June 26, 2020

மறக்கஇயலாகானங்கள்

By Tamil
மறக்கஇயலாகானங்கள் 121 : மேகமே.. மேகமே.. பால்நிலா தேயுதே …”
1981 இல் வெளிவந்த “பாலைவனச்சோலை “படத்திற்காக வாணி ஜெயராம் பாடிய பாடல், இப்பாடலுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர்,  ஷங்கர் கணேஷ் . இன்னமும் இவர்களை யாராவது நியாபகம் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே … சென்ற தலைமுறையோடு இவர்களின் பணி முடிந்ததாலோ என்னமோ? எண்பதுகளில் பிறந்தவர்களோடு இவர்களை நியாபகம் வைத்திருப்போர் இல்லாது போயினர் . நாங்களுமே அவ்வபோது சிலோன் வானொலியிலும், திருச்சி சென்னை அலைவரிசை வானொலிகளிலும் “இப்பாடலுக்கு இசை ஷங்கர் கணேஷ் ” என்று கேட்பதோடு சரி .. வெகுநாளாக இவர் ஒரே நபர் என்று நினைத்திருந்தோம், பிறகுதான் இவர்கள் விசுவநாதன் – ராம மூர்த்தி போல இரண்டு பேர் என்று தெரியவந்தது .. யார் இவர்கள் ..? ஷங்கர் கணேஷ் !!!
             இளையராஜாவின் ஆளுமையில் இருந்த இசை ராஜாங்கத்தில் தாங்களும் ஒரு அங்கமாக ஷங்கர் கணேஷ் தொன்னூறுகள் வரை தாக்குப்பிடித்து அட்டகாசமான பாடல்களை தந்து கொண்டுதான் இருந்தனர், இவர்களின் ராசியோ என்னவோ இவர்களின் மிக அழகான பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகாத படங்களில்தான் இருந்தன ,  ராஜாவிற்கு பன்னிரண்டு வருடங்கள் முன்னமே தனக்காக ஒரு பெரிய இடத்தை பிடித்து “இன்னிசை வேந்தர்கள்” என்ற பட்டத்தோடே இருந்தனர்,
• ஆட்டுக்கார அலமேலு
• சின்ன சின்ன வீடுகட்டி
• டார்லிங் டார்லிங் டார்லிங்
• இதய தாமரை
• இதய வீணை
• கன்னிப் பருவத்திலே
• குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
• நாகம்
• ஒத்தயடிப் பாதையிலே
• பன்னீர் நதிகள்
• பௌர்ணமி அலைகள்
• ரங்கா
• தாய் இல்லாமல் நான் இல்லை ..
என இவர்களின் நிறைய ஹிட் படங்களும் இருந்தன ,
             இளையராஜா- ஜானகி போலே ஷங்கர் கணேஷ் – வாணி ஜெயராம் கூட்டணியின் பல பாடல்கள் மெகா ஹிட், ஹிட்டே கிடைக்காத வாணி ஜெயராமுக்கு சங்கர் கணேஷின் பல பாடல்கள் கமர்ஷியல் ஹிட் ராசியை தந்தன என்றே கூறலாம் .. அவ்வளவு அழகழகான பாடல்களை தந்த ஷங்கர் கணேஷ் தான் “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது “ பாடலுக்கும் இசை அமைத்திருந்தனர் .. வாணி ஜெயராம் தன் தேன் குரலால் பாட்டுக்கு உயிரை தந்திருந்தார்..
