April 18, 2022

பண்பட்ட மனம்

By Tamil

பண்பட்ட மனம் – Cultured mind

நமது உடல் இயற்கையோடு இணைந்திருக்கிறது.  நம் உடலுக்குள்ளே எப்போதும் ஒரு மருத்துவ  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

      பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று ஏதாவது வந்தால், கைப்பக்குவத்திலேயே  நம் பெரியவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். மருத்துவர்களிடம் அனாவசியமாகப் போக மாட்டார்கள். வீட்டில் இருக்கும் சாதாரணப் பொருட்களை வைத்தே குணப்படுத்துவார்கள். முடியாத பட்சத்திற்கு தீராத வியாதி என்றால் மட்டுமே இங்கிலீஷ் டாக்டரிடம் கொண்டு செல்வார்கள்.

ஆனால், இன்று நிலைமை எப்படி?

     குழந்தைகள் லேசாக இருமினாலே, ஏதோ மிகப்பெரிய வியாதியாகக் கருதி மருத்துவரிடம் அழைத்துச் சென்று விடுகிறோம். அதற்கேற்றாற் போல், புதிது புதிதாய் நோய்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது. அன்று உணவே மருந்தாக இருந்தது. இன்று மருந்தே உணவாகிவிட்டது. அந்த வகையில் எங்கள் குடும்பத்தினர் சித்த வைத்தியர்கள். பெரியப்பெரிய வியாதிகளைக்கூட சர்வசாதாரணமாக குணப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். இதை எல்லோராலும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தோன்றியபடிப் பேசுவார்கள். எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. சிலவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நான் என்னுடைய வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் நம் வழியில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஒருநாள் கிண்டலாகப் பேசியவர்கள் கூட நம்மைப் புரிந்துகொள்வார்கள். இப்படி எங்கள் வாழ்க்கையில் நாங்கள் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

     எனது பெற்றோரின் முன்னோர்கள் அன்றைய பாரம்பரிய ஜாதி அமைப்பில் சேராத சித்த பாரம்பரியத்தை கடைப்பிடித்தாலும், அவர்களது நடைமுறைகள் வித்தியாசமாக இருந்தன.

     கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த என் அம்மாவின் பக்க உறவினர்கள் வணிகம் சார்ந்தவர்கள். அவர்களை ‘வெற்றிகரமான குடும்பம்’ என்று எல்லோரும் சொல்வார்கள். என் தந்தையின் பக்கத்திலிருந்து வந்த குடும்பங்கள் மனித குலத்திற்கு சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பணக்காரர்கள் இல்லை. சாதாரண நடுத்தரக் குடும்பத்தினர்களாகவே இருந்தார்கள்.

     என் தாய்வழிப் பாட்டி இதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றபோது, ​​என் தந்தை அதைப் புறக்கணித்தார். அவர் அதற்காக எரிச்சலடையவில்லை. அவர் மனதளவில் புண்படவும் இல்லை. அவர் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. அவர் அவருடைய வேலையை எப்போதும் போல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

     நாங்கள் பெங்களூருக்குச் சென்றபோது, ​​ஏழு வீடுகளுக்கு நடுவில் இருந்த ஒரு நல்ல வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். அங்கு வசிப்பவர்கள் எங்கள் சமையல் முறையை ‘கஞ்சி வெள்ளம்’ என்று கிண்டல் செய்வதைக் கேட்டிருக்கிறேன். யார் என்ன சொன்னால் என்ன? நாங்கள் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.

     இது இங்கிலாந்தில் இத்தாலியர்களை ‘ஸ்பாகட்டி சாப்பிடுபவர்’ (Spaghetti-Fresser – discriminative German word for Italians, Schlitzauge – Slit eyes for Chinese, and Kartoffel for Germans 😉  ) என்று அழைப்பது போன்றது. நாங்கள் அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

     கஞ்சி வெள்ளம் என்பது ஒரு சுவையான ஊட்டச்சத்து மிக்க பானம். அரிசி, பருப்புகள், வெள்ளை அல்லது பச்சை பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து மலையாளிகள் சமைக்கும் மிகவும் ஊட்டமளிக்கும் உணவு தான் கஞ்சி வெள்ளம்.

