January 4, 2019

செயலின் கோட்பாடு- கர்மா தியரி-விதி

By Tamil

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-25

சுவாமி பாஸ்கரானந்தர்

வட மொழியில் கர்ம வாதம் என்று சொல்லப்படும் செயலும் அதன் விளைவும் என்பதை இந்து மதம் நம்புகிறது. கர்ம என்றால் செயல் என்று பொருள்.சில சமயங்களில் செயலின் விளைவையும் குறிக்கும்.இதன் படி நற்செயல்களினால் நன்மையும் தீய செயல்களினால் தீமையும் விளையும் என்பதே அறியப்படுவது. செயல்களினால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளுமே “கர்ம பலம்” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது.ஒருவன் செய்யும் நல்ல செயல்கள் அவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தீய செயல்களைச் செய்வதால் துன்பமும் மனக்கஷ்டமும் வரும். பௌதிகம் நமக்கு சக்தியின் சேமிப்பு க் கோட்பட்டினைத் தெரிவிக்கிறது. இக்கொள்கையின் படி சக்தியை ஒரு போதும் அழிக்க முடியாது ஒரு வகையான சக்தியை வேறு வகையானதாக வேண்டுமானால் மாற்றி அமைத்து க் கொள்ளலாம். இந்த க் கருத்தின் அடிப்படையில் தான் ஒருவன் செய்யும் செயலின் உருவமானது மாறி கர்மபலன் என்று ஆகிறது. இந்தச் சக்தியானது எய்தவனிடமே திரும்பி வரும் ஆயுதத்தைப் போன்று. செயலைச் செய்தவனிடமே உடனுக்குடனோ அல்லது காலதாமதமாகவோ வந்து சேருவது தவிர்க்க முடியாததாகிறது.செயலின் தன்மையைப் பொறுத்து அத அவனுக்க மகிழ்ச்சியையோ அல்லது வருத்தத்தையோ கொடுக்கிறது. அதனால் மனதும் உடலும் பாதிக்கப்படுகிறது. எனவே இத்தகைய கர்ம பலனிலிருந்து யாரும் தப்ப முடியாது. அதனால் செயலைச் செய்தவனது மனத்தையும், உடலையும் பாதித்த பிறரது கர்மபலன் செலவழிந்து விடுகிறது. அதன் பிறகு அது செயலைச் செய்தவனை விட்டு விட்டு பிரபஞ்சத்தின் விரிந்த பண்டக சாலையான சக்தியின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

இந்தக் கொள்கையின் படி கடவுளால் படைக்கப்பட்ட எந்த ஒரு பிராணியின் இன்ப துன்பத்திற்கும் கடவுள் பொறுப்பாளி அல்ல. பிராணிகளின் சொந்த மகிழ்ச்சிக்கும் , கஷ்டங்களுக்கும் அவரவர்களே காரணமாகிறார்கள். அவர்களது நல்ல செயல்கள் அல்லது கெட்ட செயல்களுக்கு ஏற்றபடி அதன் விளைவான சுகத்தையோ துன்பத்தையோ அனுபவிக்க நேரிடுகிறது. எனவே கடவுள் அவர்கள் செய்யும் கர்மங்களுக்குத் தக்கபடி பலனை அளிப்பவர் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்த செயலுக்கேற்ற பலனை அடையச் செய்வதில் தவறு ஏதும் நடவாது. அவர் பார்த்துக் கொள்கிறார். அதனால் ஒருவன் செய்த கர்மத்தின் பலன் வேறு ஒருவனுக்குப் போகாது. ஒருவன் தனது சராசரியான வாழ்க்கைக் காலத்தில் எண்ணற்ற செயல்களைச் செய்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகளும் எண்ணில் அடங்கா. அவனது செயல்களினால் ஏற்படும் விளைவுகள் உடனுக்குடன் அவனுக்கு வந்து சேராது. ஆனாலும் சில விளைவுகள் வரலாம். எடுத்துக்காட்டாக க் கூறுவோமேயானால் ஒருவன் தனது பழத் தோட்டத்தில் ஓர் ஆப்பிள் மரக்கன்றை நடுவதாக வைத்துக் கொள்வோம். சில சமயங்களில் அது வளர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பழங்களை அளிக்கலாம். ஆனால் அவன் தீயிற்குள் கையை விட்டால் அதன் விளைவு உடனடியாகக் கிட்டும் அதாவது அவனது கை நெருப்பினால் சுடப்பட்டுக் காயமாகிவிடும்.