            வாணி ஜெயராம் … முதல் முதலாக தென் இந்தியப்பாடகிகள், வட இந்திய பாடகிகள் என்ற இரு வேறு எல்லைகளுக்குள் இருந்த எல்லோரையும் விடுத்து முதன்முதலாக அகில இந்தியாவும் விரும்பும் பாடகியாவார், இந்தியில் பாடகிகயாக அறிமுகமான வாணி பாடிய முதல் பாடலான “போல் ரே பப்பி” பாடல் கொடுத்த புகழ் வெளிச்சம் கண்டு இந்தி பாடகிகாளாான லதா மங்கேஷ்கர்  & ஆஷா போஸ்லே இருவருமே சற்று ஆடித்தான் போனார்கள்.. அறிமுகமான கையோடு மடமடவென அவர் ஏறிய புகழ் ஏணி கண்டு திகைத்தவர்களின் அடுத்தடுத்த காய் நகர்த்தல்களில் வாணி ஜெயராம் இந்தியில் மேலும் பாட இயலாது தடுத்த நிறுத்தபட்டார்,   
            ஒரேநேரத்தில் ஜேசுதாசும், வாணி ஜெயராமும் அடைத்த புகழ் வெளிச்சத்தை கண்ட வட இந்திய இசை உலகில் பலர் இனிமேல் இந்தியில் தொடர்ந்து பாடக்கூடாது என்ற செய்த  சதிகளின் உச்சகட்டத்தில் தென்னிிந்தியாவிற்க்கே அனுப்பப்பட்டனர் என்று ஒரு தகவல் காலம் காலமாக உலவுகிறது, சமீபத்தில் கூட ஒரு டிவி சந்திப்பில் வாணி ஜெயராமிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது இது பதில் சொல்லாமல் விரக்தியாக சிரித்தார் , மென்மையான சிரிப்பின் பின்னணியில் ஆழ்ந்திருந்த அடர்த்தியான சோகம் அந்த புன்னகையில் உறைந்திருந்தது தெரியலும் புரியாமலும் இல்லை . இது குறித்து தான் “தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ” என்று ஒரு புத்தகம் எழுதுவதாக சொன்னார் , எப்பெர்பெற்பட்ட தலைப்பு … ஹ்ம்ம்ம் …
                ஆனால் அதே நேரத்தில் வாணிஜெயராம் தமிழில் பாடிய “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ ..” பாடலின் மிக பெரிய வெற்றியில் எம் எஸ் வி யின் செல்ல பிள்ளை ஆனார் என்றே கூறலாம், அந்த அளவுக்கு எழுபதுகளில் எம் எஸ் வியின் இசையில் வாணி ஜெயராம் பாடல்களை பாடி குவித்தார், தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கில் வாணி ஜெயராமுக்கு மிக பெரிய வரவேற்ப்பு இருந்தது என்றே அடித்து சொல்லலாம்,   தெலுங்கில் கே.வி மகாதேவனின் இசை அமைப்பில் சங்கராபரணம் படத்திற்காக பாடிய குறும்பாடலுக்காக தேசிய விருதை வென்றார், லதா, ஜானகி, சுசீலா ஆகியோர் நான்கு தேசிய விருதுகளை பெற்றபோது வாணியும் மூன்று தேசிய விருதுகளை பெற்று சம அந்தஸ்தோடு இருந்தும் என்னவோ பெரிதாக யாராலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார்,
                இளையராஜா அற்புதமான பாடல்களை வாணிக்கு தந்திருந்தாலும் இளையராஜா என்றால் ஜானகிதான், வாணி ஜெயராம் என்றால் எம் எஸ் விதான் என்றே ரசிகர்கள் அடையாளடுத்திகொண்டதாலோ என்னவோ வாணி இளையராஜாவின் பிரியமான  பாடகியாக யாருமே அடையாளம் கொள்ளவில்லை, ஆனால் ராஜா வாணி ஜெயராமுக்கு பாடல்கள் தராமல் இல்லை .. மிக மிக அற்புதமான மெட்டுக்களை வாணிக்கு வழங்கி அவரை பெருமை படுத்தினார் என்றும் கூறலாம்..  இசைஞானி இளைய ராஜாவின் மிக அற்புத மெட்டுக்களாக அவரின் டாப் லிஸ்ட்டில் இருக்கும் மிக முக்கியபாடல்கள் லிஸ்டில் வாணி பாடிய பாடல்களும் உண்டு ..
அவற்றில் சில …
என் உள்ளில் எங்கோ எங்கும் கீதம் ஏன் கேட்கிறது
நானே நானா .. யாரோ தானா .. மெல்ல மெல்லா மாறினேனா..
கவிதை கேளுங்கள் இதுவும் புது வகை யாகம்..
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..
