திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர உச்சியில் வெள்ளையம்மா நிற்க, அந்நியப்படைகள் அவளை நோக்கி வர, “ரங்கா! சேவை செய்ய பாக்கியம் அளித்த ரங்கநாதா! உன் திருவடியைச் சேர்கிறேன்‘ என கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் மிதந்தாள்.

யார் இவள்?

ஸ்ரீரங்கம் கோயிலின் தேவதாசி. கடவுளின் சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவள். கோயிலை அந்நியர்கள் ஆக்கிரமித்திருந்த காலம் அது. அங்குள்ள
செல்வங்களைக் கொள்ளையடித்து, தங்களது நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். எதிர்த்து நின்றவர்களைக் கொன்றனர். இதனால் மக்கள் பயத்தால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். அப்போது வெள்ளையம்மாளின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது. ‘நாம் ஏன் அந்நியப்படைத் தலைவனின் ஆசை நாயகியாகக் கூடாது. அதன் மூலம் ரங்கநாதரைப் பாதுகாக்க ஏதாவது வழி பிறக்கக் கூடும்….” என யோசித்து அதை செயல்படுத்தினாள். ஒரு வழியாக தளபதியைச் சந்தித்து அவனை மயக்கி ஆசை வலைக்குள் வீழ்த்தினாள்.

ஒருநாள் இரவு தன் திட்டத்தைச் செயல்படுத்த எண்ணி, தளபதியைக் காணப் புறப்பட்டாள். வழி நெடுக வீரர்கள் பாதுகாப்பில் இருந்தார்கள். ஆனால் ஸ்ரீரங்கத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியைக் கொண்டாட மது அருந்தியிருந்தனர் இதைப் பயன்படுத்தி மறைந்து, மறைந்து சென்ற வெள்ளையம்மா, ஒரு வழியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் நுழைந்தாள். உள்ளே தளபதி இருந்த பாசறைக்குள் புகுந்தாள். வெள்ளையம்மாளைக் கண்டதும், “நீ எப்படி இங்கு வந்தாய்? சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே!” என்றான் அவன். “இல்லை தளபதியாரே! ஒரு விஷயம் எனக்கு தெரிய வேண்டும். கோயிலைக் கொள்ளையடித்து செல்வத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டீர்கள். இன்னும் ஏன் இருக்கிறீர்கள்?” என்றதும், “இங்கே ஒரு பொற்குவியல் இருக்கிறதாமே! அதையும் கைப்பற்ற வேண்டும்” என்றான் அவன். அவனிடம் இருந்து தான் எதிர்பார்த்த பதில் கிடைக்கவே ’களுக்’ கென்று சிரித்த வெள்ளையம்மாள்,“இங்கே தேடி என்ன பயன்!
அதோ! அந்தக் கோபுர உச்சியில் அதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். பொன் மட்டுமல்ல! விலை உயர்ந்த வைரம், முத்துமாலைகளும் அதிலுள்ளன. நான் இப்போதே காட்டுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை.

உங்களது வீரர்கள் யாரும் என்னுடன் வரக்கூடாது. நாம் இருவரும் பார்த்த பிறகு வீரர்களின் மூலம் எடுத்துக் கொள்ளலாம். அந்த புதையலில் ஒரு பகுதி எனக்கும் வேண்டும்” என அதன் மீது ஆசை கொண்டவளாக தெரிவித்தாள். தளபதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. சரியென்று அவன் சம்மதிக்க, இருவரும் கோபுர உச்சிக்குச் சென்றனர். அங்கிருந்தே ஸ்ரீரங்கத்தை பார்க்க ரம்மியமாக காட்சியளித்தது. தளபதி அதை ரசித்து நின்ற வேளையில் திடீரென தளபதியை
கீழே தள்ளிக் கொன்றாள் வெள்ளையம்மா. வீரர்கள் கோபுரத்தின் மீதேறினர். வெள்ளையம்மாளும் கடமையாற்றிய மகிழ்ச்சியில் கீழே குதித்து மாண்டாள்.
வீரர்களை அடித்து துவைத்து வெளியேற்றினர் மக்கள். வெள்ளையம்மாளின் பெயரால் இக்கோபுரம் ’வெள்ளை கோபுரம்’ என்றானது. இதற்கு வெள்ளை வர்ணம் மட்டுமே அடிக்கப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.