July 9, 2019

how to address a holy person

By Tamil


சாமான்ய நிலையில் இருக்கும் ஒருவரைப் பற்றி அறிமுகப்படுத்தச் சொன்னால் ஐந்து நிமிடத்தில் அவரைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஆனால், தகுதியில் உயர்ந்தவர்களைப் பற்றி எளிதாகச் சொல்லி விட முடியாது. எடுத்துச் சொல்வதற்கும் தகுதி முக்கியம்.
வசிஷ்டமகரிஷி இங்கு வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றி என்னிடம் பேசச் சொன்னால், நான் அவரை நமஸ்கரித்து விட்டு அமர்ந்து விட வேண்டியது தான். அவர் என்ன சாமான்யமானவரா? மகரிஷி… மகானுபாவர்…
அவரைப் பற்றி எதையாவது தவறாகச் சொல்லி விட்டால் எனக்கு “அசடு’ என்ற பட்டம் வந்து விடும். இதனால் தான் வேதமும், ஏற்றம் மிக்கவளான பெரிய தாயாரை , “இவள் பிராட்டி’ என்று மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு நின்று கொண்டது.
பிராட்டியைப் பற்றி பேசாததற்கு, அவளின் பெருமைக்கு எல்லை இல்லாததே காரணம். தாயாரின் பெருமையை எடுத்துச் சொல்லும் “ஸ்ரீசூக்தம்’ வேதத்தின் பாகமாகப் போற்றப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமத்தின் கடைசிப்பகுதியான லட்சுமி தந்திரத்தில் ஸ்ரீசூக்தம் இடம் பெற்றுள்ளது. இந்த மந்திரம் எப்படி பிறந்தது? இந்திரனே லட்சுமி தாயாரிடம் வேண்டுவதாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. அதில் முதல் ஸ்லோகம், “”ஸ்ரீதேவி தாயாரின் அருளை எனக்கு பெற்றுக் கொடுப்பாய்’ என்று பெருமாளிடம் வேண்டுவதாக உள்ளது.
ஓம் நமோ நாராயணாய, சரம ஸ்லோகமான “மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) இந்த இரண்டிலும் தாயாரின் சம்பந்தம் இல்லை. அதனால், இந்த இரண்டையும் விட நடுமந்திரமான துவய மகாமந்திரத்தில் மட்டும், தாயாரின் சம்பந்தம் இருப்பதால் ஏற்றம் மிக்கதாக விளங்குகிறது. ஆளவந்தார் சதுஸ்லோகியில் (நான்கு ஸ்லோகங்களில்) தாயாரின் பெருமையைப் போற்றுகிறார்.
வேதாந்தம் பற்றி பல நூல்கள் எழுதிய ராமானுஜரும் பெரிய பிராட்டியின் மகத்துவத்தை உலகிற்கு தெரியப்படுத்தினார். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரத்தன்று நம்பெருமாள் பெரியபிராட்டியோடு ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளும் போது, பெரியபிராட்டியை முன்னிட்டுக் கொண்டு, பெருமாளிடம் சரணடையும் படி வழிகாட்டினார்.
கூரத்தாழ்வான் பாடிய பஞ்சஸ்தவத்தில் பிராட்டியைப் பற்றி பத்து ஸ்லோகங்கள் உள்ளன. பராசர பட்டர் “ஸ்ரீ குணரத்ன கோசம்’ பாடி தாயாரை போற்றியுள்ளார். “தாயாரின் ரத்தினமான குணங்களைப் போற்றும் பேழை’ என்பது இதன் பொருள். வேதாந்ததேசிகன் “ஸ்ரீஸ்துதி’யில் தாயாரின் பெருமையை அழகாகச் சாதிக்கிறார். இந்த மகாலட்சுமி யார்? இப்படி சட்டென்று கேட்டால் உடனே சொல்ல முடியாது. சம்பிரதாயப்படி அவள் யார் என்பதை பிரமாணத்துடன் தான் சொல்ல வேண்டும்.
பெருமாளை விட்டு, அவள் எப்போதும் பிரிவதில்லை, உயிர்களுக்கு அருள்புரியும்படி பெருமாளிடம் வேண்டுபவள் அவள். இதனை “புருஷகாரம்’ என்று சிறப்பிப்பர். “ஸ்ரீமந்நாராயணன்’ என்று பெருமாளுக்கு அடையாளம் தருபவளே பிராட்டி தான்.