வா வா பக்கம் வா .. பக்கம் வர வெக்கமா
ஏ பி சி நீ வாசி …
            உட்பட மிக அழகான நூறு பாடல்கள் வாணிக்கும் ராஜா தந்திருந்தார், அதே போல ஜானகி தமிழில் பாடிய பல அற்புத பாடல்கள் தெலுங்கில் டப்பிங்(மொழி மாற்றம்) செய்யப்படும்போது வாணியின் குரலுக்கே  இளையராஜா வாழங்கியிருந்தார், அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜானகி பாடிய “ஆயிரம் தாமரை மொட்டுக்களே”,  சசிரேகா பாடிய “விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே”  பாடலில் இருந்து அக்னி நட்சத்திரம், மௌன ராகம் பாடல்கள் தெலுங்கில் ஜானகிக்கு மாற்றாக வாணிக்கு தந்திருந்தார்,
         இதில் இருந்து ராஜாவின் மனதில் வாணிக்கும் குறிப்பிடத்தக்க இடம் இருந்தது எனவும் கூறலாம், வாணிக்கு தெலுங்கில் இருந்த மார்கெட் வேல்யூவும் ஒரு காரணம் என்று வாணி ரசிகர்கள் கூறுவதுண்டு .. அந்த அளவுக்கு சங்கராபரணம் மூலம் வாணி ஜெயராம் ரசிகர்கள் மனதில் தங்கியிருந்தார், ஆனால் இந்தியாவிலேயே ஸ்ரேயா கோஷலுக்கு முன்பே தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்பூரி, மராத்தி உட்பட  இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடிய பெருமை வாணி ஜெயராம் ஒருவரையே சாரும் ..
இளையராஜா அல்லாத மற்ற இசை அமைப்பாளர்களிடம் வாணி ஜெயராம் பாடிய துள்ளல் பாடல்கள் தனி ..
வா வா என் வீணையே .. விரலோடு கோபமா..
 அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் ,
ஏய் வஞ்சிக்கொடி கட்டிக்கடி இந்த மாமனை..
ரங்கமணி தங்கமணி வாரே வா..
மழைக்கால மேகம் ஒன்று மழை ஊஞ்சல் ஆடியதே ,
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா ,
ஹேய் ஐ லவ் யூ ,
ஆளை அசத்தும் மல்லியே .,.
அடுக்குமல்லி பூத்திருக்குது ,
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா 
உட்பட வாணி பாடிய எக்கசக்க பாடல்கள் இன்னமும் ரசிகர்கள் மனசை மயக்கிகொண்டேதான் இருக்கிறது , குறிப்பாக நீயா படத்தில் பாம்பாக ஸ்ரீப்ரியா ஆடிப்பாடும் “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ” இன்றும் காலத்தால அழிக்க முடியாத ஒரு காவியபாடலே ..
            இவை எல்லாம் ஒருபுறம் இருக்க இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் இன் ஆஸ்தான பாடகியாக வாணி சத்தமில்லாமல் உருவானார், அப்போது வடஇந்தியாவில் கஜல் என்று சொல்லப்படும் வகையரா பாடல்கள் மிக பிரபலம், அதற்காகவே சில மேடை பாடகர்கள் உருவாகி கஜல் பாடகர்கள் என்ற தனி அடையாளத்தோடு பெருமிதமாக பவனி வந்தனர், ஹரிஹரன் கூட ஒரு கஜல் பாடகராக அறிமுகமான பின்தான் சினிமா உலகிற்கு பாட வந்தார் , ஷங்கர் கணேஷ்  தங்கள் பாடல்களுக்காக தனி வண்ணம் தேடியோ என்னமோ வாணி ஜெயராமை தங்களில் கஜல் மாதிரியான சோலோ பாடல்களில் பாடவைத்து தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி கொண்டனர் .. அப்படி பட்ட ஒரு பாடல்தான் “மேகமே மேகமே .. பால்நிலா  தேயுதே ..” இப்பாடல் வந்த காலங்களில் மிக பெறும் ரசிகர்களை வாணி ஜெயராமுக்கு பெற்றுத்தந்தது , சங்கர் கணேசுக்கும் மிகபெரிய ஒரு மதிப்பையும், நற்பெயரையும் இப்பாடல் பெற்றுத்தந்தது என்றும் கூறலாம், எத்தனை காலம் ஆனபின்பும்  “மேகமே மேகமே .. பால்நிலா  தேயுதே ..”  & “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது … ”  இவ்விரண்டு பாடல்களும் ஷங்கர் கணேஷ் – வாணி ஜெயராம் கூட்டணியின் பெருமையை பறைசாற்றும்..
            வாணியின் குரலுக்கு ஒரு தன்மை உண்டு .. குரலிலேயே நவரசங்களையும் காட்டும் வாணியின் பாணியே தனி .. “என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்” பாடலில் வாணி ஜெயராம் பாடிய விதமே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறலாம் .. கணவன் அல்லாது மாற்றான் ஒருவனோடு காட்டில் பைக்கில் பயணிக்கும் ஒரு பெண்ணின் பயமும், மாற்றான் அவளை அடைய நினைத்து அவளை மயக்க எண்ணும்போது அவனை விலக்கவும் முடியாமல் , ஏற்கவும் முடியாமல் நாயகி தவிப்பாள், அந்த கணத்தில் அவள் மனதில் பயமும், காமமும், பரிதவிப்பும் கவ்விகொண்டிருக்கும், அழுகைக்கு ஒரு படி குறைந்து, காமத்தின் மோகத்தில் ஒரு படி தாண்டி அழுகையும் சோகமும் காமமும் மூன்று உணர்வுகளையும் கொட்டி தவித்து பாடும் வாணியின் குரல் அடேங்கப்பா ரகம்..
