January 3, 2019

புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்

By Tamil

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-21

சுவாமி பாஸ்கரானந்தர்

புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்-

சாறுள்ளதும் பசியைப் போக்க வல்லதும் முழுமையானதும் நமக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதுமான உணவு தான் உடலின் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏற்றது என்று இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிகமான கசப்போடு கூடியவை ,காரமானவை,புளிப்பானவை,மிகவும் உவர்ப்பானவை,உஷ்ணமானவை, உலர்ந்தவை மற்றும் எளிதில் எரியக்கூடிய உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் பழைமையானவை, ருசியற்றவை,தூய்மையற்றவை,மற்றும் அழுகியவை ஆகியவற்றையும் உண்ணக்கூடாது.

இந்துக்களின் பிரிவுகளான சைவம், வைணவம் ஆகியவற்றின் புனித நூல்களில் தாவர உணவே பரிந்துரைக்கப்பட்டது. மீன், மாமிசம் மற்றும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மதுபானம் ஆகியவற்றை உண்ண சாக்தர்களின் மத நூல் அனுமதிக்கிறது. இதனால் சில இந்துக்கள் தங்கள் மதத்தைச்சார்ந்த வேறு பிரிவினர்கள் மாமிச உணவு உண்பதை வெறுக்கிறார்கள். அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள் . மகான்களும் துறவிகளும் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை மன்னிப்பதில்லை. இந்தியாவில் மதமானது சமையலறைக்குள் புகுந்து விட்டது. என்று சுவாமி விவேகானந்தர் வருத்தப்பட்டிருக்கிறார். பன்றி இறைச்சியைச் சாப்பிடும் ஒருவனால் இடைவிடாது கடவுளை நினைக்க முடியுமேயானால் தாவர உணவை மட்டும் உட்கொண்டு சதாகாலமும் சிற்றின்பங்களில் ஈடுபடும் மனிதனைவிட அவன் மேலானவன் என்று ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவது வழக்கம்.

கடவுள்-

தொடக்கத்திலிருந்தே இந்து மதமானது பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது. இந்துக்களின் முன்னோர்கள் தங்களது நாகரீக வளர்ச்சியின் துவக்க நிலையில் பல கடவுளர்களை வணங்கி வந்ததாக நம்பப்படுகிறது.நிலம்,நீர், நெருப்பு, காற்ற.வெளி,சூரியன்,பகல்,இரவு. இடி மின்னல்களுடன் கூடிய பெருங்காற்று ஆகியவை தெய்வங்களாகக் கருதி வழிபடப்பட்டு வந்தனர். ஆனாலும் வேத மந்திரங்களில் இவை அனைத்துமே மேலான கடவுளர்கள் என்றும், இவ்வுலகை படைத்த பெருமைக்குக் காரணமானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற மத நூலறிஞர் இந்துக்களின் முன்னோர்கள் பல கடவுளர்களை மேலானவர்களாகக் கருதுபவர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சிறப்பான சக்தி இருப்பதாக எண்ணி வழிபட்டனர் என்று கூறியுள்ளார். பல்வேறு வகைப்பட்ட கடவுளர்களிடையே ஏதோ ஒரு பொதுவான பண்பு காணப்படுவதை இந்தோ- ஆரியர்கள் நாளடைவில் கண்டு கொண்டனர்.

ரிக் வேதத்தில் படைப்புப் பாடல் (nasadiya hymn or the creation hymn) என்பது அழகானதும் செய்யுள் வடிவமானதுமாகும். அதில் ஒரு முதன்மையான கண்ணுக்குப் புலப்படாத தத்துவம் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்தே அனைத்துலகமும் தோன்றி வளர்ந்து விரிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்று சொல்லப்படும் அத் தத்துவமானது தூய்மையான உணர்வு என்றோ தூய ஆன்மா என்றோ அறியப்படுகிறது. அது இடம் காலம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது. ஆழம் காண முடியாதது. அதன் பல்வேறு பிரிவுகளையும் கூட மனித மனங்களால் புரிந்து கொள்ள முடியாது. அத்தத்துவமானது கடவுளர்கள் மனிதர்கள் ஏன் மற்ற எதுவுமே தோன்றாத காலத்திலும் கூட இருந்திருக்கிறது. அந்த ஒரு தத்துவத்திலிருந்து உலகத்தின் பல விஷயங்கள் உண்டாகியிருக்கின்றன.

இந்தோ- ஆரிய மேதைகள் பல வகையில் ஆராய்ந்து பார்த்து அனைத்திற்கும் மூல காரணமான இந்து தத்துவத்தைப் புரிந்து கொண்டனர். அது ஒன்று மட்டுமே கடவுள். அதுவே வேத கால சமஸ்கிருதத்தில் ” பிரம்மன்”(பிரம்மம்) என்று சொல்லப்பட்டது. பிரம்மனின் தெய்வீகத் தன்மை உணரப்பட்ட பின் அந்தப் பிரம்மனின் இருப்பது ஒன்றே என்ற தன்மையானது வேத நூல்களால் திரும்பப் பேசப்பட்டது. வேதங்கள் கூறும் ஏகம் சத் விப்ரா, பஹீதா வதந்தி (இருப்பது ஒன்றே சான்றோர் அதையே பலவாகக் கூறுகின்றனர்) என்ற கூற்றினைப் பார்த்தோமானால் மத நல்லிணக்கத்திற்கான அறிவுரைகளையே இந்து மதம் தனது அஸ்திவாரமாகக் கொண்டிருப்பது தெரிய வரும். எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் அந்த மேலான ஒன்றை ஒருவன் நன்கு உணர வேண்டும். அதுவே அணுவைக்காட்டிலும் சிறியது. பிரகாசமாக இருப்பது, தூய மனம் கொண்டவர்களின் தியானத்தினால் அறியப்படுவது. சிலர் அதனை அக்னி என்பர். சிலர் மனு (சிந்தனையாளர்) என்பர், சிலர் பிரஜாபதி(உயிர்களின் தலைவன்) என்பர். வேறு சிலர் இந்திரன் (பிரகாசமானவன்) என்பர். சிலர் பிராணன் (உயிர் நாடி) என்பார்கள். மற்றும் நிலையான பிரம்மம் (மிகப்பெரியது)என்றும் சொல்வார்கள். என்று மாபெரும் முனிவரான மனு தெரியப்படுத்தியுள்ளார்.