June 26, 2020

பொற்கொற்றி

By Tamil
ஆடுகளம் படம் பார்த்தவர்களுக்கு கீழே இருக்கிற இலக்கியப் பதிவோட அர்த்தம் புரியும்.
பாய்ந்தும் எரிந்தும் படிந்தும் பலகாலும் காய்ந்தும் வாய் கொண்டும் கடுஞ்சேவல் புறப்பொருள் வெண்பா மாலை, 348 சண்டைக்கோழிகளை குறித்தான சங்க இலக்கிய பாடல் இது.
தமிழகத்தில் மட்டுமல்ல நம் முன்னோர்கள் வாழ்ந்த மொகஞ்சதாரோவில் கிடைத்த அகழ்வாய்வில்  சேவல்கள் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையில் சேவல் நகரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சேவல்களின் கழுத்து நிமிர்ந்து புடைத்திருக்கிறது. வால் இறக்கை மேல் நோக்கி விறைப்பாக உள்ளது. கால்கள் தரையில் படாமல் மேலெழுந்து சண்டையிடும் தோரணையில் உள்ளன. 
சோழர்களின் தலைநகரம் உறையூர் என்று மட்டுமல்லாமல் “கோழி” என்றும் அழைக்கப்பட்டது.
இந்நகரம் இருந்த இடத்தில் சேவல் ஒன்று ஒரு யானையை எதிர்த்து வீரமாக சண்டையிட்டதாகவும் அதன் வீரத்தைக் கொண்டாடும் வகையில் “கோழி” என்று அந்நகருக்கு பெயர் சூட்டப்பட்டது.
சங்ககால சோழர்கள் சேவல் யானையுடன் சண்டை போடுவது போன்ற நாணயத்தை வெளியிட்டனர். யானையை எதிர்த்த வீரக் கோழி பற்றி சிலப்பதிகாரத்திலும் “முறஞ்செவி வாரணம் முன் சமம் முருக்கிய புறஞ்செவி வாரணம்” என முறஞ்செவி வாரணம் என யானையையும் வாரணம் புறஞ்செவி வாரணம் எனக் கோழியையும் குறிக்கிறது.
திருச்சிராப்பள்ளி்  உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் யானையுடன் கோழி சண்டையிடுவது போன்ற சிற்பங்கள் உள்ளன.
தமிழ்ப் பண்பாடான கோழிச்சண்டை சிந்துவெளி நாகரீகம் வளர்ந்து இருந்த பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர், இடைக்கால இலக்கணமான நன்னூலுக்கு உரை எழுதிய சங்கரநமச்சிவாயரும் கோழிச் சண்டைகள் குறித்து குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் அரசலாபுரம் என்ற ஊரில் கி.பி 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த சண்டை கோழிக்காக எழுப்பபட்ட நடுகலும் கல்வெட்டும் கிடைத்தது. அதில் சண்டைக்கோழி உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. 
இந்தளூரில் கிடைத்த சண்டைக் கோழிக்கான நடுகலில் அதன் உருவத்தோடு சேர்த்து “பொற்கொற்றி” என்று அதன் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.
3000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கோழிச் சண்டையை நீங்கள் விளையாடக் கூடாது என்று அதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நம்மைத் தடுத்து வைத்துள்ளார்கள்.
வீரக் கோழிகளுக்கு நடுகல் வைத்து பெருமைப்பட்ட சமூகமான‌ நாம் சுதந்திரமாக நமது முன்னோர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொடர முடியாத துர்பாக்கியசாலிகள் அல்ல, அடிமைத்தனத்தை அனுமதித்த  முட்டாள்கள்.
நமது வீரம் என்பது நமக்கான உரிமைகளை மீட்டெடுப்பதேயன்றி நமக்குள் மோதிக் கொள்வது அல்ல !
பகிர்வு