       மேகமே .. மேகமே.. பாடலின் சோகம் ஒரு ரகம் .. தவிப்பும், பிரிவும், எதிர்பார்ப்பு பொய்த்துப்போன சோகமும் சேர்ந்து ஒரு இளம்பெண்ணின் தவிப்பை வைரமுத்து எழுத வாணி தன குரலில் அதை கொட்டும் சுகமே அலாதி …சோகம் கூட சுகமாயிருக்கும் இப்பாடலில் நாம் முழ்கும் பொது .. இப்பாடலின் மெட்டு ஒரு மிகபெரிய பலம்.. இந்தி கஜல் பாடகர் ஜெக்ஜித் சிங் பாடிய “தும் நஹின்.. கம் நஹின் ” என்ற பாடலை தழுவியே ஷங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார், காப்பி என்றும் சொல்லலாம், ஆனால் ஷங்கர் கணேஷ் அதில் செய்த மிக அழகான சில இம்ப்ரூவ்மேன்ட்ஸ்களும், வாணியை  பாடவைத்த விதமும் சேர்ந்து இப்பாடலை சங்கர் கணேஷுக்கு சொந்தமாக்கி விட்டன என்றும் சொல்லலாம், அவ்வளவு அற்புதமாக வாணி இப்பாடலை பாடிய விதத்தில் தான் ஒரு சாதாரண பாடகி அல்ல என்பதையும், தனது ஹிந்துஸ்தானி ஞானத்தையும் இப்பாடலில் அள்ளிகொடுத்த விதத்தில் வாணியும் ஷங்கர் கணேஷும் இருவருமே மாற்றி மாற்றி நன்றி சொல்லிக்கொள்ள கடமைப்பட்டவர்கள் ..
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி……….
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே..
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
தநிரிஸ ரிம தநிஸ் தநிபகா
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?
பாவையின் ராகம் சோகங்களோ? ஆ……
பாவையின் ராகம் சோகங்களோ?
நீரலை போடும் கோலங்களோ?
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே…
தூரிகை எரிகின்ற போது – இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ?…….
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே..
         என்ன ஒரு அற்புதமான வரிகள் , நண்பர்களாக பழகும் ஒரு பெண்ணும் நான்கு ஆண்களையும், அவர்களில் ஒருவரோடு அப்பெண்ணுக்கு காதல் மலர்வதையும், அவள் கூடிய சீக்கிரம் நோயால் இறக்கபோவது அறிந்ததும் தன் முன்னாள் நண்பனும், அறிவிக்கபடாத காதலனும் ஆகிய நாயகனோடு தன நிலைமையை சொல்ல முடியாமல் தவித்து பாடல் மூலமாக தான் சீக்கிரம் இவ்வுலகை விட்டு போகபோவதை கூறவேண்டிய பாடல்.. எவ்வளவு அழகாக வைரமுத்து எழுதி இருக்கிறார்..
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?
பாவையின் ராகம் சோகங்களோ? ஆ……
பாவையின் ராகம் சோகங்களோ?
நீரலை போடும் கோலங்களோ?..
       இதை விட அழகாக இலை மேல் பட்ட மழைதுளியாக ஒரு பெண்ணின் மனம் படும் பாட்டை எப்படி விளக்க இயலும்.. கூறுங்கள் .. “புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம் வரமோ ??? ..” என்ற ஒரு வரியில் கவிஞர் நம் மனதை பிய்த்து போட்டு பித்து பிடிக்க வைத்து விடுகிறார், இப்படியும் புதுவிதமான வரிகளை வார்த்தைகளை தரமுடியும் என்று வைரமுத்து தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கியதில் இப்பாடலுக்கும் ஒரு பங்கு உண்டு , நன்றாக உற்று கவனித்தால் வைரமுத்து இளையராஜாவுடனான இணைப்பில் ஒரு விதமாகவும், இளையராஜா அல்லாத இசை அமைப்பாளர்களுடன் வேறு மாதியாகவும் எழுதியது போல ஒரு தோணல், எனக்கு மட்டும்தான் இப்படி தோணுகிறதா .. அல்லது அதுதான் நிஜமா என்று நீங்களும் சேர்ந்துதான் சொல்ல வேண்டும் .. குறிப்பாக இரண்டாம் சரணத்தை உற்று கவனித்தால் புரியும் ..
