January 3, 2019

தெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்

By Tamil

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-24

சுவாமி பாஸ்கரானந்தர்

மதமானது சீர் குலைந்து அநீதிகள் தலைவிரித்து ஆடும் போது கடவுள் கருணைக் கொண்டு பூமியில் அவதரித்து அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டி மதத்திற்குப் புத்துயிர்ச்சி அளிக்கிறார் என்பது இந்து மதக் கொள்கையாகும். அவ்வாறு தோன்றும் கடவுளை வட மொழியில் அவதாரம் என்றும் தமிழில் தெய்வம் மானுட உருவில் தோன்றுதல் என்றும் சொல்லப்படுகிறது. உலகம் தோன்றிய காலந்தொட்டே கடவுள் பல முறை மனித உருக்கொண்டு தோன்றியிருக்கிறார். வருங்காலத்திலும் தேவை ஏற்படும் போது கடவுள் மனித உருவில் அவதரிக்கலாம். முதலாவதான சில அவதாரங்களில் மனித உருவில் இல்லாமல் சில கீழான ஜீவராசிகள் போன்று தோன்றினார். முதலாவதாக மீனாகவும் அடுத்த படியாக ஆமை வடிவிலும் , மூன்றாவதாக பன்றியின் வடிவிலும் தோன்றினார். பின்னர் பாதி உடல் மனிதனாகவும் மறு பாதி விலங்காகவும் இருக்குமாறு தோன்றினர். அதனைத் தொடர்ந்து எடுத்த அவதாரங்கள் அனைத்துமே மானுட உருவில் தான். அறிவியல் அடிப்படையில் நோக்குமிடத்து உலகில் தோன்றிய முதல் உயிரினம் மீன் போன்ற நீரில் வாழும் உயிரினங்களே. அதற்குப்பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை போன்றவை தோன்றின. அதைத்தொடர்ந்து நிலத்தில் மட்டும் வாழும் பன்றியினங்கள் தோன்றின. அவர்களுக்குப்பிறகு மனிதனின் மூதாதையர்கள் தோன்றினர். அவர்களிடம் முழுமையான அளவில் மனித இயல்பு இருக்கவில்லை. அவர்களிடம் விலங்கின் இயல்பும் மனிதனின் இயல்பும் கலந்த ஒரு வகையான நடையுடை பாவனைகளே இருந்தன. நாளடைவில் அவர்கள் முழுமனிதனின் இயல்புடையவர்களாக மாறினார்கள். கடவுளின் தெய்வீக அவதாரங்களின் வரிசையையும் பூமியில் மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமக்கு மிகவும் விந்தையாக இருக்கிறது. மனித வடிவில்லாது வேறு இழிந்த உயிரினமாகக் கூட கடவுள் ஏன் அவதரிக்க வேண்டும். என்று தோன்றலாம். அதற்கு விடையாக இந்து மதமானது நமது கவனத்தைக்கடவுளின் கருணை மயமான இதயத்தின் பக்கம் திருப்பி விடுகிறது. அதன் படி இவ்வுலகில் அனைத்து உயிரினங்களையும் அவரே படைத்துள்ளார்.என்பதாலேயேஅந்தக் கருணா மூர்த்தி அனைத்து ஜீவராசியின் வடிவிலும் தோன்றினார் என்பதாகும். இல்லையெனில் அவர் பாரபட்சமுடையவர் என்றாகிவிடும்.

இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசமான பாகவதம் , கடவுளின் எண்ணற்ற அவதாரங்களை எடுத்துள்ளார் என்கிறது.மற்ற மத நூல்கள் வெறும் பத்து அவதாரங்களையே குறிப்பிடுகின்றன..(1)மத்ஸ்ய(2) கூர்ம(3)வராக(4)நரசிம்ம(5)வாமன(6) பார்க்கவ(7)ராம(8)பலராம(8b)கிருஷ்ண(9)புத்த(10)கல்கி என்ற பத்து அவதாரங்களாகும். வேதங்கள் தெய்வத்தின் அவதாரங்களைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.வேதங்கள் ரிஷிகள் அல்லது முனிவர்களைப் பற்றியே பேசுகின்றன. எல்லா முனிவர்களிடமும் ஒரே அளவிலான தெய்வீகத்தன்மை காணப்படுவதில்லை. ஒரு சிலரே தங்களது தவத்தின் மகிமையால் தனிச்சிறப்புடையவர்களாகின்றனர்.

