January 3, 2019

இந்தியப் பெண் – பசு புனிதமானதா?

By Tamil

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-20

சுவாமி பாஸ்கரானந்தர்

இந்தியப் பெண்ணைப் பொருத்த வரை இன்றும் கூட திருமணம் என்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவோ சுய விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அமைவதில்லை. மாறாக அது அவர்கள் தன்னையே கணவனுக்காக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்வியாக அமைகிறது. இன்றளவும் கூட இந்தியப் பெண்ணானவள் தன் கணவனை மணந்துகொண்டு அவனிடம் மட்டும் அன்பைக் காட்டுவதில்லை. திருமணம் செய்து கொள்வதன் மூலம் கணவனது குடும்பம் முழுவதையும் தத்தெடுத்துக்கொள்கிறாள். கணவனது குடும்பத்தினரின் நல்வாழ்விலே தனது இன்பம் இருப்பதாகக் கருதுகிறாள். திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் அவள் தனது கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமல்லாது அவனது பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா குழந்தைகள் போன்ற உறவினர்கள்பால் உள்ள கடமைகளாலும் கட்டுப்பட்டவளாகிறாள். எந்தப் பள்ளியாலும் அளிக்க முடியாத ஒரு கட்டுப்பாட்டைக் குடும்பச்சூழல் தருவதால் அவள் தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொணர்ந்து நல்ல முறையில் நடந்து கொள்கிறாள்.

இந்தியப்பெண்ணின் கருத்துப்படி மேலை நாட்டுக் குடும்ப வழக்கங்கள் மிகவும் சுய நலமுடையவை. மேலை நாட்டுக்குடும்பத்தில் விதவைத் தாயார் வயது முதிர்ந்த தந்தை நொடிந்து போன சகோதரர்களின் துன்ப நிலை ஆகியவைகளைப் புதிதாக வரும் மருமகள் கவனிப்பதில்லை. நவீன காலப்பெண்மணி குடும்பத்தின் அடிமையல்ல. குடும்பத்தின் நலம் விரும்பி.

புகுந்தவீடு செல்லும் ஒரு பெண் சந்தோஷத்துடன் தனது குடும்பத்திற்காகச் சமையல் செய்வது நோய்வாய்ப்பட்டவர்களைப் பாதுகாப்பது . பணிவிடை செய்வது தனது கணவன் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொடுப்பது, மேலும் உறவினர்களுக்கு உதவி செய்வது என்று பணியாற்றுகிறாள். இவ்வாறெல்லாம் செய்வதால் அவள் மனக்கஷ்டம் அடைவதில்லை. இத்தகைய சேவைகள் மூலமாக அவளது பெண்மை நிறைவடைகிறது. அதாவது அவை அவளுக்கு முழு மனநிறைவைத் தருகிறது. அவள் உலகம் முழுவதையும் நேசிக்கும் மனநிலையை அடைகிறாள்

இந்த உலகில் உள்ள எந்த ஒரு சமூகமும் பண்பாடும் முழுமையானது என்று உரிமை பாராட்ட முடியாது. சமூக அடிப்படையில் முழுமைபெறச் செய்வது என்பது முடியாத காரியம். முன்னேறி வரும் சமூகங்கள் அனைத்தும் முழுமை பெறும் இலக்கை நோக்கியேச் செல்கின்றன. எந்தப் பகுதியில் அதிகமான தீய செயல்கள் நடைபெறுகின்றனவோ அந்தச் சமூகங்கள் முழுமை பெறாத நிலையில் உள்ளன என்பதை அறியலாம். சமூகத்தில நடக்கும் ஒவ்வொரு தீய செயலுக்கும் ஒரு தனிமனிதனின் சுயநலமோ அல்லது அச்சமூகத்தில் பல அங்கத்தினர்களின் சுயநலமோ காரணமாக அமைகிறது.

அன்பும் பண்பும் கொண்டு தன்னலமற்று தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் அங்கத்தினர்களால்தான் சமூகம் மேன்மை அடையக்கூடும் . இந்து சமூகம் மேற்கூறிய வகையில் மாற முயற்சி செய்து வருகிறது.

உணவு பற்றிய நியதிகள்

வேத காலத்திற்கு முன்னரே எத்தகைய உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்தோ-ஆரியர்கள் தீர்மானித்து வைத்திருந்தனர். உணவு உடல் வளர்ச்சிக்கு மட்டும் இன்றியமையாதது அல்ல. அது மனிதனது ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைய வேண்டும் என்று கவனமாக இருந்தார். மனுவும் தன்னுடைய நூலில் உண்ணத்தக்கவை எவை? விலக்க வேண்டியவை எவை என்று விரிவாக விளக்கியுள்ளார்.

இந்துக்களின் முன்னோர்கள் வேதகாலத்தில் புலால் உண்டனரா?

வேத காலத்தில் வாழ்ந்தவர்கள் மனு ஸ்மிருதி என்ற நூலில் கூறியுள்ளதற்கேற்ப ஒரு சில வகையான மாமிசத்தை மட்டும் ஏனைய உணவப் பண்டங்களுடன் உட்கொண்டனர். புலால் உணவை மனு அனுமதித்திருந்தாலும் ஜீவகாருண்ய (கொல்லாமை) அடிப்படையில் தாவர உணவு உண்பதையே பொதுவாக பரிந்துரை செய்து வந்தனர். மனுவின் கூற்றின் படி புலால் உண்பதில் குற்றமில்லை. ஆனால் அதைத் தவிர்ப்பதால் எவ்வளவோ பெரிய நன்மைகள் ஏற்படும். எத்தகைய உணவானாலும் அதைக் கடவுளுக்குப் படைத்த பிறகே உண்ண வேண்டும். அடுத்தபடியாக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்று உண்டு.