தூரிகை எரிகின்ற போது – இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ?…….
    இதே வரிகளை இதே பாணியைத்தான் வைரமுத்து ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தபோது மீண்டும் தொடங்கினார், உலக ரசிகர்களால் அது கொண்டாடப்பட்டு அதுவே வைரமுத்து ஸ்டைல் என்று ஆகிவிட்டது , இன்று வரை பழ புது புது கவிஞர்களால் இதே பாணி கடைபிடிகபட்ட்டலும் ஒவ்வொரு முறையும் தனக்கென்று புது புது வார்த்தைகளை பிடித்து இன்னமும் வைரமுத்து தனக்கென்று இருக்கும் சிம்மாசனத்தில் முப்பது ஆண்டுகளாக அமர்ந்தே இருக்கிறார், முகநூலில் கவிதை என்று தத்து பித்து என்று உளரும் எங்களைபோன்ற புதுப்புது தான்தோன்றி கவிஞர்கள் உருவாவதற்கும் வைரமுத்துதான் “ரோல் மாடல்”…
     முதல் இடை இசையில் ஒற்றை வயலின் சோகத்தை சொல்லும் விதம் நெஞ்சத்தை பிழியும், ஆனால் இரண்டாம் இடை இசையில் துள்ளி குதிக்கும் சந்தூரின் மீட்டல் ஒரு அற்புதம் என்றும் சொல்லலாம், இதே ஜலதரங்க பாணி இசையை “அடிப்பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை ” பாடலில் இளையராஜா அமைத்திருந்தார், ஆனால் இப்பாடலுக்கும் அதே பாணி ஒரு சுகத்தை தருகிறது, இப்பாடலின் சூழ்நிலைக்கு அந்த இசை பொருந்தாதது போல உறுத்தினாலும் சந்தூருக்கு அடுத்ததாக வரும் புல்லாங்குழல் மீண்டும் நம்மை இழுத்து பிடித்து கொண்டு வந்து பாடலின் சோகத்திற்கும் நம்மை திணிக்கிறது , அந்த இடத்தில தானும் இடை இசை அமைப்பதில் கொஞ்சம் கெட்டிகாரர்தான் என்று சங்கர்கணேஷ் நிரூபித்திருப்பார்கள் ..
                   “பாலைவன சோலை ” படம்  எண்பதுகளில் சக்கைப்போடு போட்ட படம்..  ஆண் பெண் நட்பு பற்றின பிந்தைய படங்களுக்கு ஒரு உதாரணம் என்றும் கூட சொல்லலாம்..இந்தப்பாடல் வாணி ஜெயராமின் இசை வாழ்வில் நிச்சயமாக ஒரு மைல்கல்..பிரமாதமான இசை.. கொஞ்சிக் குழையும் வாணி.. விழிகளை மூடிக்கொண்டு பாட்டில் வருவது போன்ற ஒரு புல்தரையிலோ மொட்டை மாடியிலோ சாய்ந்து கொண்டு கேட்டால்..சொர்க்க சுகம் தான்.. ஆனால் சுகவீனமாக இருப்பது சுகாசினி மட்டும் தானா..சந்திரசேகருக்கும் உடல் நிலை சரியில்லையா என்று கேட்க வைக்கும் தோற்றத்துடன் பரிதாபமாக இருக்கிறார்..ஒரு வரியில் எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் என்று சுகாசினி பாடும் போது மட்டும் அப்படி ஒரு ஆயிரம் வாட்ஸ் அசடு வழிசல்..ம்ம்ம்.. ” சேகர் ..நாம ஏன் நட்புங்கற எல்லைய தாண்டி வந்தோம்.. வருத்தமாருக்கு  என்று சுகாசினி கேட்பதும் “அது நம்ம கையில இல்ல கீதா ..” இவர் உருகுவதும்..எத்தனை காதலர்களுக்கு வேதமாக இருந்ததோ.. என்று இணையத்தில் ஒரு நண்பர் எழுதியிருந்தார் .. மிக சரியான உண்மை ..
