Tamil

die älteste lebendige Sprache der Welt

ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன்

ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறந்த சிவபக்தனான ராவணன், ராமன் கையால் மாண்டதற்கு அவன் செய்த சிவ அபராதமும் ஒரு முக்கியக் காரணமாகும் என்பர் ஆன்மிகச் சிந்தனையாளர்கள்.
ராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு ஆகாய மார்க்கமாக விரைந்து சென்று கொண்டிருந்தான். அதை கழுகரசனான ஜடாயு பார்த்துவிட்டான்.

அவரும் தசரத மன்னனும் இணைபிரியா நண்பர்கள். ஆகவே ராவணனது விமானத்தை இடை மறித்தான் ஜடாயு. சீதையை விட்டுவிடுமாறு ராவணனுக்கு அறிவுரை கூறினார். அதனைக் கேட்டு ஆணவச் சிரிப்பு சிரித்த ராவணன், என் பாதையை விட்டு விலகு. இல்லையேல் உன்னைக் கொன்று போடுவேன் என ஜடாயுவை எச்சரித்தான். இதைக்கேட்ட ஜடாயு மிகுந்த கோபங் கொண்டார். வேகமாகப் பறந்து வந்து ராவணனைத் தன் கூரிய மூக்கினாலும் நகங்களாலும் தாக்கினார்.

ராவணனின் மேனியிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. உடனே ராவணன் ஜடாயுவைப் பார்த்துக் கூறினான். பட்சிராஜாவே ! நீ சுத்த வீரன்தான் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். நாமிருவரும் இதுவரை சலிக்காமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி யாருக்கென்று புரியவில்லை. ஆகவே நீர் உமது உயிர்நிலை உமது உடலில் எங்கிருக்கிறது என்பதைக் கூறும். நானும் என் உயிர்நிலை இருக்குமிடத்தைக் கூறுகிறேன். இருவரும் அதை நோக்கி நம் தாக்குதலைத் தொடங்குவோம். அப்போது தான் நம்மில் ஒருவர் சுலபமாக வெற்றி பெறலாம் எனக் கூறினான்.

பட்சி ராஜாவான ஜடாயுவிற்கும் அது சரிதான் எனப்பட்டது. உடனே அவன், கூறினான்; பட்சிகளாகிய எங்களுக்கு உயிர்நிலை எங்களது இறக்கைகளில்தான் உள்ளது என்றான். அப்படியா எனக் கேட்டுக் கொண்ட ராவணன் தனது உயிர்நிலை தன் தலையில்தான் உள்ளது என ஜடாயுவிடம் பொய்யுரை பகன்றான். உண்மையிலேயே ராவணனது உயிர்நிலை அமிர்தகலசம் என்ற அவனது நெஞ்சத் தடத்தில் இருந்தது.

உடனே ஜடாயுவும் அவனுடைய தலைகளை நோக்கி சீறிப்பாய்ந்து தன் கூரிய மூக்கால் தாக்கியது. அதற்குள் ராவணன், சிவபெருமான் தந்த சந்திரஹாசம் என்ற வெற்றி வாளையெடுத்து ஜடாயுவின் இறக்கைகளை வெட்டிச் சாய்த்தான். ஜடாயுவும் திகைத்துப்போய் குற்றுயிரும் குலையுமிருமாய் பூமியில் வீழ்ந்தார். ராவணனும் தன் பயணத்தைத் தடையின்றி இலங்கை நோக்கித் தொடர்ந்தான். இந்தச் சம்பவத்திலிருந்து ஓர் ஆன்மிக உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ராவணன் பொய் கூறிப் பிழைத்து விட்டான். ஜடாயு பொய் சொல்லாது உயிர் துறந்தார்.

இதனைப் புள்ளிருக்கு வேளூர் பதிகத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார். பொய் சொல்லாதுயிர் துறந்தாய் புள்ளிருக்கு வேளூரே என்பது அந்த வரி. மேலும் ஜடாயு ஒரு மிகச் சிறந்த சிவபக்தன். தினமும் 100 யோஜனை தூரம் பறந்து சென்று கடற் மணலினால் சிவலிங்கம் செய்து சிவனை அர்ச்சித்து சிவஞான போத சூத்திரங்களைச் சொல்லி வழிபடுவது அவரது வழக்கம். இப்படி தினமும் முறைப்படி சிவனை வழிபட்டு வந்த ஜடாயு என்ற சிவபக்தனிடம் தன் உயிர் நிலை பற்றி பொய் கூறி, ஏமாற்றி வஞ்சித்து அவரை சிவன் தந்த வாளால் வெட்டிக் கொன்றது மூன்றுவித சிவ அபராதங்களை இழைத்ததாகும். ஆகவேதான் ராமன் கையால் அவனுக்கு பயங்கரமான மரணம் சம்பவித்தது.

Next Post

Previous Post

Leave a Reply

© 2020 Tamil

Theme by Anders Norén