(ஸ்ரீ என்றால் லட்சுமி) திருமாலின் அடையாளமாக சங்கு, சக்கரம், துளசிமாலை, பீதாம்பரம் என்று எத்தனையோ சொல்லலாம். ஆனால், இவற்றை எல்லாம், நாம் கூட தாராளமாக அணிந்து கொள்ளலாம். லட்சுமியை மார்பில் தாங்குவதால் “திருவறுமார்பன்’ என்று பெருமாள் பெயர் பெறுகிறார். அதற்கு “சொரூப நிரூபக தர்மம்’ என்று பெயர். எந்த குணத்தை விட்டு விட்டால் ஒரு பொருள் தன் அடையாளத்தை இழக்குமோ, அந்த குணமே சொரூப நிரூபக தர்மம். விளக்கு என்றால் ஒளியும், விசிறி என்றால் காற்றும், புஷ்பம் என்றால் வாசனையும் அதன் தர்மமாக இருக்கிறது. பெருமாளின் திருமார்பில் பிராட்டியார் இருப்பது தான், அவரின் அடையாளமாக இருக்கிறது. ஸ்ரீமந்நாராயணன் என்று எழுதும்போது கூட, “ஸ்ரீ’ யாகிய தாயாருக்கும் நாராயணனாகிய பெருமாளுக்கும் இடையில் சின்ன இடைவெளி கூட விடாமல் சேர்த்தே எழுத வேண்டும். ஏனென்றால் தாயார் எப்போதும் பெருமாளைப் பிரியாமலே இணைந்தே இருக்கிறாள்.
பிரளய வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து ஓடியது. ஆலிலையில் சிறு பாலகனாக கண்ணன் கால் கட்டை விரலை வாயில் வைத்து சுவைத்தபடி அதில் மிதந்து வந்தார். அங்கிருந்த மார்க்கண்டேய மகரிஷி, “சிறுகுழந்தை இப்படி வெள்ளத்தில் மிதக்கிறதே’ என்று ஆச்சரியத்ததுடன் நின்றார். “பிள்ளாய் நீ யார்?’ என்று கேட்டார். பெருமானோ வாயே திறக்கவில்லை. கண்ணால் ஜாடை மட்டும் காட்டினார்.
அவருடைய கையோ மார்பில் இருக்கும் ஸ்ரீவத்சத்தைக் காட்டியது. அதுதான் லட்சுமி வசிக்கும் இடம். “ஸ்ரீவத்ஸ பீட மகாலட்சுமி’ என்று அவளுக்குப் பெயர் இதனால் தான். நாராயணனுக்கு ஒரே அடையாளமே “ஸ்ரீ’யோடு எப்போதும் சேர்ந்திருப்பது தான். பிரம்மத்திற்கு அகந்தையாக அவள் இருக்கிறாள். “அகந்தை’ என்ற சொல்லை “ஆணவம்’ என்று தவறாக நாம் பயன் படுத்துகிறோம். இங்கு “நானாகிற தன்மை’ என்று பொருள். பெருமாளின் குணமாக லட்சுமி இருக்கிறாள். அவருக்கு ஒளியாக தாயார் இருக்கிறாள்.
உலகில் அறிந்ததை விட அறியாத விஷயங்களே அதிகமாக இருக்கிறது. . உலகியலுக்கு இது பொருந்துவதை விட, பகவத் (தெய்வ) விஷயத்திற்கு மிகவும் பொருந்தும். நமக்கு இந்த கருத்து பொருந்துவது சரி. ஆனால், பெருமாளுக்கும் இது பொருந்துமா? மகாலட்சுமியின் கல்யாண குணத்தை அவரால் எப்படி அறிய முடியாமல் போனது? அவர் “ஸர்வக்ஞனாக’ (எல்லாம் அறிந்தவராக) இருக்கிறார். அவர் “ஸர்வசக்தனாகவும்’ (எல்லா ஆற்றலும் பொருந்தியவராகவும்) இருக்கிறார். ஆனால், இந்த இரண்டு குணங்களும் பெற்றும் தாயார் விஷயத்தில் அது பொருந்தவில்லையே ஏன்?
பெருமாள் தாயாரின் வைபவத்தை முற்றிலும் தெரிந்தவர் என்று சொன்னால், அவளின் கல்யாண குணங்களுக்கு எல்லை உண்டு என்றாகிவிடும். பெருமாளுக்கு தெரியாது என்று சொன்னால், எல்லாம் அறிந்தவர் என்ற சிறப்பு இல்லாமல் போய்விடும்.
ஆனால், வேதம் எப்படி சொல்கிறது தெரியுமா? தாயாரின் கல்யாண குணத்தின் எல்லையை நீர் (பெருமாள்) தெரிந்து வைத்திருக்கவில்லை. இருந்தாலும் உமது “ஸர்வக்ஞன்’ என்ற பெருமைக்கு ஒரு குறையும் இல்லை என்று பெருமாள், தாயார் இருவருக்கும் பெருமை சேர்க்கிறது.
சாமான்ய மனிதர்களான நாம், நமக்குத் தெரிந்தவரை ஏதோ தாயாரைப் பற்றிச் சொன்னாலும், அதைக் கேட்பதில் பெருமாளுக்குத் தான் ஆசை அதிகம். அதைக் கேட்டு , பெருமாளின் முகம் தாமரையாக மலர்கிறது. அதைக் கண்டு தாயாரும் மகிழ்கிறாள். அவர்கள் இருவரின் மலர்ந்த முகங்களை தரிசிப்பதில் தான் நமக்கு ஆனந்தம். அந்த ஆனந்தத்தை அடைவது தான் நம் கடமை.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி சந்திரா சேஷாத்ரி.