                  ஆண் , பெண் என்ற இரு பிரிவுகளும் நண்பர்களாக பழகலாம் என்ற தாரக மந்திரத்தை  முதல் முதல் கொண்டு வந்த படம் எதுவென்றால் பாலைவன சோலை தான்..  இப்படத்திற்க்கு பிறகு வர ஆரம்பித்த நான்கு நண்பர்கள் ஒரு பெண் நண்பர்கள் , அதில் ஒருவரை மட்டும் அந்த பெண் காதலிப்பது என்ற ஒரு ஸ்டைலையே தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த படம் என்றும் கூறலாம் . இப்படத்திற்கு பிறகுதான் ஆண் பெண் ப்ரெண்ட்ஷிப் என்ற ஒரு வார்த்தையே நம் தமிழ் நாட்டில் தைரியமாக கேசுவலாக பேசப்பட்டது , கலாசார சீரழிவுக்கு வழிவகுத்த படம் என்று அந்த சமயத்தில் ஒரு கூக்குரல் இருந்தாலும் காலமாற்றத்தையும், அதன் தாக்கங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை இப்படம் மூலமாக இயக்குனர்கள் ராபர்ட் ராஜசேகர் தந்திருந்தனர் , இப்படத்தின் வெற்றி குறித்து தாங்கள் மிகவும் கவலைப்பட்டதாகவும், இப்படி ஆண் பெண் நட்பை நம் தமிழ்நாட்டு ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா என்று தாங்கள் மிகவும் தயங்கி தயங்கியே படத்தை எடுத்தாகவும் , கிளைமாக்சில் சுகாஷினி இறப்பது போன்ற  முடிவை மிகவும் பயந்தே எடுத்ததாகவும் ரசிகர்கள் ஏற்றுகொண்டது தாங்களால் கூட நம்ப இயலாத ஒரு ஆச்சர்யமாகவும் இயக்குனர்கள் ராபர்ட் ராஜசேகர் கூறியிருந்தனர் ..
           நிஜமாகவே மரத்தை சுற்றியும், வெள்ளை தேவதைகளை சுற்றி ஆடவைத்தும் டூயட் பாடிகொண்டிருந்த எண்பதுகளில் இப்படி ஒரு படத்தை எடுக்க துணிந்த ராபர்ட் ராஜசேகர் இரட்டை இயக்குனர்களுக்கு சபாஷ் .. படத்தில் அந்த காலத்தைய வேலை இல்லாதிண்டாட்டத்தையும், சென்னை மாநகரின் இளைஞர்களின் அறை வாழ்க்கை உலகத்தையும்,இயல்பாக கூறிய விதத்தில் நெஞ்சை தொட்டிருந்தனர், நிஜம்மாகவே பஞ்சத்தில் அடிபட்டது போல இருக்கும் நாயகன் சந்திரசேகர், பணம் இருந்தும் செலவழிக்க இயலாத பணக்கார இளைஞனாக ராஜீவ் மிகவும் சீரியசாக நடிக்கும் ஜனகராஜ், நடிக்க மிகவும் பிரயத்தனப்படும் சுகாசினி என்று கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும் இந்த “பாலைவன சோலை “..
       இந்த படம் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மீண்டும் ரீ மேக் செய்யப்பட்டு வந்தது, இந்தப்பாடலும் எந்த மாற்றமும் இல்லாது புதுபிக்கபட்டு வந்தது , அந்த வெர்சனை பாடியவர் சாதனா சர்கம் அவர்கள், இதுவும் ஒரு விதமாக நன்றாகவே இருந்தது , சாதனா பாடலை வாணிக்கும் எந்த குறைவும் இல்லாமலேயே பாடியிருந்தார், ஆனால் இன்னமும் வாணியின் குரல் எந்த குறைவும் இல்லாமல் அதே இளமையோடு, அதே இனிமையோடு பொலிவோடு இருக்கும்போது எதற்க்காக சாதனாவை பாடவைத்தார்கள் என்பது மட்டுமே ஒரு எண்ணம்.. ஆனால் சாதனா பாடியதும் ஒரு புது சுகமாக இருந்தததும் உண்மையே ..
மேகமே மேகமே .. பால்நிலா தேயுதே ”  பாடல் காலத்திற்கும் இப்பாடல் சங்கர் கணேஷ் & வாணி ஜெயராம் இருவரின் பெயரையும் சரித்திரத்தில் இருந்து நீக்காது இருக்க துணை புரியும் ..
http://www.youtube.com/watch?v=0Omj5KAr3q4
By Viji C0onnect