சஞ்சித கர்மம் மற்றும் பிராரப்த கர்மம்-

சிலருக்கு இயற்கையாக அமைந்த அவர்களது குணங்களுக்கு ஏற்ப சில செயல்களின் பலன்கள் தாமதமாக ஏற்படுகின்றன. அவற்றைக் காலம் முடிந்த பிறகும் கவனிக்கப்படாத வைப்பு நிதிகளுக்கு ஒப்பிடலாம். சில வைப்ப நிதிகள் தற்போதிலிருந்து சில ஆண்டுகளுக்க ப்பிறகு முடிவடையலாம். இதே போன்றே தாமதமாக விளைவுகளைக் கொடுக்கும் சில செயல்கள் அவற்றைச் செய்தவர்களது வாழ்நாள் முடிவடைவதற்குள் ஏற்படாமல் போகலாம். இத்தகைய செயல்களின் விளைவுகள் அதற்கான காலம் வரும் வரை சேமிப்புக் கணக்கில் பத்திரமாக இருக்கும். அந்தச் செயலைச் செய்தவனது எதிர்காலத்தில் அவனது செயல்களின் விளைவுகள் வரலாம். இவ்வாறாக இந்து மதத்தில் செயல்களைப்பற்றிய கொள்கையானது மறுபிறவிக் கொள்கையுடன் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த பிறவிகளில் ஒருவன் செய்த செயல்களின் கர்ம பலன்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இவையே “சச்சித கர்மங்கள்” அல்லது முற்பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை நிதிநிறுவனங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகின்ற சேமிப்புக் கணக்குகளைப் போல் நிலைச் சக்தியாக இருக்கும். அந்த வைப்புக் கணக்கு முடியும் காலம் வந்தவுடன் அது இயங்கு சக்தியாக மாறி செயல்களைச் செய்தவனின் உடலையும் உள்ளத்தையும் தாக்கும். கர்மத்தின் பலனானது இது போன்று செயல்படத் தொடங்குவதையே “பிராரப்த கர்மம்” . என்பர். இந்து மதக் கொள்கையின் படி இந்தப் பிராரப்த கர்மம் ஒருவன் பிறக்கக் காரணமாவதோடு அவன் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பான் என்பதையும் தீர்மானிக்கிறது. அத்தோடு அவன் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவனது பிராரப்த கர்மத்தின் பலன்கள் முடிவடைந்தவுடன் அவன் மரணத்தை எய்துகிறான்.

கடிகாரத்திற்குச் சாவி கொடுத்தால் அது எவ்வளவு காலம் ஓடும் என்பதை நாம் அறிவோம். அத்தனை மணிக்காலம் ஓடிய கடிகாரம் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் நின்று விடும். அதே போன்றே பிராரப்த கர்மமானது ஒருவனைக் குறிப்பிட்ட காலம் வரை ஆட்டி வைத்து விட்டு அதன் பலன்கள் முடிந்தவுடன் ஓய்ந்து விடும்.

கிரியா கர்மா- ஆகாமி கர்மா

இப்பிறவியில் செய்த எந்த செயல்களாக இருந்தாலும் அல்லது அந்தச் செயல்களின் விளைவுகளை் எப்படிப்பட்டதாயினும் அதை வடமொழியில் கிரியா கர்மா அல்லது ஆகாமி கர்மா என்கிறார்கள். இப்பிறப்பில் செய்த எத்தகைய கிரியமான கர்மத்தினால் உடனடியாக பலன் கிட்டும் என்பதை இந்து மத நூல்கள் கூறுகின்றன.துறவிப் பெருமக்களைக் கொலை செய்தல் அல்லது பெண்களைக் கொலை செய்தல் போன்ற மிகக் கொடிய குற்றங்களைச் செய்பவர்கள் அதனால் விளையும் கெட்ட பலன்களை இப்பிறவியிலேயே அனுபவிப்பார்கள். நற்செயல்களைச் செய்தல் அல்லது மிகவும் மோசமானதல்லாத கெட்ட செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் உடனே கிட்டாது. ஆனால் அச்செயல்களினால் ஏற்படும் பலன்கள் அந்த மனிதனின் வாழ்க்கைக் காலத்திலேயே அவன் கணக்கில் சேமிப்பாக இருக்கும். அப்போது அது கிரியா கர்மம். அதுவே அவனது கணக்கில் சஞ்சித அல்லது திரண்ட கர்மமாக ஆகிவிடும்.

இந்து மதக் கண்ணோட்டத்தில் தற்கொலை-

தன்னுடைய உடல் என்னும் கடிகாரத்தை ஒருவன் அது முழுமையாக ஓடுவதற்குள் அதாவது தானாக மரணம் எய்துவதற்கு முன் தற்கொலை செய்து கொள்வானேயாகில் அவன் மிகப்பெரிய தவற்றை செய்தவனாகிறான். அவனுடைய கர்ம பலன்கள் அத்தோடு நின்று விடாது. வேட்டை நாய் ஒருவனைத் துரத்துவது போல் அடுத்த உலகிற்கும் சென்று துரத்தும். இந்த அகால மரணத்தால் அவன் தனது முழு வாழ்நாள் தீரும் வரை என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருந்திருக்குமோ அதைப் போன்ற பல மடங்கான துன்பங்களை சகிக்க வேண்டி வரும். எனவே இந்து மதமானது தற்கொலையைமிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