வேத காலத்தில் இந்துக்கள் மாட்டிறைச்சி உட்கொண்டார்களா?

வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் மாட்டிறைச்சியை உட்கொண்டார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் பால் கொடுக்கும் பசுக்களை ஒரு போதும் கொல்ல மாட்டார்கள். பால்தரும் பசுவை அக்னயா” என்றனர். ” கொல்லத்தக்கது அல்ல” என்ற பொருளைத் தரும் வார்த்தை அது. காளைகளையும் கன்றுகளையும் பால் தராத மாடுகளையும் மட்டும் மாமிசத்திற்காகக் கொன்றனர்.

இன்னைய இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதில்லை.?-

இந்து மதத்தில் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்க்கும் மரபு பிற்காலத்தில் ஏற்பட்டதே.சில அறிஞர்கள் அது ஜைன மதத்தின் தாக்கமாக இருக்கலாம் என எண்ணுகின்றனர். தவிர அதிகமாக மக்கள் வாழும் கிராமப் பகுதிகளில் ஒவ்வோர் இந்துவின் வீட்டிலும் பால் கொடுக்கும் ஒரு பசுவை வைத்திருந்தனர். இந்தியப் பசுக்கள் இயற்கையிலேயே மிகவும் சாதுவாளவை. அவை அவர்களது குடும்பத்தின் ஓர் அங்கத்தினர் போலவே நடத்தப்பட்டன. பசுவின் பாலைக் குடித்தே குழந்தைகள் வளர்ந்தன. மேலை நாட்டில் எவ்வாறு நாயை வளர்ப்பு மிருகமாகக் கருதுகின்றார்களோ அது போல் குழந்தைகளும் பசுவை வளர்ப்பு மிருகம் போல் அன்பு செலுத்தினர்.

மத சம்பிரதாயப்படி மாட்டிறைச்சி விலக்கப்பட்டதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. இந்துக்கள் நடைமுறையில் எந்த விலங்கினமாயினும் அதன் பெண் பால் மிருகத்தைக் கொன்று உண்பதில்லை என்ற பழக்கத்தை அனுசரித்து வந்தனர்.

பசு புனிதமானதா?-

இந்துக்கள் பசுவைப் புனிதமாகக் கருதுவதால் மாட்டிறைச்சியை உண்பதில்லை என்ற எண்ணம் மேலை நாட்டினருக்கு உண்டு. இந்தக் கருத்து சரியானதல்ல. மற்ற மதத்தினரைப் போன்றே இந்து மதத்தினரும் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள். எல்லா உயிரினங்களிலும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் வசிக்கிறார்.ஆனால் அவரது வெளிப்பாடு எல்லாவற்றிலும் சமமாக இருப்பதில்லை. தெய்வீக அவதாரங்களிலும் கடவுளின் வெளிப்பாட்டை அதிக அளவில் உணரலாம். சாதாரண மானுடப் பிறவிகளில் இவருடைய வெளிப்பாட்டை அதிகமாகக் காணமுடியாது. மிருகங்களிடமும், தாவரங்களிலும் மற்றுமுள்ள கீழான உயிரினங்களிலும் அவரது வெளிப்பாட்டை மிகவும் குறைவாகவே காண முடியும்.பாறைகள், கற்கள் போன்ற உயிரற்ற பொருள்களில் கடவுளின் அம்சத்தை மிகச் சிறிய அளவில்தான் காண முடியும். இவ்வாறு பார்த்தோமானால் பசுவிடமும் கடவுள் இருப்பார். அப்படி இல்லாவிட்டால் கடவுள் எங்கிலும் இருப்பார் என்ற வாதம் மறுக்கப்பட்டதாகிவிடும். புனிதமானவற்றுள் புனிதமானதாகக் கடவுளைக் கருதும் போது கடவுள் எதில் இருப்பாரோ அதுவும் புனிதமானது தானே! அதனால் பசுவை ஏன் புனிதமாகக் கருதக்கூடாது.

ஆனாலும் ஓர் இந்து மனிதர்களை விட ஒரு பசுவை உயர்ந்ததாகக் கருதமாட்டான். பண்டைய இந்தோ- ஆரியர்களின் நாடோடிக் கலாச்சாரத்தில் பசுவின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. பசுவின் பால் அவர்களுக்குப் போஷாக்கை அளித்தது. வெண்ணையும், நெய்யும் உணவிற்குப் பயன்பட்டது. விளக்கெரிக்கவும் உபயோகித்தனர்.செருப்பு மற்றும் பல தோலால் ஆனப்பொருள்கள் பசுவின் தோலினால் செய்யப்பட்டன. பசுவின் குளம்புகள் பிசின் தயாரிக்க உதவின. பசுவின் சாணியை விறட்டியாகத் தட்டி அடுப்பெரிக்க உபயோகித்தனர். இவ்வாறு பசு பல வகையில் பயன்படுவதால் ஆரியர்கள் பசுவிடம் ஒரு விதமான தனி ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டு விட்டனர். இதே போன்றே மேலை நாட்டினர் குதிரையின் மேல் ஒரு விதமான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் குதிரை ஒரு பெருந்தன்மையுடைய பிராணி என்பர்.

நன்றாக வளர்க்கப்பட்ட மிருகமானது அனைவரையும் கவரும்.அதே போன்றே இந்தோ-ஆரியர்களும் பசுவின் மேல் ஒரு தனி நாட்டம் கொண்டனரே தவிர மற்றபடி வேறு எதுவும் கிடையாது..