     என் அம்மாவுக்கு அந்த ஊர் மக்கள் கஞ்சி வெள்ளம் என்று கேலியாகப் பேசினால்  எரிச்சலும் , கோபமுமாக வரும். ஆனால் அப்பா அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்.

     சில மாதங்களுக்குள் அப்பா அந்த ஊரில் பிரபலமாகி விட்டார். அவர் அன்றாட வாழ்க்கைக்கான பல தீர்வுகளை அறிந்து வைத்திருந்தார். வயிற்றுக்கோளாறு , தளர்வான இயக்கங்கள், மயக்கம் மற்றும் பசியிழப்பு அல்லது பசியின்மைக்கு எதிரான பல சமையல் குறிப்புகளை என் பெற்றோர், அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தனர். கருவேப்பிலை, கடுகு, மிளகு, மஞ்சள், உப்பு, கொத்தமல்லி, இஞ்சி போன்ற மூலிகை மசாலாப் பொருட்களுடன் என் அம்மா சமைக்கும் ரசம் சாதம், ஒரு சுவையான மந்திர பானமாக மாறியது, இது காய்ச்சல், தலைவலி, சோர்வு உணர்வு, மனச்சோர்வு போன்ற பொதுவான நோய்களைக் குணப்படுத்தியது.

     சுலபமான முறையில் பலரது பிரச்சனைகளை தீர்த்துக்கொடுத்தக் காரணத்தினால் அந்த ஊரில் சில மாதங்களிலேயே நல்ல மரியாதை கிடைத்தது.

America, Cassava, Edible, Food, Manioc

     என்னுடைய அப்பா, தனது சொந்த ஊருக்குப் போய்விட்டு வந்த போது, அங்கிருந்து சில பச்சை குச்சிகளை கொண்டு வந்திருந்தார். அப்பாவை புரிந்துகொண்ட காரணத்தினால்  எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் அதைப் பற்றி எந்த அபிப்ராயமும் சொல்லவில்லை. அவற்றை எப்படி நட வேண்டும் என்பதை அவர் எனக்குக் காட்டினார், சில மாதங்களுக்குப் பிறகு, குச்சிகளுக்குக் கீழே வளர்ந்த அனைத்து கிழங்குகளையும் அண்டை வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்து, “இது மரவள்ளிக்கிழங்கு (cassava) என்று சொன்னார்.  இந்தக் கிழங்குகளை பச்சையாக உண்ணும் போது சுவையாக இருக்கும். மருந்தாகவும் செயல்படும். சமைத்தால் நன்றாக சமைக்க வேண்டும். நன்றாக சமைக்கப்படாவிட்டால் விஷமாகவும் மாறிவிடும் என்று கூறினார்.

 

      கஞ்சி வெள்ளம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்ட எங்கள் கன்னடவாசிகள் இந்த ருசியை விரும்பத் தொடங்கினர். அவர்கள் தனியாக இருக்கும் போது அப்பாவை ‘கஞ்சி வெள்ளம் மாமா’ என்றும் அழைத்தனர்.

     நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லாமே மாற்றங்களுக்கு உட்பட்டது தான். அதனால் மற்றவர்கள் நம்மைப்பற்றிப் பேசுவதற்கெல்லாம்நாம் முக்கியத்துவம் கொடுத்து சோர்ந்து போகக் கூடாது. புறக்கணிக்க வேண்டிய விஷயங்களைப் புறக்கணித்து நம் பாதையில் நாம் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். நம் பயணம் சரியான பாதையில் இருந்தால் ஒரு நாள் தூற்றிய வாயும் போற்றும். நம்முடைய மனப்பான்மை தான் நம்மை உருவாக்குகிறது. அதனால் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம்.