January 4, 2019

நம்பிக்கையும் வலிமையும்

By Tamil

Swami Vivekananda’s quotation

1.நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.

2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

3. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில் நீ வரம் பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

4. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

5.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

6.பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்றிப் போதிப்பாயாக.

7.வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதி யையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

8. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக்கத்தை, நமது குழந்தை களைக் கேட்கச் செய். பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயாக மாற்றப்பட்டிருக்கிறது.

9.அறியாமை மிக்க , உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.

10. சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன் மாவில் நிலைத்திரு.