குழந்தைப்பருவத்தில் இறப்பதைப்பற்றிய இந்து மதக்கருத்து-

மறு பிறவி என்பதன் கண்ணோட்டத்தில் புதியதாகப் பிறந்த குழந்தையைத் “தூய்மையான ஆன்மா” என்றோ குற்றமற்ற ஆன்மா” என்றோ இந்து மதம் கருதுவது கிடையாது.பிறந்த உடனேயே இறக்கும் குழந்தைச் சொர்க்கத்திற்குச் செல்கிறது என்றோ அது முக்தி பெற்று விட்டது என்றோ இந்து மதம் நம்பவதில்லை. தனிப்பட்ட ஒவ்வொரு பிறவியும், வாழ்க்கையில் சந்திக்கும் சந்தோஷங்களும் மற்றும் துன்ப அனுபவங்களும் ஆன்மீகப் பாதையில் வளர்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. குழந்தையாகவே இறப்பவருக்கு அந்த வாய்ப்பு போய்விடுகிறது. அதிக அளவில் கெட்ட கர்மங்களைச் செய்தவர்கள் அந்தக் கர்மங்கள் தீரும் வரை பிறந்து பிறந்து குழந்தையாகவே இறந்து விடுவார்கள். அந்தக் கெட்ட கர்மங்கள் காரணமாக மிகவும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியதும் பயனற்றதுமான பிறப்பு-இறப்பு என்கின்ற சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார்கள்.இதனால் உலகில் பிறந்து வாழும் மிகக்குறுகிய கால அளவில் எந்தவிதமான ஆன்மீகவளர்ச்சியிலும் ஈடுபட முடிவதில்லை.

பொதுவாக ஒரு துறவிக்கு உடல் கோளாறுகளோ அல்லது மனக் கஷ்டங்களோ வராது என்ற தவறான கருத்து சில மனிதர்களின் மனத்தில் உள்ளது. அவர்களது கருத்தின் படி துறவி முழுவதும் தூய்மையான நிலையில் இருப்பவர். எனவே அவர்கள் சாதாரண மனிதர்களைப்போன்று உடலாலும் மனத்தாலும் துன்பப்படக்கூடாது. ஒரு துறவிக்குக் கடந்த காலம் உண்டு. ஒரு பாவிக்கு எதிர் காலம் உண்டு என்ற ஒரு கூற்று உள்ளது.அதன் படி ஒரு துறவி ஏன் கஷ்டப்பட வேண்டும் என்பதே அவர்களது வாதம். ஒரு துறவி அவரது முற்பிறவிகளில் சில கெட்ட கருமங்களைச் செய்திருக்கலாம். அதனுடைய விளைவாக இந்தப்பிறவியில் அவர் உடலாலோ அல்லது உள்ளத்தாலோ கஷ்டப்படலாம்.தற்போது ஆன்மீக சாதனைகளின் காரணமாக உயர்ந்த நிலையை எய்தப் பெற்றாலும் கடந்த காலத்தில் செய்த பிராரப்த கர்மத்தின் கெட்ட முடிவுகள் தீரும் வரை அவர் கஷ்டங்களை அனுபவித்தே ஆக வேண்டும். கர்மக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் கடுமையான தவங்களைச் செய்து ஆன்மீக முன்னேற்றம் கண்டு சிறந்த முனிவராகத் திகழலாம். அவரது தவமானது அவரது சஞ்சித கர்மங்களை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.ஆனாலும் அவர் சாகும் வரை பிராரப்த கர்மத்தின் பவனை அனுபவிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் இதை விளக்க ஓர் உவமை உள்ளது. ஒரு வேடன் தனது அம்பாறத் துணியில் பல அம்புகளை வைத்திருப்பதாகக் கொள்வோம். இதை சஞ்சித கர்மத்திற்கு ஒப்பிடலாம்.அவன் அதிலிருந்து ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி அதை எய்துவதாகக்கொள்வோம். அவனால் விடப்பட்ட அம்பு பிராரப்த கர்மத்திற்கு எடுத்துக்காட்டாகும் ஒரு முறை அம்பை எய்தவுடன் வேடனுக்கு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் மீது எந்த வித கட்டுப்பாடோ அதிகாரமோ கிடையாது. அந்த அம்பானது வேகத்துடன் காற்றின் வழியே சென்று தனது முழுசக்தியையும் இழந்தவுடன் தரையில் விழுந்து விடும். வேடனுக்குத் தான் எய்த அம்பின் மீது எவ்வாறு எத்தகைய கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாதோ அதே போன்றதே பிராரப்த கர்மமும்..