பிற்காலத்தில் இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளின் தத்துவ சாஸ்திரங்கள் விரிவடைந்தன.அவற்றின் படி புகழ்பெற்ற முனிவர்களை தெய்வீகத்தன்மை பொருந்தியவர்கள் என்ற பொருள் படும் படி அதிகாரி புருஷர்கள் என்று என்றழைத்தனர்.இத்தகையவர்கள் மனிதப்பிறவி எடுத்திருந்த போதிலும் அவர்களைச் சாதாரண மனிதர்களோடு இணைத்துப் பேசுவதில்லை.

மிகப்பழமையான தத்துவ நூல் சாங்கியம். அது அதிகாரி புருஷனை ஈஸ்வர கோடி அல்லது கல்பனியாமக ஈஸ்வரன் என்கிறது. இத்தகைய தெய்வீக அவதாரங்களின் அற்புதக் காட்சிகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.ஆனால் வேத காலத்திலோ அல்லது சாங்கியம் போன்ற தத்துவநூல்கள் வளர்ச்சி அடைந்தபோதோ அதைச்சரியாக விளக்க முடியவில்லை.பிற்காலத்தில் அதாவது புராணங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் தான் அதற்கான சரியான விளக்கம் தரப்பட்டது.

வேத காலத்தில் பிற்பகுதியில் கூறப்பட்ட அதிகாரி புருஷர் , ஈஸ்வரகோடி, கல்பனீயாமக ஈஸ்வரன் என்ற அனைத்துமே புராண காலத்து தெய்வீக அவதாரங்களே அன்றி வேறு அல்ல. இது சில இந்து அறிஞர்களின் விளக்கமாகும். நல்வழியில் மக்களை ஊக்குவிப்பது. அவர்களை முக்தி அடையச் செய்வது என்ற இரண்டு காரியங்களை நிறைவேற்றவே கடவுள் பூமியில் அவதாரமெடுக்கிறார். கடவுள் அவராகவே தனது சக்தியையும் மனித நிலைக்கு வரையறுத்து க் கொள்கிறார். பின்னர் கடுமையான ஆன்மீக சாதனைகளை மேற்கொண்டு மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிலையை எய்தி தனது தெய்வீக த் தன்மையை வெளிப்படுத்துகிறார். பிறவியிலேயே அவர் முழுமையானத் தெய்வத்தன்மை உடையவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தெய்வீகத்தன்மையை அடைய அவர் எந்த விதமான ஆன்மீக சாதனைகளும் செய்ய வேண்டியதில்லை. சாதாரண மானுடனுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தவே அவர் சாதனைகள் செய்கிறார். எனவே அவரது குற்றமற்ற வாழ்க்கை மனித சமூகத்திற்கு முன் மாதிரியாக இருப்பதற்காகவே. கோழியானது தனக்குப் பசி இல்லை என்றாலும் தன்னுடைய குஞ்சுகள் இரையை எவ்வாறு கொத்தித் தின்ன வேண்டும் என்பதற்காக நிலத்திலிருந்து தானியங்களைக் கொத்தி விழுங்குவது போன்று, மனிதர்கள் தன்னைப் பார்த்து சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக தெய்வீக அவதாரமெடுத்த கடவுளும் சாதனைகள் புரிகிறார். தன்னை முழுமையாகச் சரணடைந்தவர்களின் பாவங்களைப் போக்கி அவர்களை முக்தி அடையச் செய்கிறார். இதையே பகவான் கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில் கூறியுள்ளார். எல்லா தர்மங்களையும் அறவே விட்டு என்னை மட்டுமே சரணடை நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.