August 13, 2020

மங்கள் பாண்டே

By Tamil

உங்களுக்கு தெரியுமா.. “மங்கள் பாண்டே” யாரென்று..??

நம் நாட்டில் 1857-ம் ஆண்டு பரபரப்பூட்டும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்தச் சமயத்தில் ஆங்கிலப் படையில் இருந்த நம் நாட்டு வீரர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அந்தப் புரட்சியை சிப்பாய்கள் நடத்திய சாதாரணக் கலகம் என்று வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைத்து விட வெள்ளை ஆட்சி யினர் முயன்றனர்.

ஆங்கிலேயரின் அந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து அது பாரதப் படை வீரர்கள் நடத்தும் புரட்சியே என்று வெளியுலகத்துக்குத் தெரியச் செய்தவர் “மங்கள் பாண்டே” என்ற போர் வீரர்.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் பாரத ராணுவத்தில் ஒரு வீரராக இருந்தார் மங்கள் பாண்டே. விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட உணர்ச்சியை அவர் தூண்டி விட்டார். அந்தச் செய்தி அக்காலத்தில் போர்ப் படைத் தளபதியாக இருந்த கிïசன் என்ற ஆங்கிலேயருக்கு எட்டியது. மங்கள் பாண்டேயைக் கைது செய்யுமாறு அவர் இடம் பெற்றிருந்த 34-வது படைப் பிரிவு வீரர்களுக்குக் கிïசன் உத்தரவிட்டார்.

படை வீரர்கள் அவர் உத்தரவுக்குப் பணிய மறுத்தனர். எந்த வீரரும் மங்கள் பாண்டேயைக் கைது செய்ய முன் வரவில்லை. ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட கிïசன், மங்கள் பாண்டேயை கைது செய்ய மறுத்த வீரர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்குமாறு உத்தரவிட்டார். 34-வது படை வீரர்கள் மங்கள் பாண்டேயின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

கிïசன், லெப்டினன்ட் பாக் ஆகியோர் இந்திய வீரர் களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனவே ஆங்கில அதிகாரிகள் கலக்கமடைந்தனர். ஜெனரல் கீயர்சே என்ற வெள்ளையரிடம் படை வீரர்களின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜெனரல் கீயர்சே ஒரு பெரும் படையுடன் வந்து மங்கள் பாண்டேயின் தலைமையில் இருந்த படை வீரர்களை வளைத்துக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டார்.

ஜெனரல் கீயர்சேயை எதிர்த்துச் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த மங்கள் பாண்டே, கீயர்சேயிடம் சிக்கிக் கொள்ள விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ஆனால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். பின்னர் மங்கள் பாண்டே சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் சேர்ந்து புரட்சி செய்த படை வீரர்களின் பெயர்களைத் தெரிவித்தால் மங்கள் பாண்டே மன்னிக்கப்படுவார் என பிரிட்டீஷ் படை தலைமையினர் ஆசை காட்டினர். ஆனால் தம்மைச் சேர்ந்த யாரையுமே காட்டிக்கொடுக்க மங்கள் பாண்டே விரும்பவில்லை. எனவே அவரைச் சித்திரவதை செய்து உண்மையை வர வழைக்க முயன்றனர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்ட பாண்டே, கிளர்ச்சியாளர்கள் யாரையும் காட்டிக் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

கடைசியில் மங்கள் பாண்டேக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது கூட, கிளர்ச்சிக்காரர்கள் பெயர்களை அறிவித்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என்று பாண்டேக்கு பிரிட்டீஷ் அதிகாரிகள் ஆசை காட்டினர். ஆனாலும் மங்கள் பாண்டே அசைந்து கொடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு, மங்கள் பாண்டேயைத் தூக்கிலிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

இவரைப் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டீஷ் ஆட்சி கொன்று தீர்த்தது.

ஆனாலும் இறுதியில் ஏகாதிபத்தியம் ஒழிந்தது. அதன் பின்னணியில் மங்கள் பாண்டே போன்ற தூய வீரர்களின் பங்கு உள்ளது.

பகிர்வு