June 24, 2019

படித்ததில் பிடித்தது

By Tamil

ஒருவர் தான் சமைத்த உணவைத் தன் வீட்டில் அமர்ந்து சாப்பிடத் தயாராகிறார். இலையைப் போட்டு சாதத்தை வைக்கும் நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை கேட்டால் என்ன செய்வது? வேறு வழியின்றி உணவை விட்டு எழுந்து கதவைத் திறந்து பார்த்தால், வந்திருப்பவர் அடுத்த வீட்டுக்காரரின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கிறார். அவருக்கு வழிகாட்டி விட்டு திரும்பவும் வீட்டுக்குள் வருகிறார் என் வைத்துக் கொள்ளுங்கள். வீடு, உணவு, மாடு, மனை எல்லாம் நமக்குச் சொந்தமானது என்றாலும், இன்னதை இன்னார் இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று மூன்றாவது சக்தி ஒன்று நமக்கு மேலே இருந்து செலுத்திக் கொண்டிருக்கிறது. அது தான் ஈஸ்வரன்.
இதையே உபநிஷதமும், “எவனிடத்தில் இருந்து உலகம் எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டதோ, எவனருளால் உலகம் காக்கப்படுகிறதோ, எவனிடத்தில் இந்த உலகம் சென்று சேருமோ அந்த பரம்பொருளையே விஷ்ணு’ என்று குறிப்பிடுகிறது.
பராசரர் மைத்ரேயருக்கு பரம்பொருளின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார். எப்போதும் மாறுதல் என்பதே இல்லாதவராக, தூய்மை மிக்கவராக, அழிவில்லாத நித்யமானவராக, பெரிதினும் பெரிதானவராக, ஒரே வடிவுடையவராக, இயல்பு மாறாதவராக விளங்கும் பரம்பொருளே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்தியாகவும் திகழ்கிறார்.
தாயின் கர்ப்பத்தில் இருந்து தானே நாம் பிறந்தோம்.
வயிற்றில் கருநிலை கொள்கிறது. அது வளர வளர தாயின் வயிறு பெருத்தும், கால், கைகள் நீர் சுரந்தும் உடம்பில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாகும் அல்லவா? ஒருஉயிர் தன்னைப் போல இன்னொரு உயிரைப் படைக்கும் போது, இருக்கும் நிலையில் இருந்து பலவித மாறுதல் ஏற்படும். இதை “விகாரம்’ என்கிறது சாஸ்திரம். இருத்தல், பிறத்தல், மாற்றம், வளர்தல், தேய்தல், அழிதல் என்று இதை ஆறு வித விகாரம் என்று சொல்வர். உலகிலுள்ள அத்தனை உயிருக்கும் இந்த ஆறும் உண்டாகின்றன. பரம்பொருளுக்கும் இந்த மாற்றங்கள் உண்டாகுமா என்று கேட்டால் அது தான் இல்லை. பரம்பொருள் எப்போதும் மாறாமல் இருக்கிறது என்கிறார் பராசரர்.
அவரின் உடம்பில் ஓருபக்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் “மூலப்பிரகிருதி’ என்னும் தத்துவத்தில் இருந்து உலகத்தைப் படைத்தார். அதிலிருந்தே நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் எல்லாம் வந்தன. இவை சம்பந்தப்படாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை.
சாப்பிடும் சாதம் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி எங்கிருந்து வந்தது? மண் தானே அதைக் கொடுத்தது. அதை தண்ணீரில் இட்டு அடுப்பில் கொதிக்க வைக்கிறோம். ஆக நீரும், நெருப்பும் வந்தாகி விட்டது. நெருப்பு எரிய காற்றின் உதவி தேவைப்படுகிறது. ஆகாயம் என்பது தான் வெளி. எந்த பொருள் என்றாலும் அது இடத்தை அடைத்துக் கொண்டு தானே இருக்கும். அது தான் ஆகாய தத்துவம். இதைப் போலவே, உடம்பும் பஞ்சபூத சேர்க்கையால் ஆனது. இந்த பஞ்சபூதங்கள் அசித்து. அதாவது அறிவற்றவையாக இருக்கின்றன.
உடம்பு இயங்க வேண்டுமானால் உயிர் வேண்டும் அல்லவா! அதற்காக, அவர் உடம்பின் மற்றொரு பக்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாவை(உயிர்களை) உடம்போடு இணைத்தார். இந்த உயிர்கள் கர்மவினையோடு இருக்கின்றன. அதாவது பாவம், புண்ணிய பதிவுகளோடு இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் பாவம், புண்ணியம் ஏன் உண்டாகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும். வேதம் வகுத்த தர்மத்தை சரிவரச் செய்தால் புண்ணியம். அது கூடாது என மறுத்ததை செய்யாமல் இருப்பதும் புண்ணியம் தான். வேதம் சொன்ன தர்மத்தை மீறினாலும், அது மறுத்ததை செய்து வந்தாலும் பாவமே உண்டாகும்.
பிரளய காலத்தில் உலகமே அழிந்து போனாலும், உயிர்கள் செய்தபாவ, புண்ணியக் கணக்கு மட்டும் அழிவதில்லை. அதற்காக உள்ள கணக்கு புத்தகம் பாதுகாப்பாகவே இருக்கும்
வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.