வதாலும்,

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதாலும்,

கோதுமை தானியத்தைத் தானம் செய்வ தாலும்,

சூரிய நமஸ்காரம் செய்து வருவதாலும் சூரியனால் ஏற்படும் கிரக தோஷங்கள் நீங்குகிறது

சூரிய பகவானை ஞாயிற்றுகிழமை உதய காலத்தில், கோதுமை பலகாரம், காரம் கலந்த சாதம் ஆகியவற்றை செந்தாமரை இலையில் படைத்து வழிபடுதல் சிறப்பு.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறிவு, கவிதை, கணிதம், சிகிச்சை ஆகியவற்றுக்கான கடவுளாக, அப்பல்லோ என்ற பெயரில் சூரியனை வழிபட்டனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகிய தேசங்களில் அவருக்கு ‘பெலினஸ்’ என்று பெயர்.

நமது புராணங்கள் ஞானம், பேராற்றல், அழகு ஆகியவற்றின் உறைவிடமாகவும், பல்வேறு வியாதிகளைப் போக்கி, நீண்ட ஆயுள் தரும் தேவனாகவும் சூரியனைப் போற்றுகின்றன.

உபநிடதங்கள், தேவாரப் பாடல்களில் சிவ சூரியன்!

சிவனடியார்கள் சூரியனை சிவசூரியன் என்று போற்றுவார்கள். சாந்தோக்ய உபநிஷத்தும், தைத்ரிய சம்ஹிதையும் சிவபெருமான் சூரிய மண்டலத்தில் விளங்குவதைச் சிறப்புடன் குறிப்பிடுகின்றன

‘பொன்வண்ண கேசத்துடனும் தாமரை போன்ற கண்களுடனும் திகழும் புருஷர் ஞாயிறு மத்தியில் விளங்குகிறார்’ என்கிறது சாந்தோக்ய உபநிஷதம்.

இதில், சிவபெருமானைப் பற்றிய வர்ணனை நேரடியாக இல்லை.

ஆனால், தைத்ரிய சம்ஹிதை சிவபெருமானின் நீலகண்டத்தையும் செந்நிறத்தையும் சிறப்புடன் விவரிக்கிறது. ‘சூரிய மண்டலத்துள் சூரியோதய அஸ்தமனம் செய்யும்படி தோன்றுகிறார் சிவபெருமான்.

இவர் நீலகண்டமும் செந்நிறமும் கொண்டவர். சூரிய வடிவாக விளங்கும் இவரைக் கோபாலரும், மாலையில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் கண்டார்கள். பசு, எருமை முதலான உயிரினங்களும் அவரைப் பார்க்கின்றன. இத்தகைய இறைவன் எங்களுக்கு ஆனந்தம் விளைவிப்பாராக’ என்கிறது தைத்ரிய சம்ஹிதை.