June 26, 2020

ஜார்ஜ் ஃப்ளாய்ட்

By Tamil
இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது.  
கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தின் ஒரு மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த ஓர் இளைஞர், கள்ளநோட்டு கொடுத்ததாக கடைக்கார் போலீசில் புகார் செய்கிறார். உடனே அங்கு சோதனையிட வந்த காவல்துறையினர், கடைக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த கருப்பு நிற இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். அவர் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (வயது 46).
காரில் இருந்த அவரை கீழே இறங்கும்படி கூறி, பின்னாலிருந்து அவரது கைகளைக் கட்டி, பொதுவெளியில் இழுத்துச் சென்ற காவலர்கள், அவரை காரின் டயர் அருகில் சாய்த்துப் படுக்க வைத்தனர். வந்திருந்த நான்கு காவலர்களில் ஒருவர் தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்துள்ளார். அப்போது, “தன்னால் மூச்சுவிட முடியவில்லை; எனக்கு தண்ணீர் கொடுங்கள்; என்னை கொன்றுவிடாதீர்கள்” என்றெல்லாம் ஃப்ளாய்ட் பலமுறை கெஞ்சியும் அந்தக் காவலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
மீதமுள்ள மூன்று காவலர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகிலேயே நின்றுள்ளனர். சுற்றி நின்று கூச்சல் போட்ட பொதுமக்களில் யாருடைய குரலையும் அந்த போலீகாரர் பொருட்படுத்தவுமில்லை. எவ்வளவோ போராடிப் பார்த்தும் அசையக்கூட முடியாமல், இறுதியில் ஜார்ஜ் பேச்சுமூச்சின்றி சலனமற்றுக் கிடந்தார்.
ஆம்புலன்ஸ் வரும்வரை அவருடைய கழுத்தை அழுத்தியிருந்த காவலர் தனது காலை எடுக்கவேவில்லை. மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
உயிருக்குப் போராடிய ஜார்ஜ், இறக்கும்போது உச்சரித்த கடைசி வார்த்தைதான் “I cannot breathe! – என்னால் மூச்சு விடமுடியவில்லை”.
ஒரு வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி பொது இடத்தில் – எல்லோருக்கும் முன்னால் – ஜார்ஜின் கழுத்தின் மீது தனது முழங்கால்களை அழுத்தி ஐந்து நிமிடம் அவரை துடிதுடிக்க கொலை செய்த காட்சியை “டேர்னெல்லா ஃப்ரேசியர்” என்ற 17 வயதுப் இளம்பெண் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.
சற்றுநேரத்தில் சம்பவம் வைரலானது. இக்காட்சியைப் பார்த்த பலரும் ஜார்ஜைப் போலவே மூச்சுத் திணறினர். நம்மாலும் அந்தக் கொடூரத்தை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை.
வெள்ளையரின் இனவெறிக்கெதிராக அமெரிக்காவெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அணியணியாக வீதிக்கு வந்து போராடினர். வன்முறை வெடித்தது. தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆறு நாட்களாக அமெரிக்காவே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 
ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்துவருகிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். அமைதியும், அடக்கமும் நிறைந்தவர். யாரிடமும் வம்புதும்புக்குப் போகாதவர். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராதவர். அவருக்கு எதிரிகள் கூட இல்லை என்கின்றனர்  அவருடைய நெருங்கிய கூட்டாளிகள்.

கறுப்பின மக்கள் மீது அமெரிக்க வெள்ளையினத்தவர் காட்டும் நிறவெறித் தீண்டாமைக்கு மற்றுமொரு உதாரணமாக – காவலர்களால் குரல்வளை நசுக்கப்பட்டு ஜார்ஜ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கூறலாம். கருப்பினத்தவர் இரண்டாம்தர குடிமக்களாக கருதப்படும் அமெரிக்காவில், அவர்களுக்கெதிராக அடிக்கடி நடைபெறும் இத்தகைய கொலைகள் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை என்பதே எதார்த்தம்.

“கறுப்பினத்தவர் மீது அமெரிக்க வெள்ளையர் காட்டும் நிறவெறியின் உச்சம் இது. இத்தகைய கொடூரச் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று பிரபலங்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
“ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்த சம்பவம் மிகவும் வேதனையைத் தருகிறது. அந்த வீடியோவைப் பார்த்ததும் மனமுடைந்து நானும் அழுதுவிட்டேன். அவருடைய கழுத்தின் மீது வைக்கப்பட்டிருந்த முழங்கால், உதவிக்கான அழுகையைப் புறக்கணித்துவிட்டு கறுப்பின மக்களைக் எப்போதும் கீழேநிலையில்தான்  வைத்திருக்கவேண்டும் என்பதற்கான குறியீடாக உள்ளது. உண்மையிலேயே இது மிகவும் சோகமான விஷயம்” என்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா.
“அமெரிக்காவில் கருப்பினத்தவராகப் பிறப்பதால் ஒருவர் கொல்லப்படுவதற்கான தகுதி பெறுகிறார் என்பது பொருளல்ல” என்று மினியாப்பொலிஸ் மேயர் jacob frey கருத்து தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 1004 பேர் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகம் பேர் கறுப்பினத்தவர்” என்கிறது, Washington Post நடத்திய ஒரு  கருத்துகணிப்பு.

2015 இல் Guardian பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பு, “அமெரிக்க காவல்துறையினரால் கருப்பினத்தவர் கொல்லப்படுவது வெள்ளையர்களை விடவும் 9 சதவீதம் அதிகம்” என்கிறது.
ஜார்ஜின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடுபவர்கள், “கருப்பர்களையும் சக மனிதனாக மதிக்கும் ஒருநாள் அமெரிக்காவில் மலர வேண்டும்” என்கின்றனர். 
Please! Please! I cannot breathe!
My Stomach hurts!
My Neck hurts!
Everything hurts!
They’re going to kill me!
உயிருக்குப் போராடும் ஒரு அப்பாவி மனிதனின்
கடைசி மூச்சுடன் வெளியேறிய சொற்கள் இவை!
மரணத்தை நேருக்குநேர் சந்தித்த ஒரு எளிய மனிதனின் கடைசிக் கோரிக்கை இது!
கருப்பராகப் பிறந்துவிட்ட குற்றத்திற்காக
அநியாயமாக கொலை செய்யப்பட ஒரு அப்பாவி மனிதனின் இறுதிக் கூச்சல் இது.
57 வருடங்களுக்கு முன் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர்கிங் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் இடம்பெற்ற “I have a dream” என்ற வாசகத்தைப்போல்…
அமெரிக்க வெள்ளையரின் நிறவெறிக்கு எதிராகவும், கருப்பின மக்களின் விடுதலைக்காகவும் போராடும் ஒவ்வொருவர் இதயத்திலிருந்தும் I cannot breathe! என்ற குரல் இனி ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இன்னொரு மார்ட்டின் லூதர் கிங் வரும்வரை காத்திருக்காமல் போய்விட்டார், ஜார்ஜ் ஃப்ளாய்ட். ஆனாலும் இப்போது நடக்கிற போராட்டங்களுக்கு அவர்தான் விதை!
மிச்சம் இருப்பவர்களாவது சுதந்திரக்காற்றை சுவாசிக்கட்டும்!